Header Ads



ராஜபக்‌ஷக்களைத் தோற்கடிக்க முடியாது - அதாஉல்லா

நல்லாட்சி அரசாங்கத்தில் ஆறடி நிலத்தில் கூட அபிவிருத்தி செய்யாத முஸ்லிம் தலைமைகள் இன்று ஆகாயத்தில் கோட்டை கட்டப் போவதாக, உரிமை அரசியல் பேசுவது இந்த ஆண்டின் அதிசிறந்த நகைச்சுவையாகப் பதியப்படுமென,தேசிய காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமமான ஏ,எல்.எம் அதாஉல்லா தெரிவித்தார்.சமகால அரசியல் குறித்து கொழும்பில் ஊடகவியலாளர்களுக்கு விளக்கமளித்த அவர் மேலும் தெரிவித்ததாவது;

பெருந்தலைவர் அஷ்ரஃபின் அரசியல் வழிகாட்டல்களைப் புறந்தள்ளி அரசியல் செய்த சில தலைமைகள் இன்று இரண்டுங்கெட்டான் நிலைக்குள் மாட்டியுள்ளன.சமூகத்தின் உண்மையான எதிர்பார்ப்புக்களை  உணர்ச்சிவசப்படுத்தி மழுங்கடித்த இத்தலைமைகள், கடந்த நல்லாட்சி அரசில் எதையும் செய்யவில்லை. ஆட்சியின்  பங்குதாரர்களென மார்பு தட்டித்திரிந்த சிலரால் முஸ்லிம் பிரதேசங்களில் ஆறடி நிலத்தைக் கூட அபிவிருத்தி செய்ய முடியாமல்போனது. திறைசேரிக் கொள்ளையர்களைக் காப்பாற்றி எமது நாட்டின் சொத்துக்களைச் சூறையாடுவதற்கே இவர்கள் துணை போயுள்ளனர்.

அடிப்படைவாதம், பயங்கரவாதம்,பிரிவினைவாதங்களுக்கு எதிராகச் செயற்பட்டு தேசப்பற்றை  வெளிப்படுத்தி வந்த முஸ்லிம்களை, சகோதர சமூகங்கள் சந்தேகக் கண்ணுடன் நோக்கும் நிலைமையை கடந்த நல்லாட்சி அரசே ஏற்படுத்தியது.எம்மக்களுக்கு இன்று தேவைப்படுவது உணர்ச்சிவசப்படுத்தும் வாக்குறுதிகளல்ல.

மக்களை நிம்மதியாக வாழவைக்கும் தேவைகளே எமது தலைகளில் சுமத்தப்பட்டுள்ளது. இத்தேவைகள், உரிமைகளை வென்றெடுப்பதற்கு பலமான அரசாங்கம் அவசியம்.ரணில்,சஜித் என இன்று ஐக்கிய தேசிய கட்சி பிளவுபட்டுள்ள லட்சணத்தில், இவர்களால் பலமான அரசாங்கமல்ல, பலமான எதிர்க்கட்சியாகவும் வர முடியாது. எனவே முஸ்லிம் சமூகம் உணர்ச்சி அரசியலிலிருந்து அவசரமாக விடுபட வேண்டும். உணர்ச்சி வசப்பட்டதால் சிறுபான்மைச் சமூகங்கள் அபிவிருத்தி உள்ளிட்ட உரிமைகளை வெல்வதிலிருந்து தூரமாக்கப்பட்ட வரலாறுகளே அதிகம்.

தென்னிலங்கையில் ஆழமாகக் காலூன்றி வரும் சிங்களத் தலைமைக்கு நிகராக இன்னுமொரு தலைமை உருவாகும் வரை ராஜபக்‌ஷக்களைத் தோற்கடிக்க முடியாது.

எனவே தென்னிலங்கைச் சமூகங்களுடன் இயைந்து செல்லும் அரசியல் தலைமை பற்றியே முஸ்லிம்கள் சிந்திக்க வேண்டும். இதைவிடுத்து தொடர்ந்தும் பெரும்பான்மை சமூகங்களின் சந்தேகங்களுக்குள்ளாகும் அரசியல் சூழலை ஏற்படுத்துவது ஆபத்தாகவே அமையுமென்றும் அவர் குறிப்பிட்டார்.

(ராஜகிரிய குறூப் நிருபர்)

2 comments:

  1. ஆனால் இம்முறையும் நீங்கள் வெற்றி பெற முடியாது

    ReplyDelete

Powered by Blogger.