Header Ads



மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை - பாதுகாப்பு செயலாளர்

(ஆர்.யசி)

நாட்டில் பயங்கரவாதிகளின் ஆயுதம் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவந்தாலும் கூட பிரிவினைவாதத்தை முடிவுக்கு கொண்டுவர முடியாது போய்விட்டது. இந்த பிரிவினைவாதம் மீண்டும் பயங்கரவாதமாக தலைதூக்க முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றது எனவும் அவ்வாறன அடிப்படைவாதிகளின் முயற்சிகளை ஆரம்பத்திலேயே இல்லது செய்வோம் எனவும்  பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன கூறுகின்றார்.

கொக்காவில் போரின் 30 ஆவது ஆண்டு நினைவஞ்சலி நிகழ்வு பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன தலைமையில் கொழும்பில் இடம்பெற்றது. இதன் போதே பாதுகாப்பு செயலாளர் இதனைக் கூறினார்.  அவர் மேலும் கூறுகையில்,

நாட்டின் பாதுகாப்பு குறித்து பாரிய அச்சுறுத்தல் ஒன்று கடந்த காலத்தில் எழுந்தது, அவ்வாறான நேரத்தில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக் ஷ ஜனாதிபதியாக தெரிவு  செய்யப்பட்டர்.

அவர் ஜனாதிபதியான பின்னர் என்னை பாதுகாப்பு செயலாளராக நியமித்தார். அதாவது நாட்டின் பாதுகாப்பு குறித்த மிக முக்கிய பொறுப்பை அவர் என்னிடம் ஒப்படைத்தார். தேசிய பாதுகாப்பு என்பது பயங்கரவாதிகளிடம் இருந்து நாட்டினை பாதுகாப்பதோ அல்லது வேறு நாடுகளிடம் இருந்து ஏற்படும் நெருக்கடிகளை கையாள்வது மட்டுமல்ல.

இந்த நாட்டில் ஏதேனும் அனர்த்தங்கள் ஏற்படும் வேலைகளிலும், கொவிட் -19 போன்ற நோய் தாக்கங்களில் மக்கள் மரணிக்க நேரும் சந்தர்ப்பங்களில் அவ்வாறான நெருக்கடிகளில் இருந்து மக்களையும் நாட்டினையும் பாதுகாப்பதும் தேசிய பாதுகாப்பு கடமைகளில் பிரதானமான ஒன்றாகும். அதனையே இன்று நாம் முன்னெடுத்து வருகின்றோம்.

கடந்த காலத்தில் எமது இராணுவத்திற்கு உறங்கக் கூட நேரம் இருக்கவில்லை. எமது மக்களை பாதுகாக்க வேண்டிய தூக்கமின்றி அவர்கள் கடமை புரிந்தனர். அந்த செயற்பாடே எமது வெற்றிக்கு சாதகமாக அமைந்தது.

ஆகவே  மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை. ஆனால் எமது நாட்டினை மீட்டெடுக்க வேண்டும் என்றால் எமது கடமைகளை நாம் சரியாக நிறைவேற்றிக்கொள்ள வேண்டும். எமது கடமை பொறுப்புக்களை நாம் சரியான நிறைவேற்றினால் எமது எதிர்கால சந்ததியினர் ஆரோக்கியமாக வாழ்வார்கள்.

இந்த நாட்டில் முப்பது ஆண்டுகால யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்த பெருமை எமக்கு உள்ளது. விடுதலைப்புலிகளுடன் நாம் முன்னெடுத்த ஆயுத போராட்டடம் கடந்த 2009 ஆம் ஆண்டு மே மாதம் 19 ஆம்திகதி காலை 10.30 மணியுடன் நந்திக்கடல் எல்லையுடன் முழுமையாக முடிவுக்கு கொண்டுவந்துவிட்டோம்.

பயங்கரவாத ஆயுதம் போராட்டத்தை முடிவுக்குக்கொண்டுவந்தாலும் கூட பிரிவினைவாதத்தை முடிவுக்கு கொண்டுவர முடியாது போய்விட்டது. இந்த பிரிவினைவாதம் மீண்டும் பயங்கரவாதமாக மாறும் முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றது. எனவே பொறுப்புள்ள இராணுவம் என்ற விதத்தில் இந்த நட்டு மக்களை மீண்டும் அழிவுக்கு கொண்டு செல்லும் பயங்கரவாதத்தை தலைதூக்க முயற்சிக்கும் நடவடிக்கைகளை ஆரம்பத்திலேயே தடுக்கும்  நடவடிக்கையை நாம் முன்னெடுப்போம்.

இலங்கையில் சகல மக்களும் அமைதியாக வாழ வேண்டும். ஆனால் இலங்கையில் கடந்த காலங்களில் அடிப்படைவாத சக்திகளின் ஆதிக்கம் அதிகரிக்க ஆரம்பித்து விட்டது.

இந்த உலகத்தின் பழமையான மதம் ஒன்றினை தவறாக கருத்துரு கொடுத்து அடிப்படைவாதிகள் சிலர் இந்த நாட்டில் உருவாக்கி எமது மக்களை பலிகொடுக்க நினைக்கின்றனர் என்றால் அதற்கு எதிராக செயற்படுவதும் எமது கடமையாகும். யுத்தத்தில் 28 ஆயிரம் வீரர்களை இழந்து மீட்டெடுத்த எமது நாட்டினை மீண்டும் நாசமாக்க இடமளிக்க மாட்டோம் என்றார். 

No comments

Powered by Blogger.