Header Ads



Curfew ஓர் இதயத்துக்கான சிறுகதை...!

20 ஆம் திகதி மதியம் 2.00 மணி, 

அந்த குடிசை வாசலில் ஆட்டோ வந்து நின்றது. 
"வாப்ப்பா...பா..." முகத்தில் பிரகாசத்துடன் அந்த 4 வயது பிஞ்சு வழமைபோல ஓடோடி வந்து காலை கட்டியணைத்துக்கொண்டது...

"'ஐமா'.. கொஞ்சம் இருடா தங்கம், வாப்பா கைய கழுவிட்டு வாறன்..." உள்ளே வந்தான் சஜித்....
"டொபீ... டொபீ..." என கையை நீட்டிக்கொண்டே பின்னல் ஓடியது குழந்தை...

வெய்யிலின் உஷ்ணம் உடலெல்லாம் வியர்த்திருந்தது... "'இனா' அந்த டவலை கொஞ்சம் தாங்களேன்..." 
" என்னப்பா இண்டைக்கு இவ்ளோ நேரத்தோட வந்துட்டீங்க...? இந்தப்பக்கம் ஏதும் ஹயர் வந்தீங்களா..?
டவலால் முகத்தை துடைத்துக்கொண்டே வந்தவனிடம் கேட்டாள் 'இனா'

"இல்ல, உங்களுக்கு இன்னும் விஷயம் தெரியாதா... 2.00 மணிமுதல் இண்டைக்கு curfew..."

"மறுபடியுமா...?"

" ம்.. இண்டைக்கு காலைல இருந்து ரெண்டே ரெண்டு ஹயர் தான்... அதுக்குள்ள curfew வேற.. 
அந்த Bag ல அரைக்கிலோ அரிசியும் 2 முட்டையும் இருக்கிது... வரும்போது வாங்கிட்டுதான் வந்தேன்... இண்டைக்கு சமாளிங்க..."

திரும்பி நின்று விம்மிக்கொண்டிருந்த 'ஐமா'வை அணைத்துக்கொண்டு, 
" மன்னிச்சிடுடா தங்கம்... இண்டைக்கு கொரோனா பூச்சியால எல்லா கடையும் பூட்டிட்டாங்க, கட்டாயம் நாளைக்கி இண்டைடைக்கும் சேர்த்து 2 டொபீ வாங்கிட்டு வருவேன் சரியா...? "

*

வறுமைக்கோட்டின் கீழ் வாழ்கின்ற அந்தக் குடும்பத்தில், 
சின்னச்சின்ன 'டொபீ'களில்தான் அன்றாடம் பெரிய பெரிய சந்தோசங்கள் சுவைக்கப்பட்டுக்கொண்டிருந்தன...
அந்த வகையில் அங்கே அது பெரிய இழப்புதான்...

curfew என்றதும்.. 
அவசரமாய் ஒரு கடைக்குள் புகுந்ததும்.... "அரிசிக்கும் முட்டைக்கும் 105 ரூவா.." என்றபோது 100 ரூபாவை நீட்டியதும்... 
அவன் "5 ரூபா பிறகு தாருங்கள்..." என சொன்னபோது, நன்றி சொல்லி வந்ததும்... 
அன்றைய தினம், அந்த தந்தை 'ஐமா' விடம் சொல்லமுடியாத குட்டிக்கதை...

*

"என்னப்பா இப்படி சொல்றாங்க...?" கையில் அந்த சிறிய ரேடியோ பெட்டியுடன் அவசரமாய் வந்தாள் 'இனா'.

"என்னவாம்...?" 

"இன்னும் 3 நாளைக்கு தொடர்ச்சியா curfew ஆம்..பா...!, 24 ஆம் திகதி காலைல 6 மணிக்குத்தான் நீக்குவாங்கலாம்...!"

"இன்னும் 3 நாளா..?!!" இயலாமை வலிக்க, இதயத்தின்மேல் ஏதோ ஒன்று பாரமாய் அமர்ந்துகொள்ள... 
அதற்குமேல் அவனால் பேச முடியவில்லை...!

அப்படியே.. நிலத்தில் அமர்ந்துகொண்டான்...
'வாப்பாக்கு ஏதோ பிரச்சினை' என்பதை விளங்கியும் விளங்காதவளுமாய் 'ஐமா' அருகிலே வந்தாள்...

"சரி இண்டைக்கு கன்னுகுட்டி ஒங்கள மன்னிச்சிட்டேன்.., ஆனா நாளைக்கி கட்டாயம் 2 வேணும்...  சரியா....!?
இந்தாங்க... இந்தப்பக்கம் 3 அbbபா, மத்த கன்னத்தை காட்டுங்க..." கசியும் கண்களை துடைத்துக்கொண்டவனாக... அந்த தேவதையை வாரி அணைத்துக்கொண்டான்...

அன்றைய இரவும், அதிகாலையும்... மெல்லக் கரைந்தன... !
தெருக்கள் வெறிச்சோடிக் கிடந்தன...

*

மறு நாள் மதியம்... 

" உங்களுக்குத்தான் call.. ஆட்டோ ஓனர் பேசுறாரு..." 
" hello.. சொல்லுங்க... வீட்லதான்... இல்ல.. சரி.. சரி..." பேசிவிட்டு வைத்தான்...

"என்னப்பா சொல்லுறாரு..."

"ஒண்ணுமில்ல சும்மா விசாரிச்சாரு... நேற்றைய ஆட்டோ வாடகை கேற்றுவாரோன்னு பயந்துட்டேன்.. மனுஷன் கேக்கல.."

"ம்..., வீட்டுல ஒன்னும் இல்லப்பா.. 'ஐமா' ரெண்டு தடவை பசி பசின்னு தேத்தண்ணி குடிச்சிட்டா.. இருந்த பிஸ்கத்தும் முடிஞ்சிது... இன்னும் கொஞ்சம் நேரம் போனா அழுவா..." 

"அசீசுக்கும், நந்தாக்கும் call பண்ணுனேன்... பாவம் அவனுகளுக்கும் கிட்டத்தட்ட நம்ம நெலம தான்... ஒன்னும் சரிவரல்ல...
 கடைசில போன்ல இருந்த காசி முடிஞ்சதுதான் மிச்சம்..."

" இன்னும் 2 நாள்... ரெண்ண்ண்ண்ண்டு நாள்... முழுசா ஈக்குது என்னப்பா செய்றது..?"

" டொக்.. டொக்.."  பேசிக்கொண்டிருக்கும் போதே கதவு தட்டும் சத்தம் கேட்டது... 
" யாரோ கதவு தட்டுறாங்க..பா " உள்ளத்தில் எதோ இனம்புரியா ஒரு சந்தோசத்தோடு ஓடிப்போய் கதவை திறந்தாள்...

அங்கே, சில மாதங்களுக்கு முன் தன் கணவனை இழந்த பக்கத்து வீட்டு 'மகா' நின்றிருந்தாள்...
" 'இனா..' ஒரு பாதி தேங்காய் எடுக்கேலுமா..?" 

ஏமாற்றத்தை அடக்கிக்கொண்டு... எதோ சொல்லி அவளை அனுப்பி வைத்துவிட்டு, 'இனா' லேசாய் கலங்கிய கண்களோடு திரும்பினாள்...
சஜித் பலமாக யோசித்துக்கொண்டிருந்தான்...

நீண்ட அழுகைச் சத்தத்தோடும்... கனத்த இதயங்களின் பெருமூச்சு வெப்பத்தோடும்...
அந்தகுடிசை இரவைக் கடந்தது...

*

விடிந்தும் விடியாத அதிகாலை 6 மணி... 
சஜித் வெளியில் போக தயாராகிக்கொண்டிருந்தான்...

" எங்கப்பா இந்த நேரத்துல பொறப்புடுறீங்க...? ராவெல்லாம் நீங்க படுக்ககூட இல்ல...! எங்க போறீங்க..?"

" வந்து சொல்றேன்..."

" ஊரடங்கு சட்டம்... பொலீஸ் புடிச்சா 14 நாள் ஜெயிலாம்பா...!! எங்க போறேன்னு சொல்லிட்டாவது போங்களேன்..."

அவளுக்கு பதிலளிக்காது வேகமாய் சென்றவன், கதவைத் திறந்ததும்... அப்படியே அசையாது நின்றான்... !
வீட்டு வாசலில் ஒரு சாக்கு மூட்டை...!!

பின்னால் வந்த 'இனா', ஆச்சர்யத்துடன் அதனைப் பிரித்துப் பார்த்தாள்...

அரிசி, மா, சீனி.... சுமார் இரண்டு வாரங்களுக்கான உணவால் அந்தப்பொதி நிறைந்திருந்தது... 
பெயரோ, யார் வைத்தது என்ற அடையாளம் கூட அதில் இல்லை... 

'யாராக இருக்கும்...?' யோசனையோடு திரும்பியவள் ஒரு கணம் அதிர்ந்துவிட்டாள்....

சஜித் உள்ளே.. தேம்பித் தேம்பி அழுதுகொண்டிருந்தான்... மடைதிறந்த வெள்ளம்போல்... சிறு பிள்ளைபோல்... 
இதுவரை அவனை அவள் இப்படிக்கண்டதில்லை... 

" அந்த விரிப்பை தாங்க, நான் ஒருக்கா தொழனும்..." சொன்ன அவனை மீண்டும் ஆச்சர்யமாகப் பார்த்தாள் 'இனா'...
திருமணம் முடித்த நாளில் இருந்து அவன் தொழுது அவள் கண்டதில்லை...

"என்ன...ப்பா... திடீ...ரென்று... ?" ஒன்றும் புரியாதவளாய் விரிப்பை நீட்டினாள்...

"இந்த உதவிய செஞ்ச அந்த மனுஷனுக்கு நான் துஆ செய்யணும்... " சொல்லிக்கொண்டே விம்மினான்...

"இன்னும் கொஞ்ச நேரம் போயிருந்தா உங்கட மாப்புள, தன்ட புள்ளைக்காக ஒரு கள்ளனா போயிருப்பான் 'இனா'..." 
கதறிக் கதறி மீண்டும் உடைந்து அழுதான்...

இதயம் கனத்தது... இப்போதுதான் அவளுக்கு எல்லாமே புரிந்தது.... 
தொழுதார்கள்... தாகம் தீர துஆச் செய்தார்கள்.... ஒரு உயிருள்ள பிரார்த்தனை அந்த கிராமத்தில் இருந்து உயர்ந்தது...

"ரெண்டு டொபீ... நல்ல்ல்ல  வாப்பா..." அந்த பார்சலில் இருந்த சில டொபிகளை எடுத்தவாறு, 
ஓடி வந்து கழுத்தை கட்டிக்கொண்டாள்  'ஐமா'...

"கொரோனா பூச்சியால கடையெல்லாம் பூட்டியாச்சிண்டு சொன்னீங்களே... இது யாரு தந்தது.... வாப்பா..?"

சஜித் சொன்னான் " அல்லாஹ் தந்தது மகள்....!!"

இவை எதையுமே கண்களால் காணாத நிலையில்..,
ஒரு தூரத்து மஸ்ஜிதில்...
தனது சதக்காவை ஏற்றுக்கொள்ளுமாறு சுஜுதில் மன்றாடிக்கொண்டிருந்தார் ஒரு மனிதர்...!!

---
புத்தளம் மரிக்கார் 
23-03-2020

1 comment:

  1. வாசிக்கும் போதே கண்ணில் நீர்த்துளிகள் !
    வாழ்க மனித நேயம்

    ReplyDelete

Powered by Blogger.