Header Ads



இறுதி மணித்தியாலங்கள் - மஹிந்தவுடன் நகைச்சுவையாக பேசிய ஆறுமுகம் - வீட்டுக்கு சாப்பாட்டுக்கும் அழைத்தார்


நேற்று -26- மாலை திடீர் மரணத்தை எய்திய அமைச்சர் ஆறுமுகம் தொண்டமான் நேற்று பிற்பகல் முக்கிய சந்திப்புகளில் கொழும்பில் கலந்து கொண்டிருந்தார்.

அமைச்சரவை கூட்டம் இன்று -27- நடக்கவுள்ளதால் நேற்றைய தினம் கொழும்பு வந்திருந்த தொண்டமான் இலங்கைக்கான புதிய இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேவை சந்தித்திருந்தார்.

முன்னாள் மாகாண அமைச்சர் செந்தில் தொண்டமான் , முன்னாள் மாகாண அமைச்சர் மருதபாண்டி ராமேஸ்வரன் மற்றும் இ.தொ.கா வின் இளைஞர் அணி பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான் உள்ளிட்டோர் இதில் கலந்துகொண்டனர்.

புதிய தூதுவருக்கு பொன்னாடை போர்த்தி வாழ்த்தினார் ஆறுமுகம்.இதன் போது இந்திய அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட 10000 வீடமைப்பு திட்டம் தொடர்பாக ஆரம்பக்கட்ட பேச்சுவார்த்தை இடம்பெற்றது.

மற்றும் முன்னைய வீடமைப்பு திட்டத்தில் குடிநீர், மின்சாரம் போன்ற உட்கட்டமைப்பு விடயங்களில் காணப்பட்ட குறைபாடுகளை எதிர்வரும் காலங்களில் எவ்வாறு நிவர்த்தி செய்வது தொடர்பாகவும் விரிவாக கலந்துரையாடப்பட்டது.

பிரதமருடன் சந்திப்பு !

அதன் பின்னர் பிரதமர் மஹிந்த ராஜபக்சவை சந்தித்த தொண்டமான் இன்று நடைபெறும் அமைச்சரவை கூட்டத்தில் தோட்டத் தொழிலாளர்களின் ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பு குறித்து ஒரு தீர்மானத்திற்கு வர வேண்டுமெனவும் பிரதமர் அதனை கவனத்திற் கொள்ளவேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளார்.

அதேபோல மலையக இளைஞர் யுவதிகள் பலர் மத்திய கிழக்கு நாடுகளில் சிக்கியுள்ளனர்.அவர்களை இலங்கைக்கு அழைத்து வர வெளிநாட்டமைச்சர் தினேஷ் குணவர்தனவுடன் தாம் பேசவுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

பின்னர் பிரதமருடன் மனம் விட்டு வழமைக்கு மாறாக நகைச்சுவையுடன் உரையாடினாராம் தொண்டா..

“வழமையாக வந்தவுடன் அலுவல் முடிந்த கையோடு ஓடிவிடுவார்… ஆனால் நேற்று கொஞ்சம் இருந்து ஆறுதலாக பேசினார் தொண்டா…” என்று நேற்றிரவு “தமிழன்” ஆசிரியரிடம் அந்த இறுதிக் கணங்களை பகிர்ந்து கொண்டார் கொண்டார் பிரதமர்..

“ நான் 29 ஆம் திகதி நுவரெலியா வருகிறேன்… நீங்கள் அங்கு இருப்பீர்களா ? என்று நான் கேட்டேன்.. “ ஆமாம் அங்குதான் இருப்பேன்.. அன்றைய தினம் மதிய உணவை எங்களது இல்லத்தில் எடுங்கள் என்றார். நானும் சரி என்றேன். அவர் சென்ற பின்னர் சில மணி நேரத்தில் இப்படி நடந்ததை நினைத்தும் பார்க்க முடியவில்லை..” என்று உருக்கமாக சொன்னார் மஹிந்த..

“ என்ன சொன்னாலும் தொண்டா கொஞ்சம் வித்தியாசமான அரசியல்வாதி.. மக்களின் பிரச்சினை என்றால் விடாமல் எங்களை தொடர்ந்து வலியுறுத்திக் கொண்டே இருப்பார்.. இறுதியாக கூட மக்களின் பிரச்சினை பற்றித்தான் பேசினார்.. என் மீது மிகுந்த மரியாதையை வைத்திருந்தார்.. நானும் அவருக்கு அரசியலுக்கு அப்பால் தனிப்பட்ட குடும்ப நண்பராக இருந்துள்ளேன்.. என்னுடன் பேசிவிட்டு வீடு சென்றபோது தனது மகளுடன் பேசும்போது கூட என்னை சந்தித்துவிட்டு வந்ததை கூறியுள்ளார். அவரின் புதல்வியார் இதனை என்னுடன் பேசும்போது சொன்னார். ஒரு மக்கள் கூட்டத்தின் தலைவரின் திடீர் இழப்பு என்பது அவர்களுக்கு ஒரு பாதிப்பே. இருந்தாலும் அவர் என்ன கேட்டாரோ அதனை அரசு செய்யும்..” என்றும் குறிப்பிட்டார் பிரதமர்.

Sivarajah Ramasamy 

No comments

Powered by Blogger.