Header Ads



ஞானசாரக்களின் பயங்கரமான அரசியல்

இங்கு ஞானசாராக்கள் எனும் குறியீட்டு பெயரால் பயன்படுத்தப்படுவது இனவாதத்தின் நவீன வடிவத்தையாகும். இந்த நாட்டின் இனவாத அரசியலின் ஆரம்பம் தற்காலத்தில் இருக்கும் ஞானசாராக்களால் அல்ல, சுதந்திரத்திற்கு பின்னர் ஆரம்பமான தேசிய அரசியலின் ஆரம்பத்துடனாகும். அது ஞானசாரக்களின் தனிப்பட்ட தேவைக்காக அல்ல, முதலாளித்துவ வகுப்பினரின் அரசியல் தேவையாகும். காலனித்துவத்தின் தேவையாகும். முதலாளித்துவ அரசியலின் கைகளாலே இதன் பிறப்பு இடம்பெறுகின்றது.

நவீன முதலாளித்துவ அரசியல் உலக பூராகவும் வளரும் பொழுது அதற்கெதிராகத் தோன்றியதுதான் வகுப்புவாத எதிர்ப்பலையாகும். சமூகம் முதலாளி, தொழிலாளர் என்று இரண்டாக பிரிந்து தொழிலாளர்கள் வகுப்புவாதத்தை முன்வைத்து போராட தொடங்கினர். இதன் விளைவு சமூகம் மேல் வகுப்பினர் , கீழ் வகுப்பினர் என்று தெளிவாக பிரிக்கப்பட்டமையாகும்.

இந்த வகுப்பு பிரிவை - வகுப்பு வெறுப்பை , வகுப்பு போராட்டத்தை அழிப்பதற்கு முதலாளித்துவ அரசியல் விதைத்த கிருமி தான் இனவாதமாகும். இந்தக் கிருமி சமூகம் பூராகவும் பரவ அவசியமான முழு அரசியல், கலாசார செயற்பாடுகளை அவர்கள் முன்னெடுப்பர். அதன் விளைவு வகுப்புவாதப் பிரிவு இல்லாமல் சென்று மேல்மட்ட வகுப்பினரும் கீழ்மட்ட வகுப்பினரும் ஓர் அணியில் இணைவதாகும். இவ்வாறு சமூகம் இனவாதத்தால் பிரிவது மொழி மற்றும் மதத்தை முன்னிலை படுத்தியாகும். கலாசாரமும் இதற்கு தொடர்பாகும். ஒரு மொழியை பேசக்கூடிய, ஒரு மதத்தை பின்பற்றக்கூடிய கீழ்மட்ட வகுப்பினர், மத்திய தர வகுப்பினர், மேல் மட்ட வகுப்பினர் என்று அனைவரும் ஒரு இனமாக ஒரு அணியில் இணைவர். முதலாளித்துவ வகுப்பின் கட்சிகளால் வேண்டுமென்றே பல இனவாத இயக்கங்கள் தோற்றுவிக்கப்படுகின்றன. இந்த இயக்கங்களுக்கு அனைத்து வகுப்பினரும் இணைந்து கொள்வர். பரஸ்பரம் உதவி செய்துகொள்வர். இந்த அணியை பலப்படுத்த முதலாளித்துவம் கஞ்சத்தனமின்றி செலவழிக்கும்.

பிரித்தானிய காலனித்துவத்தால் விடுவிக்கப்பட்ட அனைத்து நாடுகளும் இந்தப் பயங்கரமான முதலாளித்துவ அரசியல் தந்திரத்திற்குப் பலியாகின. ஆக்கிரமிப்பாளர்கள் நாடுகளுக்கு சுதந்திரத்தை வழங்கும்போது இதனை இலவசமாகப் பரிசளித்தனர்.

ஆக்கிரமிக்கப்பட்ட காலப்பகுதியலே இனவாதம் தூண்டப்பட்டு இனவாதத்தை ஒருங்கிணைப்பு செய்வதை ஆரம்பித்தனர். இந்த நிலையை இந்தியா, பாகிஸ்தான், இலங்கை போன்ற நாடுகளில் காணமுடியும். இந்தியா, பாகிஸ்தானில் அது இந்து - இஸ்லாம் பிரிவினையாக தோற்றம் பெற்றது போல இலங்கையில் சிங்கள - தமிழ் பிரிவினையாக தோற்றம்பெற்றது. இலங்கையில் 1919 ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்ட இலங்கை தேசிய சங்கம் இரண்டாக பிரிந்து சிங்கள மகா சபையும் அகில இலங்கை தமிழ் சங்கமும் தோற்றுவிக்கப்பட்டன. இதன் முதல் விதையை இட்டவர்கள் ஆங்கிலேயர்களாவர். அவர்கள் முன்வைத்த யாப்பு சீர்திருத்தத்தில்  தேசிய பிரதிநிதித்துவம் இனங்களை பிரதிநிதித்துவம் செய்யும் வகையில் இன மற்றும் மொழி வேறுபாடுகளை மையமாக வைத்து உறுப்பினர்களை சேர்க்கும் திட்டமாகும். இது கட்டாயம் இனம், மொழி மற்றும் மதம் என்ற அடிப்படையில் இணைந்து இயங்க வழியமைத்தது.

1948 தேர்தலின் பிறகு இலங்கையின் தேசிய அரசுகளால் அரசியலில் வளர்க்கப்பட்டது ஆங்கிலேயரால் பரிசளிக்கப்பட்ட இனவாதக் கிருமியாகும். இனவாதப் புற்றுநோயாகும். 1948 இற்குப் பிறகு இடம்பெற்ற முதலாவது தேர்தல் 1956 தேர்தலாகும். அப்பொழுது இந்தக் கிருமி இலங்கை அரசியல் பூராகவும் பரவி இருந்தது. அப்பொழுது இடதுசாரிக் கட்சிகளால் தோற்றுவிக்கப்பட்ட வகுப்பு எதிர்ப்புவாதம் படிப்படியாக பலவீனப்படுத்தப்பட்டுக் கொண்டே சென்றதற்கு காரணம் இந்த கிருமியாகும். 1953 இல் அரசாங்கத்திற்கு எதிராக தொழிலாளிகள் ஆரம்பித்த போராட்டம் பலவீனப்படுத்தப்பட்டு சிங்கள மொழி போராட்டம் எனும் இனவாதப் போராட்டம் முன்னிலைப்படுத்தப்பட்டு அனைத்து வகுப்பினரையும் ஒரு மேடைக்கு கொண்டு வருவதற்கு முதலாளித்துவ கட்சிகளுக்கு 1956 ஆகும் பொழுது முடிந்தது.

ஆரம்பத்தில் முதலாளி வகுப்பு, தொழிலாளர் வகுப்பு என்று காணப்பட்ட பிரிவை சிங்கள - தமிழ் பிரிவுகளாக மாற்றி அவ்விரு இனங்களின் முதலாளிகள் மற்றும் தொழிலாளர்களை ஒரே அணியில் இணைக்க முடிந்தது. 1956 தேர்தலில் இரண்டு பிரதான கட்சிகளும் சிங்கள மொழியை அரசகரும மொழியாக்கும் திட்டத்தை பிரதானமாக முன்வைத்தே போட்டியிட்டனர்.

இன்றும் நாம் பாதிக்கப்பட்டிருப்பது இந்த இனவாத அரசியல் காரணத்தினால் தான். இன்றும் இந்த முதலாளித்துவ அரசியல் பயன்படுத்தவது இந்த இனவாத அரசியலை தான்.  "ஞானசாரக்கள்" இந்த எல்லாக் காலத்திலும் பயன்படுத்தப்பட்டுள்ளனர். பண்டாரநாயக்க மூலம் சிங்கள மொழியை அரசகரும மொழியாக்கியதும் , பிறகு அவரை கொலை செய்ததும் இந்த ஞானசாராக்கள் தான். பண்டாரநாயக்க  - செல்வநாயகம் உடன்படிக்கைக்கு எதிராக ஒன்றிணைந்து அலரி மாளிகையை முற்றுகையிட்டு பண்டாரநாயக்கவுக்கு இந்த உடன்படிக்கையை கிழித்தெரிய செய்ததும் இந்த ஞானசாராக்களே ஆவர்.

 பண்டாரநாயக்கவை சுட்டுக் கொலைசெய்த சோமாராம நீதிமன்றத்தில் குற்றத்தை ஒப்பு கொண்ட பிறகு இப்படி கூறினார்.  "எனக்கு அறிமுகமில்லாத, என்னுடன் கோபம் கொள்ளாத ஒருவரை நான் கொலை செய்தது என்னுடைய மொழி மீதும் , மதத்தின் மீதும் இனத்தின் மீதும் வைத்த பற்றே காரணம்" என்றார்.

ஞானசாரக்களின் அரசியல் அவ்வளவு பயங்கரமானது. அது கொலைகூட செய்யக்கூடிய அரசியல். வேறொரு இனமாக இருப்பது, வேறொரு மொழியை பேசுவது,  வேறொரு மதத்தை பின்பற்றுவது  கொலை செய்யப்பட வேண்டிய குற்றமாக அவர்கள் பார்க்கின்றனர்.

1958 இல் இடம்பெற்ற இனப்பிரச்சினையில் இதனை அவர்கள் உறுதிப்படுத்தினர்.

இந்த இனவாத முதலாளித்துவ அரசியல் அன்றுடன் முற்றுப்பெற வில்லை. அன்று முதல் இன்று வரை அதனை நிறுத்தாமல் தொடர்ந்து நடாத்திச் செல்வது அரசியல்வாதிகளின் பிரதான நிகழ்ச்சி நிரலாக இருக்கின்றது.

1977 ஜே.ஆர். அதிகாரத்திற்கு வருவதே இனவாதத்தை , மதவாதத்தை தனது பிரதானமான கோசமாக முன்வைத்தாகும். 1981 இல் யாழ்ப்பாண நூல் நிலையத்திற்கு தீ வைத்தது அவருடைய ஆதரவாளன் ஒருவன். 1983 இனப் பிரச்சினைக்கும் முழுப்பொறுப்பும் அவரை சாரும். இவை எல்லாவற்றிற்கும் அன்றிருந்த ஞானசாராக்கள் முன்வந்தனர்.

யுத்தம் முடிவு பெறும்வரை யுத்தத்தை யுத்தத்தால் முடிக்க வேண்டும் என்ற இடத்திற்கு அரசியலை நகரத்தி, யுத்தம் செய்பவர்களுக்கு ஆசிர்வாத நூல்களை கைகளில் கட்டி , இராணுவ வீரர்கள் யுத்தத்தில் கொலை செய்வது தேசிய வீர செயல் என்ற நிலையை ஏற்படுத்தியது ஞானசாராக்கள் ஆவர். இதுவும் தீவிர இனவாதத்தின் இன்னொரு பக்கமாகும்.

யுத்தம் முடிந்த பிறகு ஞானசாராக்கள் ஓய்வு பெறவில்லை. மீண்டும் தமிழ் விரோத இனவாதத்தை நடாத்திச்செல்ல முடியாத காரணத்தினால் புதிய இனவாதப் போராட்டத்தை ஆரம்பித்தனர். அது முஸ்லிம் எதிர்ப்பு போராட்டமாகும். இதனை ஆரம்பித்தது அப்பொழுது முதலாளித்துவ அரசியலில் இருந்தவர்களாவர். அதனை நாடு பூராகவும் எரியவிட்டவர்கள் இந்த ஞானசாராக்களாவர்.  ஆட்சியாளர்கள் இனவாத பிக்குகளின் இயக்கங்களை வளர்த்து பணம் - வாகனம் அரச அனுசரணையில் வழங்கி இந்த இனவாதத்தை வளர்த்ததை அக்காலத்தில் நாம் அவதானித்தோம். "ஹலால்" பிரச்சினை ,  "கருத்தடை மாத்திரை"  பிரச்சினை என்ற வகையில் முஸ்லிம் விரோதத்தை அவர்கள் புதிதாக உருவாக்கினர். பின்னர் அது மிகப்பெரிய இன மோதலுக்கு இட்டுச்சென்றதை தர்கா நகர் , அம்பாறை , திகன பிரதேசங்களில் கண்டோம்.

இவ்வாறு 1956 முதல் 2018 வரை இந்த இனவாத முதலாளித்துவ அரசியலுக்கு பிரதானமாக பங்களிப்பு செய்தது ஞானசாரக்கள் எனும் இனவாத பிக்குகளாவர். எந்தவொரு அரசியல் சீர்திருத்தத்தை கொண்டுவந்தாலும் அதனை எதிர்ப்பது எதிர்க்கட்சியின் இயல்பாகும். அதனை இலகுவாக மக்கள் எதிர்க்கும் மனநிலையை ஏற்படுத்துவது "நாட்டை பிரிக்கிறார்கள்" என்ற கோஷத்தின் மூலமாகும். புதிய யாப்பில் 20ஆவது சீர்திருத்த சட்டத்தை இவர்கள் எதிர்ப்பதும் 1956 – 66 – 77 – 83 -2000 போன்ற அனைத்து கால கட்டங்களிலும் இதனை பயன்படுத்தியமை நாம் அவதானித்தோம்.

இதன்மூலம் தெளிவாகும் விடயம் இந்த இனவாத பிக்குகள் எப்பொழுதும் சேவை செய்வது முதலாளித்துவத்திற்கும் காலனித்துவத்திற்கும் என்பது தெளிவான விடயம். முதலாளிகளுக்கும் தொழிலாளர்களுக்கும் இடையிலான மோதலை பலவீனப்படுத்தி இனங்களுக்கிடையிலான மோதலை உருவாக்குகிறார்கள்.

இன்று எமது நாட்டில் இடதுசாரி அரசியலை, கீழ்மட்ட மக்களின், தொழிலாளர் வகுப்பின் அரசியல் பலவீனப்பட பிரதான காரணம் இந்த இனவாத அரசியல் காரணத்தினாலாகும்.

இன்று இடதுசாரி மற்றும் தொழிலாளர்களின் அரசியலில் பிரதான எதிரி இனவாத அரசியல் என்பதை புரிந்துகொள்ள வேண்டும். இன்று வறுமை கோட்டிற்கு கீழே வாழும் தொழிலாளர்கள் , விவசாயிகள்கூட முஸ்லிம் விரோத இனவாத அரசியலில் முதலாளித்துவவாதிகளுடன் ஓர் அணியில் இணைந்து கொண்டுள்ளனர். இது ஞானசாராக்களின், முதலாளித்துவ அரசியலின் வெற்றியாகும். இதனை இடதுசாரிகள் நன்கு புரிந்து கொள்ள வேண்டும். தீவிரமான கருத்து ரீதியான போராட்டத்தை இனவாதத்திற்கும் - மூடநம்பிக்கைகளுக்கு எதிராக ஆரம்பிக்க வேண்டும். இன்று இடதுசாரி அரசியல் முன்னிலைப்படுத்த வேண்டிய முக்கியமான விடயம் இது.

விவசாய பிரச்சினை, ஊதிய பிரச்சினை, வரி பிரச்சினை, வாழ்க்கை செலவு அதிகரிப்பு போன்ற மக்களின் பொதுவான அடிப்படை பிரச்சினைகள் அனைத்தும் புதைக்கப்பட்டு ஞானசார சிறைவைக்கப்பட்டது பாரிய தேசியப் பிரச்சினையாக மாறியுள்ளது. இனவாத அரசியல் என்பது மக்களின் பிரச்சினைகளை புறக்கணித்துவிட்டு முதலாளித்துவத்தை பாதுகாக்கும் அரசியலாகும். மக்கள் அரசியலில் முக்கியத்துவம் அளிக்க வேண்டிய பிரதான விடயம் இந்த இனவாதத்தை தோல்வியடையச் செய்வதாகும்.

-சிங்களத்தில் : சார்ள்ஸ் தயானந்த, தமிழ் சுருக்கம் : சப்ராஸ் சம்சுதீன்

No comments

Powered by Blogger.