Header Ads



முஸ்லிம் அமைச்சர்கள் பதவி விலகியது தவறான முன்னுதாரணம், 8 பேர் செய்த குற்றத்திற்கு, முஸ்லிம் சமூகத்தை ஏன் அசௌகரியப்படுத்த வேண்டும்

முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லாஹ் வெளியிட்ட கருத்து வெளியிடப்படக் கூடாத கருத்து என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளரான நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

அரசியல் இலாபத்தை எதிர்பார்த்து நாட்டில் பிரச்சினைகளை ஏற்படுத்துவோரும் இருக்கின்றனர் எனவும் அவர் கூறியுள்ளார்.

கொழும்பு டாலி வீதியில் உள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் இன்று -13- நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் துமிந்த திஸாநாயக்க இதனை குறிப்பிட்டுள்ளார்.

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பாக விசாரிக்கும் விசேட நாடாளுமன்ற தெரிவுக்குழு, பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்சவும் இணைந்து திட்டமிட்டு நியமிக்கப்பட்ட குழுவோ என்ற சந்தேகம் எழுகிறது.

இந்த நாடாளுமன்ற தெரிவுக்குழுவை நியமிக்குமாறு கோரி, மகிந்த ராஜபக்ச அணியின் நாடாளுமன்ற உறுப்பினரான சுசந்த புஞ்சிநிலமேவே முதலில் கையெழுத்திட்டுள்ளார்.

ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு இடயிலான பிரச்சினைகள் தீர்த்துக்கொள்ளாது அமைச்சரவைக் கூட்டத்தை நடத்தாமல், மக்களை பாதிப்புக்கு உள்ளாக்குவதை நான் அனுமதிக்க மாட்டேன்.

எமது முன்னாள் ஆளுநர், முன்னாள் அமைச்சர் மட்டுமல்லாது எமது கட்சியின் உறுப்பினரான எம்.ஏ.எல்.எம். ஹிஸ்புல்லா, தாம் இலங்கையின் சிறுபான்மை இனம் என்றாலும் உலகில் பெரும்பான்மை இனம் என்று கூறியுள்ளார்.

இப்படியான தேவையற்ற கருத்துக்களை வெளியிட்டு, நாட்டில் பிரச்சினைகளை ஏற்படுத்த வேண்டாம் என நான் அவரிடம் மிகவும் அன்பாக கேட்டுக்கொள்கிறேன். உலகின் பெரும்பான்மை இனம் எது என்பது இந்த சந்தர்ப்பத்தில் தேவைற்ற ஒன்று.

நாம் நாட்டுக்குள் இருக்கும் பிரச்சினை தீர்க்க வேண்டும். இதனால், நாட்டில் ஐக்கியத்திற்கு குந்தகம் ஏற்படுத்தும் விதமான கருத்துக்களை வெளியிட வேண்டாம் என அவரிடம் கேட்டுக்கொள்கிறோம்.

முஸ்லிம் அமைச்சர்கள் இணைந்து பதவிகளில் இருந்து விலகியமை நாட்டுக்கு தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்திக்கொடுக்கும். நாம் இந்த பிரச்சினையின் அடிமட்டத்திற்கு செல்லாமல் முனையில் பிடித்துக்கொள்வது தவறானது.

எட்டு பேர் செய்த குற்றத்திற்காக முழு முஸ்லிம் சமூகத்தை ஏன் அசௌகரியத்திற்கு உள்ளாக்க வேண்டும். முஸ்லிம்களின் பள்ளிவாசல்களின் சோதனை நடத்த நேரிட்டது. சோதனைகளுக்கு பாதுகாப்பு தரப்பினர் மோப்ப நாய்களை கொண்டு செல்ல நேரிட்டது.

இது சிங்கள , தமிழ் அல்லது பாதுகாப்பு தரப்பினர் செய்த தவறு அல்ல. முஸ்லிம் மக்களின் சமயத்தை பின்பற்றிய சிலர் செய்த தவறு. தற்போதாவது இதனை புரிந்துக்கொண்டு பிரச்சினை தீர்க்க இடமளிக்க வேண்டும் எனவும் துமிந்த திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.