Header Ads



இப்னு உமர் உயர் கலாபீடம் இலங்கையின் 72வது சுதந்திர தினத்தை நினைவு கூர்கின்றது.


இலங்கைத் திருநாட்டின் 72ம் சுதந்திர தினத்தை முன்னிட்டு இன்று  (04/02/2020 செவ்வாய்க் கிழமை) காலை விசேட  நிகழ்ச்சியொன்றை ஏற்பாடு செய்திருந்த பாணந்துறையில் அமையப்பெற்றுள்ள இப்னு உமர் உயர் கற்கைகளுக்கான இஸ்லாமியக் கலாபீடமானது தாய்நாட்டின் சுதந்திர தினத்தையிட்டுப்  பெருமிதம் அடைகின்றது. 

காலை 07.15 மணியளவில் கலாபீடத்தின் அதிபர் முப்தி அஹ்மத் மfபாஸ் அவர்களின் தலைமையில் ஆரம்பமான நிகழ்ச்சியானது கலாபீடத்தின் ஆசிரியர்கள், ஊழியர்கள்,  மாணவர்கள், பாணந்துறையின் முக்கிய சில ஊர் பிரமுகர்கள், எலுவில ஜும்மா பள்ளிவாசல்  பரிபாலன சபை உறுப்பினர்கள் ஆகியோரின் பங்கு பற்றுதலுடன் சிறப்பாக இடம் பெற்று முடிந்தது. 

கிராஅத் மற்றும் தேசிய கீதத்தை தொடர்ந்து தலைமை உரை  இடம்பெற்றது.  அவற்றைத் தொடர்ந்து நாட்டுப்பற்றின் அவசியம் பற்றியும்  இலங்கை முஸ்லிங்களின் தொன்மையான வரலாறு பற்றியும் இரு உரைகள் நிகழ்த்தப்பட்டன. இறுதியாக நன்றியுரை மற்றும் துஆப் பிரார்த்தனையுடன்  காலை 
08. 30 மணியளவில் குறித்த சுதந்திர தின ஒன்றுகூடல்  நிறைவுக்கு வந்தது. 

சுமார் 440 வருட காலம்  காலனி ஆதிக்கங்களின் கட்டுப்பாட்டின் கீழிருந்த  இலங்கைத் திரு நாடானது 1948ம் ஆண்டு காலனித்துவ மேலாதிக்கங்களிலிருந்து முழுமையான சுதந்திரத்தைப் பெற்றுக் கொண்டது என்பதை  யாவரும் அறிவோம். குறித்த சுதந்திரத்தை அடைந்து கொள்வதில் எமது தாய் நாட்டின் அனைத்துச்  சமூகங்களையும் சார்ந்த எமது  மூதாதையர்களின்  போராட்டங்களும்  அர்ப்பனிப்பும் தியாகங்களும் மெச்சத்தக்கவையாக அமைந்திருந்ததை வரலாறுகள் பதிவுசெய்துள்ளன. 

சில தசாப்த காலங்கள் முன்பு இலங்கை அரசும் அரசு சார் நிறுவனங்களுமே இலங்கைத் தாய் நாட்டின் சுதந்திர தினத்தை வருடாந்தம் நினைவுகூர்ந்து வந்திருந்த நிலையில் கடந்த சில வருடங்களாக அரசு, அரசு சார் நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள், பொது மக்கள் என அனைவரும் நாட்டின் சுதந்திர தினத்தை நினைவு கூர்ந்து வருகின்றனர். இது குடிமக்கள் தமது நாட்டின் மீது கொண்டிருக்கும்  பற்றை, அன்பை  வெளிப்படுத்தும்  வரவேற்கத்தக்க செயற்பாடாகும். 

இஸ்லாமிய ஷரீஆவின் பார்வையிலும் குடிமக்கள் தமது தாய் நாட்டை நேசிப்பதும் தமது மன்னின் மீது அன்பு  கொள்வதும் வரவேற்கத்தக்க செயற்பாடாகும். அது ஒரு நாட்டின் இறையாண்மை பாதுகாக்கப்படவும் அதன் அபிவிருத்தி மற்றும் ஐக்கியம் கட்டியெழுப்பப்படவும்  வழிகோலுகின்றது. 

இமாமுனா ஷாfபிஈ (ரஹிமஹுள்ளாஹ்) அவர்கள் பாலஸ்தீன மண்ணின் காஸா நிலத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர்களாவர். தனது சிறு பிராயத்தில் அங்கிருந்து மக்கமா நகர் சென்று திருக் குர்ஆனை மனனம் செய்தார்கள். பின்பு அங்கிருந்து மதீனா நகர் சென்று மார்க்க அறிவைக்கற்றுத் தேர்ந்த இமாமவர்கள்  பிற்காலங்களில் எகிப்து பிரதேசத்தை நோக்கிப்  புலம்பெயர்ந்திருந்தார்கள். இமாமவர்கள் பிற்காலங்களில் தனது பூர்வீக நிலமான "காஸா" வுடன் கொண்டிருந்த அன்பைக்  கவி வரிகளாக வடித்துக்  கீழ்காணுமாறு  பாடி இருந்தார்கள். 

"(காஸாவுடனான எனது)   பிரிவிற்குப் பின்பு நான் மீளவும் அங்கு செல்ல முடியாது போன போதிலும் காஸா நிலத்தின் மீது நான் அதிக ஆவல் கொண்டுள்ளேன். அள்ளாஹ் அப்பூமியை வளப்படுத்துவானாக. அப்பூமியின் மண் எனக்குக்  கிடைக்கப் பெறுமாயின் ஆர்வ மோலீட்டின் காரணமாக அதனை நான் எனது கண் இமைகளில் சுர்மாவாக இட்டுக் கொள்வேன். 
(ஆதாரம்: தீவானுல் இமாம் அஷ் ஷாfபிஈ) 

தலைமை உரையில் நாட்டுப் பற்றின் முக்கியத்துவம் பற்றிக்  குறிப்பிடப்பட்ட போது இமாமுனா ஷாfபிஈ (ரஹிமஹுள்ளாஹ்) அவர்கள் தனது பூர்வீக நிலமான காஸா மீது அன்பு கொண்டு பாடியிருந்த குறித்த கவி பற்றிப் பிரஸ்தாபிக்கப்பட்டது. 
இலங்கைப் பிரஜைகள் என்ற வகையில் நாட்டின் குடிமக்கள் அனைவரும் இனம், மதம், மொழி, பிரதேசம் என்ற வேறுபாடுகளைக் கலைந்து  தாய் நாட்டை நேசிப்பதிலும் சகல துறைகளிலும் வளம் பொருந்தியதாக அதனை உருவாக்குவதிலும்  பரஸ்பரம் ஒத்துழைத்து, ஒற்றுமையாக செயற்பட வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகும். 

இப்னு உமர் கலாபீடமானது எமது தாய் நாட்டின் வளமான எதிர்காலத்திற்காக அள்ளாஹ்விடம் இறைஞ்சுமாறு இலங்கை வாழ் முஸ்லிங்கள் அனைவரையும் இச் சிறப்பான தருணத்தில் வேண்டிக்கொள்கின்றது.



1 comment:

Powered by Blogger.