Header Ads



நமது கண்களை நாமே குத்திக்கொள்ளக் கூடாது, குழிபறிப்புக்கள் குறித்து விழிப்படையுங்கள் - ரிஷாட்

- ஊடகப்பிரிவு -

இருப்பு, ஒற்றுமை தொடர்பில் வாய்கிழியப் பேசிக்கொண்டிருப்போர், கல்குடாவின் சமூகப் பிரதிநிதித்துவத்தை எப்படியாவது இல்லாமலாக்கிவிட வேண்டுமென்ற திட்டத்துடன் செயற்படுவதாக மக்கள் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

மக்கள் காங்கிரஸ் தவிசாளரும் ஐக்கிய மக்கள் சக்தியின், மட்டக்களப்பு மாவட்ட முதன்மை வேட்பாளருமான அமீர் அலியை ஆதரித்து, நேற்று மாலை (29) ஓட்டமாவடியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய அவர் மேலும் கூறியதாவது,

"கல்குடாவின் பிரதிநிதித்துவத்தை எந்த வகையிலாவது இல்லாமல் செய்ய வேண்டுமென்று கடந்த காலங்களிலும் சூழ்ச்சிகள் இடம்பெற்றிருக்கின்றன. இம்முறையும் அது, புதிய பாணியில் அரங்கேற்றப்பட்டுள்ளது. சமூக ஒற்றுமை பற்றி சிலர் என்னதான் கூறினாலும் அவர்கள் உள்ளொன்று வைத்து, புறமொன்று பேசி வருகின்றனர். இவர்களின் இந்த நடவடிக்கைகளை கல்குடா மக்களாகிய நீங்கள் அறிந்துகொள்ள வேண்டும். அவர்களின் ஆசை வார்த்தைகளில் மயங்கி, போலி வாக்குறுதிகளில் அகப்பட்டு, நமது கண்களை நாமே குத்திக்கொள்ளக் கூடாது. கல்குடாவில் இடம்பெறும் இந்தக் குழிபறிப்புக்கள் குறித்து, நீங்கள் விழிப்படையுங்கள்.

முன்னொரு கட்டத்திலே தேர்தலில் அமீர் அலி தோல்வியுற்றார் . அதன்மூலம் கல்குடா பிராந்தியத்தில் அரசியல் வெறுமை ஏற்பட்டது. நீங்கள் பல துன்பங்களை அனுபவித்திருக்கின்றீர்கள். அபிவிருத்தி, உரிமை சார்ந்த விடயங்கள் வறிதாகின.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் உருவாக்கத்தில் தவிசாளர் அமீர் அலி முழுமூச்சாக உழைத்தவர். அதன் வளர்ச்சிக்கு பாரிய பங்களிப்பு நல்கியவர். கட்சியின் கொள்கைகளை என்னுடன் இணைந்து, நாடுமுழுக்க கொண்டு சென்று, பல பிரதேசங்களில் கட்சியை வேரூன்றச் செய்தவர். அதுமாத்திரமின்றி, சமூகப் பிரச்சினைகள், சமூகத்துக்கு எதிராக இழைக்கப்பட்ட அநீதிகள் மற்றும் கலவரங்களின் போதெல்லாம் என்னுடன் தோளோடு தோள் நின்று, அதற்கு எதிராக குரல் கொடுத்ததுடன், பாதிக்கப்பட மக்களுக்கும் உதவியவர்.

கட்சியின் தவிசாளர் அமீர் அலி மும்மொழிகளிலும் பேசும் ஆற்றலை கொண்டவராக இருப்பதால், பாராளுமன்றத்திலும் அதற்கு வெளியிலும் சமூகத்துக்கான ஜனநாயகப் போராட்டத்தில் சளைக்காது ஈடுபட்டவர்.

பேரினவாதிகள் சிறுபான்மையினரின் வாக்குகளை சூறையாட மேற்கொள்ளப்படும் முயற்சி கல்குடாவில் நடைபெற்றுவரும் அதேவேளை, ஒற்றுமை பற்றி பேசும் இன்னொரு கட்சியினர், மட்டக்களப்பில் அமீர் அலியை எவ்வாறாவது தோற்கடிப்பதற்கான தந்திர அரசியலை முன்னெடுத்து வருகின்றனர். இதற்கு நீங்கள் இரையாகி விடக்கூடாது.

அமீர் அலி வெறுமனே மாவட்டத்துக்கு மட்டுமான குரல் அல்ல. தேசியப் பிரச்சினைகளிலும் சமூகப் பிரச்சினைகளிலும் தந்து உயிரைக்கூட துச்சமாக மதித்து, களத்தில் நின்று பணியாற்றியவர். இனவாதத்தையும் மதவாதத்தையும் பிரதேசவாதத்தையும் கக்கி அரசியல் செய்யும் கலாசாரம், இந்த மாவட்டத்தில் கடந்த காலங்களில் ஓங்கி இருந்தது. எனினும், ஓட்டமாவடி, காத்தான்குடி, ஏறாவூர் என்ற பிரதேசவாத தடுப்புக்களை அமீர் அலி உடைத்தெறிந்து சாதனை படைத்துள்ளார். காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ்வையும், ஏறாவூர் சுபைரையும் தேர்தல் ஒன்றின்போது இந்தப் பிரதேசத்துக்கு கொண்டு வந்து, அவர்களுக்கு விருப்பு வாக்கு வழங்க வித்திட்டவர்.  அதனை செயலிலும் காட்டியவர்.

அதுமாத்திரமின்றி, சமூக ஒற்றுமையை அவர் பெரிதும் மதித்தார். இன, மத நல்லிணக்கத்துக்கு பாடுபட்டது மாத்திரமின்றி, தமிழ் சமூகத்தை அரவணைத்து, எந்த எதிர்பார்ப்புமின்றி அவர் ஆற்றிய பணிகள் காலத்தால் அழிக்க முடியாதவை.

எனவே, எதிர்கால சவால்களுக்கு முகங்கொடுக்கும் வல்லமையுள்ள அமீர் அலியை வெல்லச் செய்வதற்கு, கல்குடா மக்கள் ஒற்றுமையுடன் வாக்களிக்க வேண்டும்" என்றார்.

இந்தக் கூட்டத்தில், ஐக்கிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளர்களான அப்துர் ரஹ்மான், அப்துல் லதீப் ஆகியோர் உட்பட கட்சியின் முக்கியஸ்தர்களும் பங்கேற்றிருந்தனர்.

1 comment:

  1. UNNUDAYA KANNUKKU, ORU THADAVAI
    KUTHI POTHAATHU.
    INVAATHATHAI VALARTHAVAN NEE.
    UN ABU THALIB ENGEY???

    ReplyDelete

Powered by Blogger.