Header Ads



தற்கொலைக் குண்டுகளை கொண்டுசென்ற சாரதி - பேரீச்சம்பழங்களும் கிடைத்தது (புதிய தகவல்கள்)

மக்களை அழிவில் இருந்து காப்பாற்றிய சாந்தலாலுக்கு அன்பளிப்பாக 50இலட்சம் ரூபா வழங்கப்படுள்ளது.

ஈஸ்டர் ஞாயிறு தாக்குலுக்கு பின்னர் இரண்டாவது தாக்குதலொன்றையும் நடத்த தயாராகினர் என்பது  தற்போது உறுதியாகியுள்ளது. ஆயினும் அதனை தடுக்க முடிந்தது அமானுஷ்ய சக்தியால் அல்ல. சாதாரண பிரஜையொருவரின் தைரியமான செயலினாலாகும். அவர் நிட்டம்புவ, யட்டியனவில் வசிக்கும் 44வயதான விதானகே சாந்தலாலாகும்.  சஹரானின் தற்கொலை குண்டுகளை நீர்கொழும்பிலிருந்து கல்முனை வரை கொண்டு சென்றது அவரே. 

பயங்கரவாதிகளால் மரணமடைந்த, காயத்துக்குள்ளானவர்கள் குறித்து மிகவும் கவலையடைகின்றேன். இந்த பணத்தில் அவர்களுக்கு உதவவும் எண்ணியுள்ளேன் என்கிறார் சாந்தலால். பயங்கரவாதிகள் என அறியாமல் அவர்களின் குண்டுகளை லொறியில் கொண்டு சென்ற அனுபவத்தை அவர் பின்வருமாறு பகிர்ந்து கொண்டார். 

நான் வர்த்தகம் செய்து இன்னமும் கடன் காரனாக வாழ்கின்றேன். வியாபாரம் செய்வதற்கு லொறியொன்றை வாங்கினேன். ஆனால் வருமானம் இல்லை. அதனால் பேப்பரில் இருந்த விளம்பரமொன்றை பார்த்து பெல்லன்விலவில் கெப் சேர்விஸின் யக்கல கிளையில் இணைந்து கொண்டேன். ஆனாலும் எனக்கு சில நேரங்களில்தான் ஹயர் கிடைத்தது. ஏப்ரல் 09ம் திகதி எனக்கு கெப் சர்விஸிலிருந்து அழைப்பு வந்தது.  ‘நல்ல ஹயரொன்று கிடைத்துள்ளது. நீர்கொழும்பிலிருந்து அம்பாறைக்கு செல்ல வேண்டும் நல்லா காசு கிடைக்கும்’ என்று தொலைபேசி இலக்கமொன்றைத் தந்தார்கள். 

 முதலில் கட்டுவாப்பிட்டியவுக்கு 

என்னிடம் கொடுக்கப்பட்ட தொலை பேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டேன். பதிலளித்தவர் கட்டுவாப்பிட்டியவுக்கு வருமாறு கூறினார். அவரின் பேச்சிலிருந்து சிங்களவர் அல்ல எனத் தெரிந்தது. தமிழராகவோ முஸ்லிமாகவோ இருக்கலாம் என எண்ணினேன். பிரச்சினையில்லை மெதுவாக வாருங்கள் என்று அவர்கள் கூறினார்கள். தாங்கள் நவலோக வைத்தியசாலைக்கு அருகில் இருப்பதாகக் கூறினார்கள். இரவு 11.15க்கு வைத்தியசாலைக்கு அருகே செல்லும் போது வைத்தியசாலை அருகில் ஸ்கூட்டி ஒன்றில் ஒருவர் வந்திருந்தார். அவர் என்னை பின்னால் வருமாறு கூறி கட்டுவாபிடிய பாதைக்குத் திருப்பினார். அப்பாதையில் ஒன்றரை கிலோமீற்றர் வரை சென்றவுடன் கேட்டு டன் கூடிய பெரிய இரட்டைத்தட்டு வீட்டுக்கருகில் தனது வண்டியை நிறுத்தினார். வீட்டு முற்றத்தில் பட்டா வேன் ஒன்றும் நின்றிருந்தது. மேல்மாடி இருட்டாகக் காணப்பட்டது. கீழ்தட்டில் ஆறு ஆண்கள் இருந்தார்கள். பார்க்கும் போது முஸ்லிம்கள் போல் தோற்றமளிக்கவில்லை. வயதான ஒருவரும் இருந்தார். எல்லோரும் லொறியை திறந்து பார்த்துவிட்டு ‘மிக நன்றாக இருக்கின்றது’ என்று கூறினார்கள். 

எனக்கு பேரீச்சம்பழப் பெட்டியொன்றைத் தந்தார்கள். நான் காலையிலிருந்து சாப்பிடவில்லை சாப்பிடுகிறேன் என்று கூறியதும் இதைப் பிள்ளைகளுக்குக் கொண்டு போய்க்கொடுங்கள். நாங்கள் வேறு  தருகின்றோம் என போதுமான அளவு பேரீச்சம்பழங்களை எனக்கும் தந்தார்கள். நான் வீட்டுக்குள் சென்று கொண்டு செல்ல வேண்டிய பொருட்களைப் பார்த்தேன். 

சலவை இயந்திரம், குளிர்சாதனப்பெட்டி,  சிலிண்டர்கள். ஜெனரேட்டர், உரப்பைகள், பிளாஸ்டிக் நாற்காலிகள்,  கறுப்பு, வெள்ளை பரல்கள் என்பன காணப்பட்டன. ஒரு லொறியில் ஏற்ற முடியாத அளவு பொருட்கள் காணப்பட்டன. பொருட்களை லொறியில் ஏற்றினார்கள். முதலில் லொறியில் சிறிய பரல்களை ஏற்றினார்கள். நான் என்னவென்று கேட்டதற்கு அவை சல்பூரிக் அசிட் நெருப்பு தண்ணி என்று கூறினார்கள். தங்க சாமான்கள் உருக்கப் போகின்றோம். அங்கு வேலைத் தளமொன்றைத் தொடங்கப் போகிறோம் என்று கூறினார்கள்.

சாமான்களை ஏற்றிக்கொண்டு இரவு 12.30மணியளவில் புறப்பட்டோம். தூக்கம் வந்தால் தூங்குங்கள் எங்களுக்கு அவசரமில்லை என்று கூறினார்கள். நாம் கல்முனைக்கு பகல் 12.30மணியளவில் சென்றடைந்தோம். நான் ஏன் இந்த வீட்டைக் காலி செய்துவிட்டு செல்கின்றீர்கள் என்று கேட்டேன். 45,000ரூபா வாடகைக்கு வீட்டை பெற்று இங்கு தங்க நகைகளைச்  செய்தோம். வியாபாரம் நன்றாக நடந்து கொண்டிருந்தபோது வீட்டுக்காரர் வீட்டைத் திருப்பிக்கேட்டார். இது சீசன் நேரம் அதனால்தான், நாம் கல்முனையில் வேலைத் தளமொன்றை ஆரம்பிக்கச் செல்கின்றோம் என்று கூறினார்கள். பட்டா வேன் இரண்டும் இருக்கின்றது. கடைகளுக்கு சாமான் போட வேண்டும் என்பதால் ஹயருக்கு வண்டியை பெற்றோம் என்றும் கூறினார்கள். 

லொறியில் எரிபொருள் இல்லை. வழியில் எங்கும் எண்ணெய் நிரப்பு நிலையங்கள் இருக்கவில்லை. சரியாக படலகம என்ற இடத்தில் எரிபொருள் நிரப்பு நிலையத்துக்கு அருகில் வண்டி நின்றுவிட்டது. அங்கு 5000ரூபாவுக்கு எரிபொருள் நிரப்பினோம்.

தம்புள்ளையில் தேநீர் அருந்திவிட்டு ஐந்தரை மணியளவில் கதுறுவலைக்கு சென்றோம். அங்கு என்னோடு வந்த மனிதர் பள்ளிவாசலுக்குச் சென்றார். 

மன்னம்பிட்டியில் எமது லொறியை யானையொன்றும் மறித்தது. அதிலிருந்து ஒருவாறு நாம் தப்பிச்சென்றோம். வண்டியின் டயரில் ஏற்பட்ட பிரச்சினையை மட்டக்களப்பில் திருத்தினோம். அப்போது நேரம் காலை எட்டரை மணியாகும். என்னுடன் வந்த நபருக்கு தொடர்ந்து தொலைபேசி அழைப்புகள் வந்தவண்ணமே இருந்தது.

காலை சாப்பாடு சாப்பிட ஒரு கடையில் நிறுத்தினோம். அற்கு இறங்கி சென்ற நபர் பொலிஸார் இருக்கிறார்கள். வேறு கடைக்குச் செல்வோம் என்று கூறினார். அவர் கூறியதை நான் அப்போது கவனத்தில் கொள்ளவில்லை. என்னுடன் வந்த நபரும் மட்டக்களப்புக்கு ஒரு தடவையே வந்திருப்பதாகக் கூறினார். நாங்கள் கல்முனை செல்லும் வழியை கேட்டபடி 12.30மணிக்கு கல்முனையை அடைந்தோம். அங்கு பச்சைநிற பள்ளிவாசல் ஒன்றுக்கருகில் கறுப்புநிற மோட்டார் சைக்கிளில் ஹெல்மட் அணிந்த ஒருவர் எம்மை சம்மாந்துறைக்கு அழைத்துச் சென்றார். அவர் சப்பாத்து பிஸ்னஸ் செய்பவர் என என்னுடன் வந்த நபர் கூறினார். நாம் இறுதியாக சம்மாந்துறையில் உள்ள செந்நெல் என்னும் கிராமத்தில் உள்ள வீட்டிற்கு சென்று அங்கே பாதி சாமான்களை இறக்கிவிட்டு ஏனைய பொருட்களை நிந்தவூரிலுள்ள வீடொன்றில் இறக்கினோம். அவர்கள் எனக்கு வாடகையுடன் மேலதிகமாகவும் பணம் கொடுத்தார்கள். என்னுடன் வந்த நபர் வண்டியில் மறைத்து வைத்திருந்த பார்சலை எடுத்துக்கொண்டு கல்முனையில் தங்கிவிட்டார். வரும் வழியில் நான் அவருடன் பலமுறை தொலைபேசியில் பேச முயற்சி செய்த போதும் அவர் கதைக்கவில்லை. 

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலின் பின்னர்  நிகழ்வுகளை தொலைக்காட்சியில் பார்த்தேன். கட்டுவாப்பிட்டியிலிருந்து முஸ்லிம்களுக்கு சொந்தமான பொருட்களை ஏற்றிக்கொண்டு மட்டக்களப்புக்குச் நான் சென்றதை எனது மகளிடம் கூறினேன். பெறுமதியான பொருட்களை எவ்வித அக்கறையுமில்லாமல் வண்டியில் ஏற்றியது என் மனக்கண்ணில் தோன்றியது.  நீர்கொழும்பு வீட்டுக்குச் சென்று பார்த்து வருவதாக நான் வீட்டில் கூறினேன்.  ஆனால் வீட்டிலுள்ளவர்கள் பயந்துவிட்டார்கள். பொலிஸில் கூறினால் என்னையும் கைது செய்வார்கள். கடன்கட்ட முடியாமல் பயங்கரவாதிகளுக்கு உதவியதாகக் கூறுவார்கள். இப்போது செய்ய எதுவுமில்லை. நான் பொலிஸாரிடம் சொல்லப் போகிறேன் என்று கூறினேன். 

ஏப்ரல் 25ம் திகதி நயிவலவிற்கு சென்றேன். அங்கே ஆடைத்தொழிற்சாலையொன்றில் எனக்கு உதவி செய்யும் சிலர் மிகவும் கவலையுடன் குண்டு வெடிப்பை பற்றிக் கதைப்பதைக்கேட்டு அவர்களிடம் நான் சென்று எனது சந்தேகத்துக்கிடமான பயணத்தைப் பற்றிக் கூறினேன்.

அதிலொருவர் சிறிவர்தன. 22வருடம் விமானப்படையில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். அவர் முன்னாள் இராணுவ தளபதியொருவரிடம் ஆலோசனையைப் பெற்றார். நான் வீட்டுக்குச் சென்றவுடன் அவர் புலனாய்வுப் பிரிவினர் என்னுடன் கதைப்பார்கள் எனக் கூறினார்.

அதேபோல் புலனாய்வுப்பிரிவினர் என்னுடன் கதைத்தார்கள். நான் எனக்கு தெரிந்த விடயங்களைக் கூறினேன். 

பின்னர் புலனாய்வு அதிகாரிகளுடன் பொருட்களை இறக்கிய இடங்களைத் தேடி ஜீப்பில் சென்றோம். மிகவும் சிரமப்பட்டு முதலில் சம்மாந்துறை வீட்டை கண்டுபிடித்தோம். நிந்தவூரிலுள்ள வீட்டை கண்டுபிடிக்க சிரமமிருக்கவில்லை. 

நாம் முதலில் சம்மாந்துறையிலுள்ள வீட்டிற்கு சென்றோம். அங்கு நான் அதிகாரிகளுக்கு அந்த வீட்டிலிருந்த இளம் பெண்ணை அடையாளம் காட்டினேன். முதலில் ஒன்றும் தெரியாது எனக் கூறிய பெண் ‘நான்தான் பொருட்களை கொண்டு வந்தேன் என்று ஒத்துக்ெகாண்டார்.' 

காத்தான்குடி நியாஸ் சப்பாத்து தொழிற்சாலைக்கு என பொருட்களை கொண்டு வந்து இறக்கியதாக அப்போது அந்தப்பெண் கூறினார்,  நியாசிடம்  அவரது தமக்ைகயைப் போல பேசச் சொன்னோம். அவர் அங்கு வருவதாகக் கூறினார். அதற்கிடையில் அவருடைய அக்கா பொலிஸார் வந்திருப்பதை தெரிவித்துவிட்டார். ஆகவே நியாஸ் வரவில்லை. புலனாய்வு அதிகாரிகள் வீட்டை உடைத்து பார்த்த போது ஐ. எஸ். கொடி உட்பட பல பொருட்கள் சிக்கின. 

அதேபோல், நிந்தவூர் வீட்டிலும் வெள்ளை உடுப்புகள், சிம் கார்ட்கள் என பல பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன. புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் என்னை மிகவும் பாராட்டினார்கள்.  

அன்றிரவு சாய்ந்தமருது வெடிப்பு சம்பவம் இடம்பெற்றது. அன்று நான் புலனாய்வு அதிகாரிகளுடனேயே இருந்தேன். மறுநாள் நான் அவ்விடத்துக்கு சென்று அங்கு இறந்துகிடந்தவர்களை அடையாளம் காட்டினேன். முன்னால் இறந்துகிடந்தவர் எமக்கு மோட்டார் சைக்கிளில் சென்று வழிகாட்டியவர். அவர்தான் நியாஸ் என்பவராவார். நவலோக்க வைத்தியசாலைக்கு அருகிலிருந்து அழைத்துச்சென்றவர். கட்டுவாப்பிட்டிய தேவாலய தாக்குதல் நடத்தியது  ஹஸ்துன்னாகும். கட்டுவாப்பிட்டியவில் பொருட்கள் ஏற்றும்போது அந்த வீட்டின் மேல் மாடியில் இருந்த பெண்களில் சிலர் சாய்ந்தமருது வெடிப்பு சம்பவத்தில் இறந்தவர்களாவர். லொறிக்கு பொருட்களை ஏற்றியவர் சஹரானின் சகோதரர் ரில்வானாகும். சாந்தலால் பொருட்கள் ஏற்ற சென்றபோது வீட்டிலிருந்த பருத்த தோற்றமுடையவரே சஹரானாகும். கல்முனைக்கு லொறியில் சென்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் சஹரானின் குண்டு தயாரிப்பு நிபுணர் மொஹமட் ரிஸ்கானாகும். 

இவ்வாறு பல விடயங்கள் வெளிச்சத்துக்கு வரக் காரணமான சாந்த பல மாதங்களாக தான் மேற்கொண்ட வீரச் செயலுக்கு சரியான பாராட்டுக் கிடைக்கும் வரையும் காத்திருந்தார். இறுதியில் அவர் ஊடகங்களைச் சந்தித்தார். தனது கதையை கூறினார். அதன்பின்னரே அவரைப் பற்றிய ஞாபகம் அனைவருக்கும் வந்தது. தற்பொது அவருக்கு சரியான பாராட்டும் பரிசும் கிடைத்துள்ளன.

அமில மலவிசூரிய,,  தமிழில் வயலட்

1 comment:

  1. இவருக்கு கிடைத்த வெகுமதி மிகப் பொருத்தமானதே.சரியான நேரத்தில் அவர் மட்டும் கவனயீனமாக இருந்து இருந்தால் அழிவு இன்னும் அதிகமாக இருந்திருக்கும்.ஆனால் இவரை போல் பலர் அறியாமல் அந்த பயங்கரவாதிகளுடன் ஏதோ ஒரு வகையில் சம்பந்தப்பட்டு தற்போது சிறையில் உள்ளார்கள் அவர்களையும் அரசு நீதியான முறையில் விசாரித்து விடுதலை செய்ய வேண்டும்.

    ReplyDelete

Powered by Blogger.