Header Ads



உதிரம் கொடுத்து உயிரைக்காக்க சொல்லும் இஸ்லாத்தில், ஒற்றுமைக்கு கலங்கம் தந்த குண்டு வெடிப்பு

(அல்-ஆலிமா ஒமர் நுஹா 
முஸ்லிம் மகளிர் அரபுக் கல்லூரி-கல்-எளிய

💝அன்பின் உறவுகளே!
நம் நாட்டை உலுக்கி எடுத்த இக் கோர  குண்டு வெடிப்புச் சம்பவத்தின் துக்கத்திலிருந்து மீள முடியாதவர்களாய் நாம் கலங்கி நிற்கின்றோம்..

மனிதம்,அறிந்த உணர்ந்த அனைவருக்கும் புனிதம்; மனித உயிர்கள். இதில் ஜாதி, மத, இன, நிற, மொழி பேதம் எதுவுமில்லை.மனித உயிர்கள் யாவும் சமமே. எந்த மதமும் உயிர்களுக்கு தீங்கிழைப்பதை ஆதரிக்கவுமில்லை, வரவேற்கவுமில்லை. குறிப்பாக இஸ்லாம் மனித உயிர்களுக்கு அளித்துள்ள பெறுமதி அபரிதமானது, வியக்கத்தக்கது. 

இது தொடர்பில்  திருமறையில் சூறா அல்-மாஇதாஅத்தியாயம்(5) வசனம்(32)

*مَنْ قَتَلَ نَفْسًۢا بِغَيْرِ نَفْسٍ اَوْ فَسَادٍ فِى الْاَرْضِ فكَاَنَّمَا قَتَلَ النَّاسَ جَمِيْعًا ؕ وَمَنْ اَحْيَاهَا فَكَاَنَّمَاۤ اَحْيَا النَّاسَ جَمِيْعًا ؕ*  

*"கொலைக்குப் பதிலாகவோ, பூமியில் செய்யும் குழப்பத்திற்குப் பதிலாகவோ அன்றி ஒருவர், மற்றொருவரைக் கொலை செய்தால் அவர் எல்லா மனிதர்களையும் கொலை செய்தவர் போலாவார்"* ,
*"ஒரு மனிதனை வாழவைத்தவர் எல்லா மனிதர்களையும் வாழ வைத்தவர் போலாவார்"*  என்று குறிப்பிடுகிறது.

💝அன்பின் உறவுகளே!
சிறுபாண்மையோ, பெரும்பாண்மயோ குற்றமிழைத்தவர் தண்டிக்கப்படலே நீதி, அதுவே சட்டத்தின் உரிமையும் கூட.
இஸ்லாமும், இஸ்லாமியர்களான நாமும் அதனையே வலியுறுத்துகின்றோம்.
நபிகளாரின் வாழ்விலே அழகிய முன்மாதிரிகளில் ஓர் சம்பவத்தை இவ்விடத்தில்  குறிப்பிடுகின்றேன்.

மதீனாவை தலைநகராகக் கொண்ட சாம்ராஜ்யத்தை  நபி முஹம்மது  (ஸல்) அவர்கள் ஆட்சி செய்து கொண்டிருந்த நேரம் அது.
ஒரு திருட்டு சம்பவம் நடைபெறுகிறது, குற்றவாளியும் கைது செய்யப்படுகிறார். 
குற்றத்தை செய்தவர் பாத்திமா என்ற பெண்மணி. அதுவும் மக்சூமியா எனும் உயர் குலத்தில் செல்வாக்குள்ளவர் என்பதும் கூட.
(இஸ்லாமிய குற்றவியல் சட்டங்களின் படி திருட்டிற்கு தண்டனையாக கை வெட்டப்பட வேண்டும்.)

குறித்த பெண் மீது குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதால் தண்டனை நிறைவேற்ற ஆயத்தங்கள் செய்யப்பட்டன.
உயர் குலம் அல்லவா? பதற்றமடைந்தனர் அக்குலத்தை சார்ந்தவர்கள். தங்கள் குல பெண்ணிற்கு தண்டனை நிறைவேற்றப்பட்டால் மொத்த குலத்திற்கும் அல்லவா இழுக்கு? என்ன செய்வது? 

முஹம்மது நபி(ஸல்) அவர்களிடம் சென்று தண்டனையை குறைக்க வேண்டுகோள் விடுக்கலாம். ஆனால் நீதியே வாழ்க்கையாக வாழும் அவரிடம் சென்று  பேசுவது எவ்வாறு?.

இறுதியில் ஒரு முடிவுக்கு வந்தனர். முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கு மிகவும் நெருக்கமான நபர் மூலம் சிபாரிசு பெறலாம் என்பது தான் அந்த முடிவு.
தகுந்த நபரை கண்டுபிடித்தனர். முஹம்மது நபி(ஸல்) அவர்களுக்கு  மிகவும் பிடித்த அவர்களின் வளர்ப்பு மகன் ஸைத் பின் ஹாரிஸா(றழி) அவர்களின்  மகனான உஸாமா பின் ஸைத்(றழி) தான் அந்த நபர். முஹம்மது நபியின் பாசத்திற்கும் நேசத்திற்குமுரியவர்.

உஸாமா (றழி) அவர்களிடம் செய்தியைச் சொன்ன போது அவரும் அதனை ஏற்றுக் கொண்டு முஹம்மது நபி (ஸல்) அவர்களிடம்  சென்றார்கள். இளைஞரான உஸாமா(றழி) சிபாரிசை முன் வைத்தவுடன் முஹம்மது நபி(ஸல்)  அவர்களது கண்கள் கோபத்தால் சிவந்தன.

*'அல்லாஹ்வின் சட்டங்களை மாற்றுவதற்கா என்னிடம் சிபாரிசு செய்ய வந்துள்ளீர்?'* என்று கடிந்து கொண்டவர்கள், உஸாமா(றழி) அவர்களிற்கும் கூடியிருந்த மற்றவர்களுக்கும் தெளிவான ஒரு செய்தியைக் கொடுத்தார்கள். *'உங்களுக்கு முன் சென்ற சமுதாயத்தினர் அழிக்கப்பட்டதற்கு காரணம் இதுதான். அவர்களில் பலவீனமானவர்கள் தவறிழைத்தால் தண்டனையை நிறைவேற்றுவார்கள். செல்வாக்குமிக்கவர்களும், பலம்மிக்கவர்களும் தவறிழைத்தால் அவர்களை விட்டுவிடுவார்கள்'.*

இத்துடன் நிறுத்திவிடவில்லை நபியவர்கள்(ஸல்) மிகவும் தெளிவாக கூறினார்கள், *'என்னுடைய மகள் பாத்திமா(றழி) தவறிழைத்தாலும் அவர் மீதும் (பாரபட்சமின்றி) இத் தண்டனை நிறைவேற்றப்படும்'.* எத்தனை பொருள் நிறைந்த தீர்க்கமான வார்த்தைகள் அவை .

அன்று கூடியிருந்தவர்களுக்கு மட்டுமல்ல நம்மையும் தான் மெய் சிலிர்க்க வைக்கிறது இச் சம்பவம். நீதி அனைவருக்கும் சமம் என்ற கோட்பாடு தான் நாட்டில் அமைதியை நிலை நாட்டியது. ஆட்சியாளர் மீது குடிமக்களுக்கு நம்பிக்கையையும் விசுவாசத்தையும் அதிகரித்தது.

இஸ்லாமிய வரலாற்றில் பரவிக் கிடக்கும் ஆயிரமாயிரம் சம்பவங்களில் இதுவுமொன்று. முஹம்மது நபி(ஸல் மட்டுமல்ல, அவர்கள் வழி வந்த ஆட்சியாளர்கள் அனைவரும் நீதியை நிலைநாட்டினார்கள் என்பதற்கு வரலாறு சான்று பகர்கின்றது.

தண்டிக்கப்பட வேண்டியது தவறிழைத்தவர்களே அன்றி அவர்களின் சமுதாயமல்ல.
இன்று நாட்டில் நடந்தேறிய அசம்பாவிதங்களில் தொடர்புடையவர்களாக(சந்தேகத்தின் பேரில்) இனங்காட்டப்படவர்களில் சிலர் இஸ்லாமியப்பெயர் தாங்கியிருப்பவர்களென்பதற்காக ஒட்டுமொத்த சமுதாயத்தையும் அதே கண்கொண்டு நோக்கமுடியாது.
இன்றுவரை எதுவித பேதமுமின்றி இத்தாய்த் திரு நாட்டில் ஒற்றுமையைக் கடைபிடித்து வாழ்ந்த சமூகம் நாம்.
ஒரு சிலரின் இவ் ஈனச்செயலிற்கு பலியாகத் தேவையில்லை.

மதத்தின் பெயர்தாங்கி மதத்தையே கொச்சைப்படுத்துவது போல் மனிதம் சிதைத்த ,சிதைக்கவிருக்கிற அனைவருக்கும் எதிராக ஒற்றுமையுடன் எதிர்த்து நிற்போம்.இதற்குப் பின்ணணியில் உள்ள சதிவலைகளை முறியடிப்போம்.

ஆம்! முஸ்லிம்கள் என்றவகையில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்திற்காக நாம் ஒரு போதும் சோர்ந்து போகத் தேவையில்லை...

ஏனெனில் இவ்வாறான ஒரு விடயத்தை புரிபவரை இஸ்லாம் ஆதரிக்கவுமில்லை.
இப்படிப்பட்டவர்களுக்கு இஸ்லாத்தில் இடமும் இல்லை. அவர்களுக்கு இஸ்லாமிய சாயல் பூசவும் முடியாது. 
மனிதாபிமான அடிப்படையில் இந்த மிலேச்சத்தனமான செயலை வன்மையாகக் கண்டிக்கிறோம்.

இதைவிட்டு விட்டு தொடர்புடையவர்கள் என்று  சந்தேகிக்கப்படுவர்கள் சார் சமூகத்தவர்களின் உரிமைகளை முடக்குவற்கும், அவர்களை சமூக நீரோட்டத்திலிருந்து ஒதுக்கி, சந்தேகக் கண் கொண்டு பார்த்து அவர்களை விரக்தி அடையச்செய்யும் வரலாற்றுத் தவறை  எவரும்செய்து விட இடமளித்து விட க்கூடாது.
உரியவர்கள் தண்டிக்கப்படுவது நியாயம் ,அதுவே தர்மம். அதை விட்டுவிட்டு எதுவும் அறியா  அப்பாவிகளுமா தண்டணை அனுபவிக்க வேண்டும்?.

யதார்த்தமாக நம்  முஸ்லிம் சமுதாயத்திற்கு ஒன்றைக் கூறியே ஆக வேண்டும் 
நம்மில் சிலரின் கவனமெல்லாம் குற்றவாளிகளாக சந்தேகிக்கப்படுபவர்கள், "முன்பு  எந்த அமைப்பைச்சார்ந்திருந்தனர்?" அவர்கள் "எக் கொள்கை கோட்பாட்டைக் கொண்டிருந்தனர்?" என்று வாதாடுவதிலும், கொள்கைவாதம் புரிவதிலுமே காணப்படுகிறது. நம்மை நாமே துண்டாடுகின்ற அன்னிய சக்திகளை குளிர் காய வைக்கும் செயற்பாடுகளுக்கு உரமூட்டுவதாக நம் நகர்வுகளை அமைத்துக்கொள்ளக் கூடாது.

அங்கே ஆயிரம் உயிர்கள் பறிக்கப்பட்டு நாடே துக்கத்தில் இருக்கையில் நமக்குள் ஏன் தேவையற்ற விவாதம்?
தேவை அதுவல்ல நாம் ஒன்றுபட வேண்டும் நம் சமூகத்தை காக்க வேண்டும். அன்னிய சக்திகளின் எமக்கெதிரான சதிகளையும், சக்திகளையும், கோஷங்களையும் முறியடிக்க கை கோர்த்து ஒன்றாகப் போராட வேண்டும்.

பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியைப் பெற்றுக் கொடுக்கவும், குற்றமிழைத்தவர்களுக்கு அதி உச்ச  தண்டனையை  கொடுக்க அரசை வலியுறுத்தவும்  வேண்டும்.
அது மாத்திரமின் நம் சமூக இளைஞர்கள் மற்றும் ஏனைய இளைஞர்கள் இவ்வாறான தவறுகளின் பால் ஈர்க்கப்படாமலிருக்கவும் அவர்களை நெறிப்படுத்தி நேர் வழியின் பால் இட்டுச் சென்று இத்திரு நாட்டையும், மக்களையும் நேசிக்கும் ஓர் சிறந்த எதிர்கால  மனிதாபிமான இஸ்லாமிய சமுதாயத்தை உருவாக்க வேண்டும்.

நம்  சமூகத்தலைமைகள் தம் மத்தியிலுள்ள பேதங்களை மறந்து வினைத்திறனான  வியூகங்களை வகுக்க வேண்டிய கடமைப்பாடு உடையவர்களாக மாறவேண்டும் என்பதை மறந்து விடக்கூடாது.
இதுவே உசிதமானதும் ஆரோக்கியமானதும் கூட.

அதைவிடுத்து அனாவசியமான வாதப்பிரதிவாதங்களில் ஈடுபடுவதால் நாம் என்ன இலாபம் அடையப் போகிறோம்? இன்னுமின்னும் நம்மை நாமே துண்டாடப் படுவதற்கு திட்டம் தீட்டிக் கொடுக்கப் போவது மாத்திரமே எஞ்சப் போகிறது.
*"என்னுடைய மகள் பாத்திமா தவறிழைத்தாலும் அவர் மீதும் தண்டனை (பாரபட்சமின்றி)  நிறைவேற்றப்படும்"* என்று கூறிய நபிகளாரின் (ஸல்) சமுதாய வாரிசுகள் நாம்.

ஆம்! அதற்கு முன்னுதாரணமாக நடக்க வேண்டிய தருணம்தான் இது.
நமது கவனயீனம் நாளை நம்மையே நாம் தொலைத்து , அடுத்தவர்கள் நம் உரிமைகளைக் காவு கொள்ளும் துர்ப்பாக்கிய நிலைக்கு இட்டுச்  செல்ல வழிவகுக்கும்.

எனவே தேவையற்ற விடயங்களை விவாதித்து நேரத்தை வீணாக்கி ,மக்களை திசை திருப்பாதீர்கள்.நமக்குள் பிளவுபடாதீர்கள்.பிளவுகளை உண்டு பன்னாதீர்கள்.

*وَأَطِيعُواْ ٱللَّهَ وَرَسُولَهُۥ وَلَا تَنَٰزَعُواْ فَتَفۡشَلُواْ وَتَذۡهَبَ رِيحُكُمۡۖ وَٱصۡبِرُوٓاْۚ إِنَّ ٱللَّهَ مَعَ ٱلصَّـٰبِرِين*َ

*மேலும், நீங்கள் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் கீழ்ப்படியுங்கள். (உங்களுக்குள் ஒற்றுமையாயிருங்கள்.) உங்களுக்குள் தர்க்கித்துக் கொள்ளாதீர்கள். அவ்வாறாயின், நீங்கள் தைரியத்தை இழந்து, உங்கள் ஆற்றல் போய்விடும். ஆகவே, நீங்கள் (சிரமங்களைச் சகித்துக் கொண்டு) பொறுமையாக இருங்கள். நிச்சயமாக அல்லாஹ் பொறுமையாளர்களுடன் இருக்கிறான்.*

சூறா அல் அன்பால் அத்தியாயம் (08) வசனம் (46)

💐💐💐💐💐💐💐💐

*நீதிக்காக குரல் கொடுப்போம்.*
*மனிதத்திற்காக செயற்படுவோம்.*
*ஒற்றுமைக்காக* *ஒன்றிணைவோம்.*

4 comments:

  1. welcome news for muslim society to select the right path. but how many of ours is having knowledge to understand god & bad, only few percentage of our people have the basic knowledge & interest in the society and the country. otherwise how they interested on ISIS which is only for Iraq & Syria, which already lost their ideology and fought each other among own brothers finally bloodshed in all over the middle east, Syria & Iraq the very much loved places of our prophet (Sal). and at last they lost their goal or objective. now innocent women & children remaining with suffering. We pray not to happen in our country.

    ReplyDelete
  2. Dear Sister, can translate your Article Sinhala&English language and publish them media it's too worth for our society
    Allah gives to you more knowledge.

    ReplyDelete
  3. Insha Allah I will try my best.Jazakallah

    ReplyDelete

Powered by Blogger.