Header Ads



கொரோனா தொற்றுடைய தப்லிக் ஜமாத் உறுப்பினர், போலீஸ் மீது எச்சில் துப்பினாரா? (போலி வீடியோ அம்பலம்)

கொரோனா வைரஸ் தொற்று உடைய தப்லிகி ஜமாத்தை சேர்ந்த ஒருவர் போலீஸ் மீது எச்சில் துப்பினாரா?

மார்ச் மாதத்தில் டெல்லியில் தப்லிகி ஜமாத் அமைப்பின் சார்பில் நடைபெற்ற மத நிகழ்வில் கலந்து கொண்டவர்களுக்கு கோவிட் -19 வைரஸ் தொற்று ஏற்பட்ட பின்னர் நாட்டில் மொத்த கொரோனா வைரஸ் நோயாளிகளின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்தது.

இந்த தொற்று காரணமாக இறந்த 56 பேரில், 15 பேர் தப்லிகி ஜமாத்துடன் இணைந்தவர்கள். கோவிட் -19 வைரஸால் பாதிக்கப்பட்ட மொத்தம் 2000 பேருடன் 400 பேர் தப்லிகி ஜமாத்துடன் தொடர்புடையவர்கள்.

ஆனால் இந்த விவகாரம் வெளிவந்த பிறகு, சமூக ஊடகங்களில் மேலும் பல கருத்துகள் வெளியாகின்றன.

அண்மையில் வைரலாகும் ஒரு வீடியோவில் தப்லிகி ஜமாத்தை சேர்ந்த கொரோனா பாதிக்கப்பட்ட ஒருவர் காவல்துறையினர் மீது எச்சில் துப்புகிறார். இதனால் காவல்துறையினருக்கும் தொற்று பரவவேண்டும் என்பது தான் அவர்களின் நோக்கம் என்று கூறப்படுகிறது. 

வியாழக்கிழமை மாலை, ட்விட்டரில் இந்த 27 விநாடி வீடியோவை ட்வீட் செய்த ஒருவர், "யாருக்கு ஆதாரம் தேவை, இதைப் பாருங்கள்" என்று எழுதியிருந்தார்.

இந்த வீடியோவை 81 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பார்த்துள்ளனர், சுமார் 4 ஆயிரம் பேர் அதை ரீட்வீட் செய்து பகிர்ந்துள்ளனர். இருந்தாலும், இந்த ட்வீட்டர் செய்திகள் தற்போது நீக்கப்பட்டுவிட்டது.

அதே நேரத்தில், இந்த வீடியோவை மேத்ராஜ் செளத்ரி என்ற பயனர் பேஸ்புக்கில் பகிர்ந்துள்ளார். தற்போது சுமார் இரண்டு லட்சம் பேர் இதனைப் பார்த்துள்ளார்கள்.

இந்த காணொளியில், ஒருவர் அமர்ந்திருக்கிறார். அவருக்கு முன்பும், அருகிலும் போலீஸார் அமர்ந்திருக்கின்றனர். தனக்கு எதிரே அமர்ந்திருக்கும் போலீஸ்காரர் மீது அவர் எச்சில் துப்புகிறார். இதன்பிறகு, அந்த போலீஸ்காரர்கள் எழுந்து அவரைக் அடிக்கத் தொடங்குகிறார்கள்.

பின்னணியில் நிறைய சத்தம் கேட்கிறது. வீடியோ இத்துடன் முடிந்துவிடுகிறது. இந்த வீடியோ நிஜாமுதீன் தப்லிகி ஜமாத்துடன் தொடர்புப்படுத்திப் பேசப்படுகிறது. 

தப்லிகி ஜமாத் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் பங்கேற்ற 167 பேர் துக்ளகாபாத்தில் உள்ள ரயில்வேயின் தனிமைப்படுத்தப்பட்ட மையத்தில் வைக்கப்பட்டுள்ளதாக பி.டி.ஐ மற்றும் ஏ.என்.ஐ செய்தி நிறுவனங்கள் புதன்கிழமையன்று தெரிவித்தன. தனிமையில் வைக்கப்பட்டுள்ள இவர்கள், மருத்துவர்கள், சுகாதார ஊழியர்கள் எனப் பலருடன் தவறாக நடந்துகொள்வதோடு, அவர்கள் மீது எச்சில் துப்புகிறார்கள் என்ற செய்தியும் இந்த வைரல் காணொளியுடன் சேர்ந்து பகிரப்படுகிறது. 

இந்த வீடியோவில் காணப்படும் சம்பவம் எப்போது நடந்தது என்பதையும், அந்த வீடியோவும் அதனுடன் கூறப்படும் விஷயங்களும் சரியானதா என்பதைக் கண்டறிய முயன்றோம்.

இந்த வீடியோ தொடர்பாக எங்களுக்கு எழுந்த முதல் சந்தேகம் என்னவென்றால், தப்லிகி ஜமாத் அமைப்பைச் சேர்ந்தவர்கள் டிடிசி பேருந்துகள் மூலம் மருத்துவமனைகளுக்குக் கொண்டு செல்லப்பட்டனர். ஆனால் காணொளியில் காணப்பட்ட வாகனம் போலீஸ் வேன் போல் தெரிகிறது.

காணொளியில் இருக்கும் நபரைச் சுற்றி போலீசார் இருக்கின்றனர். அவர் மருத்துவ பரிசோதனைக்கு அழைத்துச் செல்லப்படுகிறார் என்றால், அந்த வாகனத்தில் மருத்துவ ஊழியர்கள் ஏன் இல்லை?

இந்த வீடியோவின் கீ-ஃப்ரேம்களைப் பயன்படுத்தி தலைகீழ் தேடல் (Reverse image search) மேற்கொண்டபோது, டைம்ஸ் ஆப் இந்தியா இணையதளத்தில் ஒரு வீடியோவைக் கண்டறிந்தோம்.

2020 மார்ச் இரண்டாம் தேதியன்று வெளியிடப்பட்ட இந்த வீடியோவின் படி, "ஒரு கைதி அவருடன் வந்த போலீஸ்காரரைத் தாக்கியதோடு அவர் மீது எச்சிலும் துப்பினார்". உண்மையில், இந்த நபர் தனது குடும்பத்தினர் தனக்காகக் கொண்டு வந்த உணவை சாப்பிட அனுமதிக்காத காவல்துறையினர் மீது கோபமடைந்தார்.

இந்த வீடியோவை மேலும் ஆராய்ந்தபோது, மகாராஷ்டிரா டைம்ஸ் மற்றும் மும்பை மிரர் ஆகியவற்றிலும் இந்த வீடியோ இருப்பது தெரியவந்தது. 

மும்பை மிரர் இந்த காணொளியை 2020 பிப்ரவரி 29ஆம் தேதியன்று பகிர்ந்திருந்தது.

அந்த அறிக்கையின்படி, இந்த நபரின் பெயர் முகமது சுஹைல் செளகத் அலி. இந்த 26 வயது நபர் மும்பை நீதிமன்றத்தில் விசாரணைக்காக அழைத்து வரப்பட்டார். அங்கு வந்திருந்த அவரது குடும்பத்தினர் அவருக்காக வீட்டிலிருந்து உணவு சமைத்து எடுத்துக் கொண்டு வந்திருந்தனர். ஆனால், வீட்டில் சமைத்த உணவை சாப்பிட அவரை போலீசார் அனுமதிக்கவில்லை.

இதனால் கோபமடைந்த அவர் காவலர்களிடம் வாக்குவாதம் செய்தபோது, அவர்கள் மீது துப்பினார். அதன் பிறகு போலீசார் செளகத் அலியை அடித்தனர்.

உண்மையில் ஒரு நிமிடம் 25 வினாடிகள் கொண்ட இந்த வீடியோவில் செளகத் அலி என்ற நபர் காவல்துறையினருடன் வாக்குவாதம் செய்வதையும் அவர்களிடம் தவறாக நடந்து கொள்வதையும் பார்க்க முடிகிறது. 

ஆனால் இந்த வீடியோவின் 27 விநாடிகள் கொண்ட பகுதியை மட்டும் வெளியிட்டுள்ளார்கள். வீடியோவில் காணப்படும் நபர், தப்லிகி ஜாமதுடன் இணைந்தவர் என்றும் சொல்கின்ற்னர்.

பிபிசி மேற்கொண்ட இந்த வீடியோ ஆய்வில், இது டெல்லியில் எடுக்கப்பட்ட வீடியோ அல்ல, மும்பையில் எடுக்கப்பட்ட ஒரு பழைய வீடியோ என்பதும், இது ஜமாத் அல்லது கொரோனா வைரஸ் வழக்கு தொடர்பானது அல்ல என்பதும் தெளிவாகிறது. எனவே, இந்த 27 விநாடி வீடியோ தொடர்பாகப் பரப்பப்படும் தகவல்கள் முற்றிலும் தவறானது என்பதும் உறுதியாகிறது.

No comments

Powered by Blogger.