Header Ads



UNP யின் தலைமைக்கு, நான் தகுதியானவன் - 26 ஆண்டுகள் ஒரே தலைவர் இருக்க முடியாது - நவீன்

கடந்த 26 ஆண்டுகளாக ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து வரும் தலைமைத்துவத்தில் மாற்றம் ஏற்பட வேண்டும் எனவும் அந்த தலைமைத்துவத்தை ஏற்பதற்கு தேவையான தகுதி தன்னிடம் இருப்பதாக அந்த கட்சியின் நுவரெலியா மாவட்ட வேட்பாளரும் முன்னாள் அமைச்சருமான நவீன் திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

ஹட்டன் திம்புல பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற 2020 ஆம் ஆண்டு பொதுத் தேர்தல் தொடர்பான ஐக்கிய தேசியக் கட்சியினரின் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

நான் நேரடியாக பேசும் நேரடியாக வேலைகளை செய்யும் அரசியல்வாதி. ஐக்கிய தேசியக் கட்சியில் நான் உயர் மட்டத்தில் இருக்கின்றேன் என நினைக்கின்றேன். எனக்கு கட்சியின் தலைவராக முடியும் என எண்ணுகிறேன்.

நான் கட்சியின் தலைவராக தெரிவாகி நாட்டின் உயர் பதவிகளுக்கு செல்வேன். ஜனாதிபதி, பிரதமர் பதவிகளுக்கு செல்வேன். அப்படி சென்றாலும் நான் 20 ஆண்டுகள் அரசியலில் இருக்கும் நுவரெலியா மாவட்ட மக்களுக்கே முதலில் வேலை செய்வேன்.

ஐக்கிய தேசியக் கட்சியில் நான் இரண்டாவது அல்லது மூன்றாவது இடத்தில் இருக்கின்றேன். முதலாவது இடத்திற்கு செல்ல சிறிய உந்துதலை கொடுக்க நான் இளம் தலைவர்களை கட்சிக்குள் கொண்டு வந்துள்ளேன்.

அவர்கள் கட்சியை முன்னெடுத்துச் செல்வார்கள். நுவரெலியாவில் பல இளம் தலைவர்களை நான் உருவாக்கியுள்ளேன். ஐக்கிய தேசியக் கட்சி என்பது நாட்டில் உள்ள மிகவும் பழமையான கட்சி. அந்த கட்சி மிகப் பெரிய தலைவர்களை உருவாக்கியுள்ளது.

இந்த நாட்டுக்கு ஐக்கிய தேசியக் கட்சி சேவைகளை செய்துள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியில் ஓரளவு பிளவு ஏற்பட்டுள்ளது. இதனை அனைவரும் அறிவார்கள். போரை முடிவுக்கு கொண்டு வருவதற்காகவே நான் மகிந்த ராஜபக்சவுடன் மூன்றாண்டுகள் இணைந்திருந்தேன். இதனையடுத்து ஐக்கிய தேசியக் கட்சிக்கு திரும்பி வந்து தொடர்ந்தும் கட்சியில் இருக்கின்றேன்.

ஐக்கிய தேசியக் கட்சியை எவராலும் அழிக்க முடியாது. இது உயிர்ப்புடன் இருக்கும் கட்சி. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கைச்சின்னம், நாற்காலியாகவும் வெற்றிலையாகும்,தற்போது தாமரை மொட்டாகவும் மாறியுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியின் சின்னம் அப்படியல்ல தொடர்ந்தும் யானைச் சின்னமே இருந்து வருகிறது.

யானைச் சின்னத்தில் இருந்து தொலைபேசிக்கு சென்றால், யானை முடிந்து விடும். அதற்கு இடமளிக்க முடியாது. கட்சியை எவராலும் அழிக்க முடியாது.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையிலும் மாற்றம் தேவை. ஒருவர் 26 ஆண்டுகள் கட்சியின் தலைவராக இருக்க முடியாது எனவும் நவீன் திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

2 comments:

  1. இன்னும் 15 நாட்களுக்கு தலைமை கனவு காணுங்கள்.அங்கு ரவியும் கனவு காண்கிறார்.தேர்தலின் பின் யானையின் தலைமை ஸஜித்திடம்.அப்போது நீங்களெல்லாம் இருக்க மாட்டீர்கள்.

    ReplyDelete
  2. ஒரு அறிவாளியின் மகன் அறிவாளியாகத்தான் இருக்க வேண்டும் என்பது நிபந்தனை இல்லை என்பதை காமினி திசாநாயக்காவின் மகன் நிரூபித்துள்ளார்.
    ஐ.தே.க. என்பது மேற்குலகினதும் இலங்கையின் மேட்டுக்குடியினரதும் அஜந்தாவுக்கு ஏற்ப செயற்படுவதால் மக்களால் தொடர்ந்தும் ஓரங்கட்டப்பட்டு வருகின்றது.
    இம்முறை தேர்தல் ஊடாக அதற்கு சாவுமணி அடிக்கப்படுவது உறுதியாக தெரிகிறது.்

    ReplyDelete

Powered by Blogger.