Header Ads



தெஹிவளை மிருகக்காட்சிசாலை ஊழியரின் கைதையடுத்து, வெளியாகியுள்ள திடுக்கிடும் தகவல்கள்

தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 400 கிராம் ஹெரோயின் உடன் தெஹிவளை மிருகக்காட்சிசாலை ஊழியர் ஒருவர் உள்ளிட்ட கௌடான மற்றும் கட்டுபத்த பிரதேசங்களைச் சேர்ந்த நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் போதைப்பொருள் விற்பனை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளமை விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளதோடு, வெலிக்கடை சிறைச்சாலையில் இருந்தே இந்நடவடிக்கைக்கான கட்டளைகள் வந்துள்ளமையும் தெரிய வந்துள்ளது.

வெலிக்கடை சிறையிலுள்ள, சூவா சமந்த என அழைக்கப்படும் அதிகாரிகே சமந்த பெரேரா என்பவரே இச் செயற்பாடுகளை சிறையிலிருந்தவாறு மேற்கொண்டுள்ளதாக தெரிய வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு (STF) கிடைத்த தகவல்களின்படி, நேற்று (16) மாலை கௌடான பிரதேசத்தில் வைத்து 100 கிராம் ஹெரோயினை வைத்திருந்த சந்தேகநபர் ஒருவர் அவரது வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 34 வயதான கசுன் ஷெஹான் களுவிதாரண எனவும், அவரிடமிருந்து மேற்கொண்ட விசாரணைகளிலிருந்து அப்பிரதேசத்தைச் சேர்ந்த மற்றுமொருவர் 100 கிராம் ஹெரோயினுடன் விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.

41 வயதான விதானாரச்சி நாலக புஷ்பகுமார எனும் குறித்த சந்தேகநபர், களுபோவில பிரதிபிம்பாராமவைச் சேர்ந்தவர் எனவும், தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் மிருகங்களை கட்டுப்பாடு செய்யும் நடவடிக்கையில் ஈடுபடுபவர் எனவும் தெரியவந்துள்ளது.

குறித்த சந்தேகநபரிடமிருந்து மேற்கொண்ட விசாரணைகளின்போது, தெஹிவளை மிருகக்காட்சிசாலையிலுள்ள அவரது அலுமாரியில் 400 கிராம் ஹெரோயின் போதைப் பொருள் மீட்கப்பட்டுள்ளது.

இவர் நீண்ட நாட்களாக மிருகக்காட்சிசாலையில் இருந்தவாறு போதைப்பொருள் விநியோகத்தில் ஈடுபட்டு வந்தமை விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

அதனைத் தொடர்ந்து சந்தேகநபர்கள் இருவரையும் மேற்கொண்ட விசாரணைகளில், கட்டுபெத்த பகுதியில் வைத்து சொகுசு காரொன்றை பரிசோதித்த விசேட அதிரடிப்படையினர், ஹெரோயின் மற்றும் பணத்துடன் மேலும் இருவரை கைது செய்தனர்.

இதன்போது வாகனத்தின் சாரதியான மொரட்டுவ, மோல்பேவைச் சேர்ந்த 41 வயது ரனுஜா பாலித ரணதிஸ்ஸ என்பவரிடம், 68 கிராம் ஹெரோயின் மற்றும் ரூ. 20 இலட்சம் பணமும் மீட்கப்பட்டுள்ளதோடு, குறித்த நபர் அந்த வாகனத்தை வாடகைக்கு எடுத்துள்ளமையும் தெரியவந்துள்ளது.

குறித்த காரிலிருந்த அம்பலாந்தோட்டையைச் சேர்ந்த, 34 வயதான சம்சுதீன் முகமது ஜுனைதீன் எனும் சந்தேகநபரிடமிருந்து 15 கிராம் ஹெரோயின், ஒரு நவீன கைத்துப்பாக்கி, ஒரு மெகசின் மற்றும் 9 மி.மீ வகை தோட்டாக்கள் 05 ஆகியனவும் சந்தேகநபரிடமிருந்து மீட்கப்பட்டுள்ளது.

பல்வேறு துப்பாக்கிச் சூடு சம்பவங்களில் தொடர்புடைய சந்தேகநபரான குறித்த நபர், கடந்த சனிக்கிழமை (12) முதல் கட்டுபெத்த பிரதேசத்திலுள்ள ஹோட்டலொன்றில் தங்கி வருவதாகவும், அவர் அங்கு வந்ததற்கான காரணத்தை அறிய பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அதற்கமைய குறித்த நால்வரிடமிருந்து 683 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளதோடு, அது சுமார் ரூபா. 50 இலட்சத்திற்கும் அதிக பெறுமதி கொண்டது எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

No comments

Powered by Blogger.