Header Ads



முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கு ஜால்ரா அடிப்பவரே கருணா கோடீஷ்வரன் - Mp

கொக்கரித்த கருணாவின் முகத்திரை தற்போது கிழிக்கப்பட்டுள்ளது என அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஷ்வரன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் கோடீஷ்வரனின் அலுவலகத்தில் இன்றைய தினம் -07- இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

பிரதமர் மகிந்த ராஜபக்ச தலைமையில் நேற்றையதினம் ஒரு கலந்துரையாடல் நடைபெற்றது. இந்த கலந்துரையாடலில் கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தொடர்பில் கலந்து கொள்ள இதன்போது பல்வேறு தரப்பினருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் முன்னாள் அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனுக்கும்(கருணா) அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

எனினும், அவர் அந்த கலந்துரையாடலில் பங்குகொள்ளவில்லை. ஏனென்றால் அவர் முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கு ஜால்ரா அடிப்பவர்.

கடந்த காலங்களில் தற்போதைய பிரதமர் மகிந்த ராஜபக்ச கல்முனை வடக்க பிரதேச செயலகத்தை இரண்டு, மூன்று நாட்களில் தரமுயர்த்தி தருவதாக உறுதியளித்திருந்தார். அதேபோன்று கருணாவும் ஒரே இரவில் இதற்கு தீர்வு பெற்றுத் தருவதாகவும் அல்லது ஒன்று, இரண்டு நாட்களில் தரமுயர்த்தி தருவதாகவும் கொக்கரித்திருந்தார்.

ஆனால் இதுவரை அவர்கள் கூறியதை செய்யவில்லை. இன்று அவர்களின் முகத்திரை கிழித்து வெளியுலகுக்கு காட்டப்பட்டுள்ளது. கருணா போன்றவர்கள் கல்முனைப் பிரதேசத்திற்குள் நுழைந்து அப்பகுதி மக்களின் வாக்குகளைப் பிரித்து தமது சுயலாபத்திற்காக பொய்யான பரப்புரைகளை பரப்பி வருகின்றனர்.

அத்துடன் மட்டக்களப்பு மாவட்டத்தைப் பிறப்பிடமாக கொண்ட கருணா தற்போது அம்பாறை மாவட்டத்திற்குள் நுழைந்து அங்கு இருக்கும் தமிழ் மக்களை குழப்பி அவர்களின் வாக்குகளைப் பிரித்து அவர்களை ஏமாற்றி அதன் மூலம் அவர்களின் வாக்குகளைப் பெற்றுவிடலாம் என்ற கற்பனையில் நுழைந்துள்ளார்.

ஆனால் இன்று கல்முனை பிரதேச செயலகம் தொடர்பில் அவரின் முகத்திரை கிழிக்கப்பட்டுள்ளது.

மேலும் மகிந்த ராஜபக்ச ஜனாதிபதி தேர்தல் காலத்தில் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை 3 நாட்களில் தரமுயர்த்தி தருவதாக தெரிவித்திருந்தார். ஆனால் அவர் கூறிய 3 நாட்கள் 3 மாதங்களாகிவிட்டன. இதுவரை இது தொடர்பான எந்த தீர்மானங்களும் எட்டப்படவில்லை.

நேற்றை கலந்துரையாடல் மூலம் ஒரு விடயம் தெளிவாகத் தெரிநிதுள்ளது. நேற்றைய கலந்துரையாடலில் சாய்ந்தமருது பிரதேச சபையை தருவதாக உறுதியளிக்கப்பட்டது.

ஆனால் கல்முனை பிரதேச செயலகம் என்பது ஒரு எட்டாக்கனியாக மாற்றப்பட்டுள்ளது. இந்த கலந்துரையாடலின் போது தேசிய காங்கிரசின் தலைவர் அதாவுல்லாஹ் மற்றும் ஹரீஸ் ஆகியோர் தங்களின் ஆக்ரோசமான கருத்துக்களை முன்வைத்திருந்தனர்.

ஆனால் கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தொடர்பான விளக்கம் தெரிந்தவர்கள் அங்கு செல்லவில்லை. கருணாவிற்கு கூட இந்த பிரதேச செயலகம் தொடர்பிலான எந்த அடிப்படை அறிவுமற்றவராகத்தான் இருக்கின்றார்.

மேலும் கரிஷ் இந்த பிரதேச செயலகம் நிலத்தொடர்பற்ற ஒரு பிரதேச செயலகம் என வெளியுலகத்திற்கு காட்டியிருந்தார். ஆனால் தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் தான் நாடாளுமன்றத்தில் வரைபடத்தின் மூலம் இந்த பிரதேச செயலகம் நிலத்தொடர்புடைய ஒரு பிரதேச செயலகம் என சுட்டிக்காட்டியிருந்தோம்.

அதன் பின்னர் அனைத்து சிங்கள அரசியல்வாதிகளும் அதனை ஏற்றுக்கொண்டனர். இவ்வாறு நிலத்தொடர்புடைய பிரதேச செயலகத்தை தரமுயர்த்திக் கொடுப்பது நியாயமானது.

மேலும் இலங்கையிலேயே இருக்கின்ற 332 பிரதேச செயலகங்களிலே இந்த வடக்கு பிரதேச செயலகமும் ஒன்று என்று அந்த அரசியல்வாதிகள் ஏற்றுக்கொண்டார்கள்.

இதற்காக பலர் குரல் கொடுத்தனர். தரமுயர்த்திக் கொடுக்க வேண்டும் எனவும் தெரிவித்திருந்தனர். மேலும் பிரதமர் மகிந்த ராஜபக்சவும் இதனை தரமுயர்த்திக் கொடுப்பதாகவும் தெரிவித்திருந்தார். அவ்வாறு தரமுயர்த்திக் கொடுப்பது நியாயமானது தான் என்றும் அவர் தெரிவித்திருந்தார் என குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.