Header Ads



போதைப்பொருள் கடத்தல்கார்களிடமிருந்து நாட்டை விடுவிக்க, முப்படைகளுக்கும் ஜனாதிபதி அழைப்பு

30 வருட கொடூர பயங்கரவாதத்தை தோற்கடிப்பதற்கு முன்னெடுக்கப்பட்ட யுத்தத்திற்கு நிகரான யுத்தம் ஒன்றை கொடூர போதைப்பொருள் கடத்தல்கார்களிடமிருந்து நாட்டை விடுவிப்பதற்கு முன்னெடுக்க வேண்டியுள்ளதென ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார்.

அன்று வெளிப்படுத்திய திறமைகள், துணிச்சல் மற்றும் வீரத்தை இந்த சிரேஷ்ட மானிடப் பணிக்காக நிறைவேற்றுவதற்கு முன்வருமாறு முப்படையினர், பொலிஸார், சிவில் பாதுகாப்பு அதிகாரிகள் அனைவருக்கும் அழைப்பு விடுத்த ஜனாதிபதி, அதற்கு தலைமைத்துவத்தை வழங்க தான் தயாராக உள்ளதாகவும் தெரிவித்தார்.

இன்று முற்பகல் கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டரங்களில் இடம்பெற்ற போதைப்பொருள் ஒழிப்பு நிகழ்ச்சித்திட்டத்தில் விசேட திறமைகளை வெளிப்படுத்திய பொலிஸ் அதிகாரிகளை பாராட்டுவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஜனாதிபதி பாராட்டு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி அமேற்கண்டவாறு தெரிவித்தார்.

போதைப்பொருள் கடத்தல்காரர்கள் மற்றும் பல்வேறு சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றவர்களினால் பொலிஸ் பொறுப்பதிகாரிகளுக்கு இடமாற்றம் வழங்கி அனுப்பி வைத்த யுகத்திற்கு தான் முற்றுப்புள்ளி வைப்பதாகவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

பொலிஸ் அதிகாரிகளுக்கு இடமாற்றங்கள் வழங்கப்படும்போது வருடாந்த இடமாற்றம் கொள்கை சார்ந்த இடமாற்றங்கள் என்பவற்றுக்கு ஏற்ப வழங்கப்படுவதைப்போன்று அதற்கு வெளியில் மேற்கொள்ளப்படும் இடமாற்றங்களின்போதும் அந்த இடமாற்றத்திற்கான காரணம் இடமாற்ற கடிதத்திலேயே குறிப்பிடப்பட வேண்டுமென்ற பணிப்புரையை தான் விடுப்பதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

அவ்வாறு செய்யப்படுவது அனைத்து பொலிஸ் அதிகாரிகளும் தாய் நாட்டுக்காக தமது பணிகளை நேர்மையாக நிறைவேற்றுவதற்காகவாகும் எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி அவர்கள், ஜனாதிபதி என்ற வகையிலும் பொலிஸாருக்கு பொறுப்பான அமைச்சர் என்ற வகையிலும் தான் அனைத்து சந்தர்ப்பங்களிலும் நேர்மையாக கடமையாற்றும் அதிகாரிகளை பாதுகாப்பதாகவும் குறிப்பிட்டார்.

ஊழல் மற்றும் கடத்தல்காரர்களின் கட்டளையின்பேரில் எந்தவொரு பொலிஸ் அதிகாரியும் இடமாற்றத்திற்குள்ளானால் அல்லது ஏதேனும் சவல்களுக்கு அல்லது தனிப்பட்ட பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க நேர்ந்தால் அதுபற்றி தனக்கு தனிப்பட்ட முறையில் தெரிவிப்பதற்கு தேவையான முறைமையை வகுத்து விசேட பிரிவொன்றை தாபிப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

அதேபோன்று போதைப்பொருளை பயன்படுத்துகின்றவர்களுக்கு புனர்வாழ்வளிக்கும் அதிகார சபை ஒன்றை தாபிப்பது குறித்து புதிய அமைச்சரவை பத்திரமொன்றை நாளைய தினம் அமைச்சரவைக்கு சமர்ப்பிப்பதாக குறிப்பிட்ட ஜனாதிபதி அவர்கள், பல்வேறு துறைகளில் உள்ள நிபுணர்களை உள்ளடக்கிய வகையில் இந்த அதிகார சபை எதிர்வரும் ஒரு சில வாரங்களுக்குள் தாபிக்கப்படும் என்றும் ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.

போதைப்பொருள் ஒழிப்பை தேசிய முக்கியத்துவம்வாய்ந்ததொரு தேவையாக கருதி அதற்கு வழங்கக்கூடிய ஆகக்கூடிய முன்னுரிமையை வழங்குவதாகவும் அதற்கான சட்டத்தை நடைமுறைப்படுத்துவதோடு சட்டவிரோத போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு மரணதண்டனை வழங்கப்பட வேண்டுமென்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

அரசாங்கம் என்ற வகையில் சிறப்பாக நடவடிக்கை எடுக்கும்போது மனித உரிமைகளை முன்வைத்து அந்த குற்றவாளிகளை பாதுகாப்பதற்கு சிலர் நடவடிக்கை எடுப்பதாக குறிப்பிட்ட ஜனாதிபதி , அவர்கள் செய்வது முழு தேசத்தினதும் எதிர்காலத்திற்கு செய்யும் துரோகமாகும் என்றும் குறிப்பிட்டார்.

தான் அண்மையில் மேற்கொண்ட பிலிப்பைன்ஸ் மற்றும் சிங்கப்பூர் விஜயங்களின்போது இலங்கையில் போதைப்பொருள் ஒழிப்பு நிகழ்ச்சித்திட்டங்களுக்கான தொழிநுட்ப உதவியை வழங்குவதற்கு அந்நாடுகள் இணக்கம் தெரிவித்துள்ளதாக குறிப்பிட்ட ஜனாதிபதி , உலகில் உள்ள அநேக நாடுகள் பயன்படுத்தும் அந்த தொழிநுட்ப அறிவை பல தசாப்தங்களுக்கு முன்னர் இலங்கைக்கு பெற்றுக்கொள்வதற்கு அவ்விடயத்திற்கு பொறுப்பாக இருந்த அரசியல்வாதிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்பதுடன், இன்று நாட்டுக்கு பேரழிவை கொண்டுவந்திருக்கும் போதைப்பொருள் பாவனை பரவி வருவதற்கு அனைவரும் பதில்கூற வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

மேலும் ஆபத்தான போதைப்பொருட்களை அறிந்துகொள்வதற்கு அந்த நவீன தொழிநுட்ப உபகரணங்கள் விரைவாக இலங்கை பொலிஸ் திணைக்களத்திற்கு பெற்றுக்கொள்வது பற்றி கண்டறிவதற்காக தான் பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கு பணிப்புரை வழங்கியுள்ளதாகவும் தெரிவித்தார்.

போதைப்பொருளிலிருந்து விடுபட்ட நாட்டை கட்டியெழுப்பும் பரந்த நோக்கை அடைந்துகொள்வதற்கு அமைச்சின் செயலாளர் முதல் தொழிலாளர்கள் வரையில் அனைத்து அரசாங்க ஊழியர்களும், சமயத் தலைவர்கள் உள்ளிட்ட பிரஜைகளும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டியதன் அவசியத்தை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, புதுப்பொழிவுடன் முன்னெடுக்கப்படும் இந்த தேசிய நிகழ்ச்சித்திட்டத்துடன் கைகோர்க்குமாறு அனைவருக்கும் அழைப்பு விடுத்தார்.

நாட்டின் அனைத்து பிரஜைகளினதும் சுதந்திரமானதும் அமைதியானதுமான இருப்பை உறுதி செய்வதற்கு இலங்கை பொலிஸ் சேவையின் நோக்கத்தை அறிந்து தெளிந்த அறிவுடனும் தொழில் முதிர்ச்சியுடனும் போதைப்பொருள், மதுபானம் மற்றும் கட்டமைக்கப்பட்ட குற்றங்களை தடுத்தல், சுற்றி வளைத்தல் மற்றும் பிரஜைகளுக்கான விழிப்புணர்வினை வழங்கி முன்னெடுக்கப்பட்ட பணிகளுக்கும் ஜனாதிபதி அவர்களினால் 2015 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட “போதையிலிருந்து விடுதலை பெற்ற நாடு” என்ற எண்ணக்கருவை சாத்தியப்படுத்துவதற்கும் உயிரைப் பணயம் வைத்து அர்ப்பணிப்புடன் மேற்கொண்ட உன்னத பணியை பாராட்டி முழு தேசத்தினதும் கௌரவத்தையும் நன்றியையும் தெரிவித்து 1007 பொலிஸ் அதிகாரிகளுக்கு விசேட ஜனாதிபதி பாராட்டு சான்றிதழ்கள் வழங்கிவைக்கப்பட்டன.

இந்த நிகழ்வினை நினைவுகூரும் வகையில் ஜனாதிபதியினால் சில சான்றிதழ்கள் வழங்கிவைக்கப்பட்டன. இத்தகைய தோர் விருதுவிழா ஏற்பாடு செய்யப்பட்டது இதுவே முதற் தடவையாகுமென்பது குறிப்பிடத்தக்கது. 

No comments

Powered by Blogger.