Header Ads



கல்முனையை 'ஸ்மார்ட் சிட்டி'யாக மாற்றும் ஹரீஸ்

கல்முனை மாநகர பிரதேசத்தை ஸ்மார்ட் சிட்டியாக அபிவிருத்தி செய்வது தொடர்பான உயர்மட்ட கலந்துரையாடல் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் தலைமையில் கல்முனை மாநகர முதல்வர் அலுவலகத்தில் இன்று (12) சனிக்கிழமை நடைபெற்றது. 

இவ்வுயர்மட்ட கலந்துரையாடலில் ஆசிய அபிவிருத்தி வங்கியின் உப நகரங்கள் திட்டத்தின் ஆலோசகர் செட்டி, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சின் கருத்திட்டங்களுக்கான மேலதிகச் செயலாளர் எம்.எம். நயிமுடீன், கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம். றகீப், கல்முனை மாநகர ஆணையாளர் எம்.சி. அன்சார், கணக்காளர் ஏ.எச். தஸ்தீக், பிரதி முதல்வர் காத்தமுத்து கணேஷ், இராஜாங்க அமைச்சரின் பொதுசன தொடர்புகள் அதிகாரி எம்.எஸ். அலிகான் ஸாபி, இராஜாங்க அமைச்சரின் இணைப்புச் செயலாளர் நௌபர் ஏ. பாவா, நகர அபிவிருத்தி அதிகார சபையின் அதிகாரிகள், கல்முனை மாநகர தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர். 

இரண்டாம் நிலை நகரங்களை அபிவிருத்தி செய்யும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் வேலைத்திட்டத்தின் கீழ் 2000 மில்லியன் ரூபா முதல் கட்ட நிதி ஒதுக்கீட்டில் கல்முனை, சாய்ந்தமருது, நற்பிட்டிமுனை, சேனைக்குடியிருப்பு, பாண்டிருப்பு, மருதமுனை, பெரியநீலாவணை போன்ற கல்முனை மாநகர பிரதேசத்தில் 16 இற்கும் மேற்பட்ட அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்படவுள்ளன.  

அந்தவகையில் 5 தளங்களைக் கொண்ட கல்முனை மாநகர சபைக் கட்டடம், கல்முனை நகரில் நவீன வசதிகளுடன் கூடிய சொப்பிங் கொம்லக்ஸ் உள்ளிட்ட புதிய பஸ்தரிப்பு நிலையம், சாய்ந்தமருது வொலிவேரியன் பிரதேசத்தில் பல்தேவைக் கட்டடம், கல்முனை நகர மண்டபத்தை மீள் நிர்மாணம் செய்தல், கல்முனை பொலிஸ் நிலையத்தின் பகுதியளவான காணியில் பல்தேவைக் கட்டம், கல்முனை பலநோக்கு கூட்டுறவு சங்க வளாகத்தில் பழவகை மற்றும் மரக்கறி விற்பனைத் தொகுதி, சேகை;குடியிருப்பில் கலாசார மண்டபம், நற்பிட்டிமுனையில் கடைத்தொகுதி, நற்பிட்டிமுனை மயானத்தின் சுற்றுமதில் அமைத்து அழகுபடுத்தும் வேலைத்திட்டம், பாண்டிருப்பு விளையாட்டு மைதான அபிவிருத்தி, மருதமுனை மக்கள் மண்டப அமைவிடத்தில் கடைத்தொகுதியுடன் கூடிய கேட்போர்கூடம், பாண்டிருப்பில் சனசமூக நிலையம், பெரியநீலவணையில் கலாசார மண்டபம், பாண்டிருப்பு மயான சுற்றுமதில் மற்றும் இறுதிக் கிரியை மேற்கொள்வதற்கான மண்டபம், பெரியநீலாவணையில் பூங்கா, கல்முனை குறுந்தையடி மைதான அபிவிருத்தி மற்றும் வீட்டுத்திட்ட வளாகத்திலுள்ள பல்தேவைக்கட்டடத்தை புனரமைத்தல், கல்முனை வாடி வீட்டு பிரசேத்தில் கடற்கரை பூங்கா அமைத்தல் போன்ற பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.  

அதற்கமைவாக குறித்த பிரதேசங்களுக்கு இராஜாங்க அமைச்சர் தலைமையிலான குறித்த குழுவினர் கள விஜயம் மேற்கொண்டு அவ்வமைவிடங்களை பார்வையிட்டனர்.   

சிறந்த திட்டமிடலுடன் பாரியளவிலான இத்திட்டங்களை முன்னெடுப்பதன் ஊடாக கல்முனை மாநகரம் 30 வருடங்கள் முன்னோக்கிய அபிவிருத்தியினை அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன்மூலம் கல்முனை மாநகர பிரதேசத்தில் பௌதீக அபிவிருத்தியுடன் கூடிய தொழில்நுட்ப விருத்தியும் ஏற்படவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். 

(அகமட் எஸ். முகைடீன்)        

No comments

Powered by Blogger.