Header Ads



7 மாணவர்கள் விவகாரம், சஜித்துக்கு முஸ்லிம் கவுன்சில் கடிதம் - பொறாமையே காரணம் என சுட்டிக்காட்டு

அநுராதபுரம், ஹொரவப்பொத்தான கிரலாகல தூபியில் ஏறி புகைப்படம் எடுத்த விவகாரம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தை சேர்ந்த 7 மாணவர்கள் தொடர்பிலும் மனிதாபிமான அடிப்படையில்  மன்னிப்பு வழங்குமாறு கோரிகை விடுத்து வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சர் சஜித் பிரேமதாசவுக்கு முஸ்லிம் கவுன்சில் ஒப் ஸ்ரீ லங்கா கடிதமொன்றை அனுப்பியுள்ளது. 

குறித்த புகைப்படம் 2018ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 5ம் திகதி அளவில் எடுக்கப்பட்ட புகைப்படம் எனவும், குறித்த தொல்பொருள் பகுதியில் இதுவொரு தொல்பொருள் அல்லது பௌத்த தளம் என பிரகடனப்படுத்தும் எந்தவொரு அறிவித்தல் பலகையும் காணப்படவில்லை எனவும், இந்த மாணவர்கள் தென்கிழக்கு பல்கலைக்கழக பொறியியல் துறை மாணவர்கள் எனவும் அவர்களில் இருவர் தமது இறுதிப் பரீட்சையில் முதல் வகுப்பு மாணவர்களாக தெரிவுசெய்யப்பட்டு வெளிநாட்டுப் பயிற்சிக்காக புலமைப்பரிசில் பெற்றவர்கள் எனவும் அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

மாணவர்களின் இந்த செயற்பாட்டை கண்டிப்பதோடு குறித்த சம்பவம் தொடர்பான மேற்குறித்த விடயங்களை தமது அவதானத்துக்குக் கொண்டுவருவதாக முஸ்லிம் கவுன்சில் ஒப் ஸ்ரீ லங்கா தலைவர் என். அமீன் கையொப்பமிட்டு அனுப்பியுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும், பல்கலைக்கழகத்தில் முதல் வகுப்பு மாணவர்களாக தெரிவுசெய்யப்பட்ட குறித்த மாணவர்களின் மீது கொண்ட பொறாமை காரணமாக இந்த விவகாரம் சமூக வலைத்தளங்களில் தூண்டி விடப்பட்டிருக்கலாம் என சந்தேகம் ஏற்படுவதாகவும் அந்தக் கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

இதேவேளை, முஸ்லிம் அல்லாதவர்கள் பலர் அதே தூபியில் ஏறி நின்று புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டிருந்தும் அவர்களுக்கெதிராக எந்தவித பொலிஸ் நடவடிக்கையும் மேற்கொள்ளப்படாமை தொடர்பிலும் அமைச்சரின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டுள்ள அதேவேளை, அது தொடர்பான புகைப்படங்களும் அமைச்சருக்கு வாட்சப் மூலம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. 

குறித்த மாணவர்கள் தமது தொழில் ரீதியான வாழ்க்கையை ஆரம்பிக்கும் இந்த சந்தர்ப்பத்தில் மனிதாபிமான அடிப்படையில் அவர்களுக்கு மன்னிப்பு வழங்குமாறு கோரிக்கை விடுப்பதோடு, அவர்கள் செய்த குற்றத்துக்கு குறித்த மாணவர்கள் பொது மன்னிப்பு கோர வேண்டும் எனவும் ஒரு மாத காலத்துக்கு சமூக சேவை செய்ய வேண்டும் எனவும் முஸ்லிம் கவுன்சில் ஒப் ஸ்ரீ லங்கா வலியுறுத்தியுள்ளது. 

இதேவேளை, இவ்வாறான சம்பவங்கள் மீண்டும் மீண்டும் இடம்பெறாமல் இருக்க, நாடு முழுவதும் தொல்பொருள் அல்லது மத தளங்களை அடையாளம் காணும் வகையில் மும்மொழியிலும் அறிவித்தல்களைக் காண்பிப்பதை உறுதிப்படுத்துமாறும் குறித்த கடிதத்தின் ஊடாக வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சர் சஜித் பிரேமதாசவிடம் முஸ்லிம் கவுன்சில் ஒப் ஸ்ரீ லங்கா கோரிக்கை விடுத்துள்ளது. (நுஸ்கி முக்தார்) 

3 comments:

  1. We can't understand that why you are asking favour from these politicians for the release of these students. It is good for every body if we can get established the innocency through legal process.

    ReplyDelete
  2. Yes. that`s true. Who is Sajith?

    ReplyDelete

Powered by Blogger.