Header Ads



அன்னத்திற்கு வாக்களித்து சஜித்தை ஜனாதிபதியாக்குமாறு வேண்டுகின்றேன் - ரவி


இந்த நாட்டிலுள்ள சிங்களம், தமிழ், முஸ்லிம் மக்கள் அனைவரும் ஒரு தாய் மக்களாக எங்களது நாடு என்று தைரியமாக வாழக் கூடிய சூழ்நிலையை உருவாக்குவோம் என அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.

ஐக்கிய தேசிய முன்னனியின் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான பிரதான தேர்தல் காரியாலயம் வாழைச்சேனை கல்குடா வீதியில் இன்று திங்கட்கிழமை -05- பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் திறந்து வைக்கப்பட்ட போது கலந்து கொண்டு மேற்சொன்னவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்-

ஜனநாயகத்தை பாதுகாக்க போகின்றோமோ அல்லது மீண்டும் ஆக்கிரமிப்புக்கு இடம் வழங்கப் போகின்றோமா என்பது தான் உங்களது தீர்மானம். இந்த நாட்டை ஒரு குடும்பம் ஆட்சி செய்வதா அல்லது இந்த நாட்டை ஒவ்வொரு குடும்பமும் ஆட்சி செய்வதாக என்பது தான் கேள்வி.

2018ம் ஆண்டு ஜனவரி 5ம் திகதி அனைவரும் துணிச்சலாக எடுத்த முடிவின்; காரணமாக மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதியாக்கி நாட்டில் ஜனநாயகத்தினை கொண்டு வந்தோம். ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றாலும் பொதுத் தேர்தலில் பெரும்பான்மை ஆசனத்தினை பெற்றுக் கொள்ள முடியாமல் போனது.

இதன் காரணமாக கூட்டு அரசாங்கத்தினை அமைக்க வேண்டிய சூழல் உருவானது. இதனால் குழப்பகரமான பிரச்சனைகள் தோன்றியது. எங்களது ஜனாதிபதி, பிரதமர், அரசாங்கம் என்று ஐக்கிய தேசிய முன்னியை சேர்ந்த அனைவரையும் ஒன்றிணைத்து அரசாங்கத்தினை நிர்மானித்து இந்த நாட்டிலுள்ள சிங்களம், தமிழ், முஸ்லிம் அனைவரும் ஒரு தாய் மக்களாக எங்களது நாடு என்று தைரியமாக வாழக் கூடிய சூழ்நிலையை உருவாக்க வேண்டும்.

தேர்தல் வெற்றியின் பின்னர் ஜனவரி 8ம் திகதிக்கு பின்னர் நாடு முழுவதும் அபிவிருத்தியை மேற்கொள்ள தீர்மானித்துள்ளோம். கல்வித் துறையை முன்னேற்றி உள்ளோம். சுகாதார துறையை நவீனமயப்படுத்தி உள்ளோம். அச்சமில்லாமல் வாழக் கூடிய உரிமையை பெற்றுக் கொடுத்துள்ளோம்.

உங்களுக்கு நோய் ஏற்பட்டால் உங்கள் வீட்டிற்கு வந்து வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதற்கான அம்பூலன் வண்டி உதவிகளை ஏற்படுத்தி உள்ளோம். நாட்டில் ஒவ்வொரு பகுதியிலும் ஒற்றுமை, சகோதரத்துவத்தை ஏற்படுத்தி வருகின்றோம். நாங்கள் வாழ்க்கைச் செலவுகளை குறைத்துள்ளோம். எங்களது ஆட்சியில் ஐந்து வருடத்திற்குள் பொருட்களின் விலைகளை குறைத்து இருக்கின்றோம்.

ஐந்து வருடத்திற்கு முன்னர் 2750 ரூபாய்க்கு இருந்த கேஸ் சிலின்டன் தற்போது 1650 ரூபாவுக்கு விற்கப்படுகின்றது. அதேபோன்று மண்ணெண்ணெய், சீனி, பருப்பு, பால்மா உட்பட்ட பொருட்களின் விலைகளை குறைத்து இலகுவாக வாழக் கூடிய சூழலை உருவாக்கி உள்ளோம்.

பொலிஸார் மற்றும் இராணுவ வீரர்களுக்கான ஊதியத்தினை நாற்பது வீதத்தினால் அதிகரித்தோம். பொலிஸார் மற்றும் இராணுவத்தினருக்கு இன்று நாம் அச்சம் இல்லாத சூழ்நிலையில் வாழ்வதற்கு நன்றி தெரிவிக்கின்றோம். நாங்கள் இனவாதத்தினை நிறுத்தி சகோதரத்துவத்தை கட்டியெழுப்பியுள்ளோம். அதற்கான தலைமைத்துவத்தை ரணில் விக்கிமசிங்க வழங்கியுள்ளார்.

எங்களது எதிர்கால சமூகம் அபிவிருத்தி மற்றும் சமாதானத்துடன் வாழ அன்னத்திற்கு வாக்களித்து சஜித் பிரேமதாசவை ஜனாதிபதியாக்குமாறு வேண்டுகின்றேன். பிரதமர் ரணில் விக்கிமசிங்க மற்றும் ஜனாதிபதி சஜித் பிரேமதாச அனைவரும் ஒன்றிணைத்து நாட்டை முன்னோக்கி செல்ல உள்ளார்கள் என்பதை தெரிவித்துக் கொள்கின்றேன்.

ஐக்கிய தேசிய கட்சி ஐக்கிய தேசிய முன்னியை ஒன்றிணைத்து மட்டக்களப்பு மாவட்டத்தில் பாரிய அபிவிருத்திகளை மேற்கொள்ளும். ஜனாதிபதி தேர்தலில் வெற்றி மாத்திரமல்ல பாரிய வெற்றியை பெறுவோம் என்றார்.

ஐக்கிய தேசிய கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் மங்கள செனரத் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி, முன்னாள் கிழக்கு மாகாண ஆளுனர் ரோஹித போகொல்லாகம, முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட், உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள், அரசியல் பிரமுகர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

No comments

Powered by Blogger.