Header Ads



எதிர்க்கட்சி பொய் பிரசாரத்தை மேற்கொள்கிறது, இந்த பிரசாரத்தில் உண்மையில்லை - மகிந்த

இலங்கைக்கு எதிராக தடைகளை விதிக்கவோ, இலங்கையை சர்வதேச ரீதியில் தனிமைப்படுத்தவோ எந்த நாடும் நடவடிக்கை எடுக்காது எனவும் இலங்கையுடன் நட்புறவுடன் வேலை செய்ய பல வெளிநாடுகள் இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் பிரதமர் மகிந்தராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இலங்கை சர்வதேச ரீதியில் தனிமைப்படுத்தப்பட்டு வருவதாக எதிர்க்கட்சி பொய் பிரசாரத்தை மேற்கொண்டு வருகிறது. இந்த பிரசாரத்தில் உண்மையில்லை.

நாட்டுக்காகவே ஜெனிவா மனித உரிமை ஆணைக்குழுவில் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு இணை அனுசரணை வழங்கியதில் இருந்து இலங்கை விலகியது.

இணை அனுசரணை வழங்கியதில் இருந்து விலகியமை சம்பந்தமாக இலங்கைக்கு வேறு எந்த நாடும் எவ்வித அழுத்தங்களை கொடுக்க முடியாது.

ஒரு நாட்டின் மீது பொருளாதார தடையை மனித உரிமை ஆணைக்குழுவால் விதிக்க முடியாது. அதனை ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையால் மாத்திரமே செய்ய முடியும். இலங்கை இராணுவம் எந்த போர் குற்றங்களையும் செய்யவில்லை. இதனால், இலங்கைக்கு எதிராக எவ்வித போர் குற்றங்களையும் சுமத்த முடியாது.

விடுதலைப் புலிகளிடம் இருந்து சாதாரண தமிழ் மக்களை மீட்கும் மனிதாபிமான நடவடிக்கையே மேற்கொள்ளப்பட்டது. அதில் ஏதேனும் குற்றச்சாட்டு சுமத்தப்படுமாயின் நாட்டில் அமுலில் உள்ள சட்டத்தின்படி செயற்பட பொறிமுறை செயற்படுத்தப்பட்டது.

எனது அரசாங்கத்தின் காலத்தில் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு, பரணகம ஆணைக்குழு மூலம் விசாரணைகளை நடத்தி அறிக்கை சமர்பிக்கப்பட்டது.

இது சம்பந்தமாக வெளிவிவகார அமைச்சர் , ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் மகிந்த ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.