Header Ads



கோத்தா மீதான வழக்குகள் – வெளியாகும் குழப்பமான தகவல்கள்

கலிபோர்னியா மாவட்ட நீதிமன்றத்தில் பகிரங்க பதிவேட்டில் கோத்தாபய ராஜபக்சவுக்கு எதிராக அகிம்சா விக்ரமதுங்க தாக்கல் செய்துள்ள வழக்குத் தொடர்பான எந்த ஆதாரங்களும் இல்லை என்று அமெரிக்க அதிகாரி ஒருவரை மேற்கோள்காட்டி கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

லசந்த விக்ரமதுங்க படுகொலை தொடர்பாக கோத்தாபய ராஜபக்சவிடம் இழப்பீடு கோரி, அகிம்சா விக்ரமதுங்க சிவில் பாதிப்பு வழக்கை கலிபோர்னியா மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார் என்று தகவல்கள் வெளியாகியிருந்தன.

சான்பிரான்சிஸ்கோவைச் சேர்ந்த நீதிக்கும் பொறுப்புக்கூறலுக்குமான நிலையத்தினால் இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டதாக கூறப்பட்டது.

எனினும், குறித்த சட்ட நிறுவனமோ, அகிம்சா விக்ரமதுங்கவோ, இதுபற்றி கருத்து எதையும் வெளியிடவோ, அறிக்கைகளை வெளியிடவோ இல்லை.

எனினும், அகிம்சா விக்ரமதுங்கவின் வழக்குத் தொடர்பான அறிவித்தல் தமக்கு வழக்கப்பட்டது குறித்து கோத்தாபய ராஜபக்ச தன்னிடம் கூறினார் என அவரது உறவினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, கோத்தாபய ராஜபக்சவுக்கு எதிராக சித்திரவதைகளால் பாதிக்கப்பட்ட தமிழர் ஒருவரின் சார்பில் தாங்கள் வழக்குத் தொடர்ந்து, அவருக்கு அதுபற்றிய அறிவித்தலை வழங்கியதாக அனைத்துலக உண்மைக்கும் நீதிக்குமான திட்டம் நேற்று அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.