Header Ads



கோட்டாபய சொந்த நாட்டுக்கு ஓடவேண்டும் - சிங்கள முஸ்லிம் முரண்பாட்டுக்கு முயற்சி

கோட்டாபய ராஜபக்‌ஷ ஐக்கிய தேசியக் கட்சி அமைச்சர்களைப் போன்று சுய கௌரவம் உள்ளவராயின் மோசடிகளுக்குப் பொறுப்பேற்று தனது சொந்த நாட்டுக்குத் திரும்ப வேண்டும் என நிதி மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர சவால் விடுத்துள்ளார். பாதுகாப்புச் செயலாளராகவிருந்த காலத்தில் கோட்டாபய ராஜபக்‌ஷவினால் மேற்கொள்ளப்பட்ட மோசடிகள் ஒவ்வொன்றாக பகிரங்கப்படுத்தப்படும். கதிர்காமத்தில் அவருக்குச் சொந்தமான சொகுசு வீடு குறித்து பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தகவல்களை வெளிக்கொண்டுவந்துள்ளார். உண்மையில் அவருக்கு சுய கௌரவம் இருந்தால் கோட்டாபய தனது சொந்த  நாட்டுக்குத் திரும்பவேண்டும் எனவும் அமைச்சர் கூறினார்.

'சத்ய' (உண்மை) என்ற தொனிப் பொருளில் ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடகப் பிரிவு அங்குரார்ப்பண நிகழ்வு கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் நேற்று நடைபெற்றது.

ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடகப் பிரிவின் பிரதானியும், கட்சியின் பேச்சாளருமான அமைச்சர் ஹரின் பெர்னான்டோ தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெற்றது. இதில் கருத்துத் தெரிவித்த போதே அமைச்சர் மங்கள சமரவீர இதனைத் தெரிவித்தார்.

கோட்டாபய ராஜபக்‌ஷவின் மோசடிகள் தொடர்பில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் தான் வெளியிட்டிருந்த ஊடக அறிக்கையை சிங்கள பத்திரிகைகள் வெளியிடவில்லை. கோட்டாபயவை திருடர் எனக் கூறுவதற்கு அவர்கள் அஞ்சுவதாகவும் அமைச்சர் குற்றஞ்சாட்டினார்.

அதேநேரம், 2015 ஜனவரி 8ஆம் திகதியின் பின்னர் 100 வீத ஜனநாயகத்தை உறுதிப்படுத்துவதற்கு அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்பட்டுள்ளது. முதிர்ச்சிமிக்க ஜனநாயக நாடாக இலங்கையை முன்னேற்ற முடிந்துள்ளது. அரசாங்கத்தை எவரும் விமர்சிக்க முடியும். 1950ஆம் ஆண்டின் பின்னர் அதிகூடிய ஜனநாயகம் தற்பொழுதே நாட்டில் உள்ளது.

அரசாங்கத்தை விமர்சிப்பது மாத்திரமன்றி தமக்கு பிடித்தமான இடத்தில் எந்த நேரத்திலும் அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களை மேற்கொள்கின்றனர். ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் முன்னால் பிரதமர் அழைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டுள்ளார். பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவரப்பட்டுள்ளது. இரண்டு அமைச்சர்கள் தமது பதவிகளை இராஜினாமா செய்துள்ளனர். ஜனநாயகம் உச்ச அளவில் காணப்படுவதாலேயே இவ்வாறான செயற்பாடுகள் இடம்பெற்றுள்ளன.

அரசாங்கம் பலவீனமடைந்திருப்பதாலேயே இவ்வாறான செயற்பாடுகள் இடம்பெறுவதாக சிலர் விமர்சிக்கின்றனர். இது அரசாங்கத்தின் பலவீனத்தின் வெளிப்பாடு இல்லை. ஜனநாயகத்தை அரசாங்கம் கடைப்பிடிப்பதன் வெளிப்பாடாகும். அமெரிக்காவின் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புக்கு எதிராக எப்.பி.ஐ விசாரணை நடத்தி வருகிறது. இது ஜனநாயகம் கடைப்பிடிக்கப்படுவதின் உச்சமாகும்.

ஜனநாயகம், நல்லிணக்கம் மற்றும் அபிவிருத்தி ஆகிய மூன்று பிரதான குறிக்கோள்களுடனேயே நாம் ஆட்சிக்கு வந்தோம். இதில் ஜனநாயகத்தை உறுதிப்படுத்தியுள்ளோம். நல்லிணக்கத்தை உறுதிப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம். கடந்த காலத்தைப் போன்று சிங்களவர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையில் முரண்பாட்டைத் தோற்றுவிப்பதற்கு சிலர் முயற்சிக்கின்றனர். எனினும், நல்லிணக்கத்தை உறுதிப்படுத்த சகல நடவடிக்கைகளையும் எடுத்துள்ளோம். கடந்த மூன்று வருடங்களில் ஜனாதிபதி 17 தடவைகள் யாழ்ப்பாணம் சென்று வந்துள்ளார். பிரதமர் ரணில் விக்ரமசிங்க 12 தடவைகள் அங்கு சென்றுவந்துள்ளார்.

இவ்வாறான நிலையில் போலியான செய்திகள் இலங்கைக்கு மாத்திரமன்றி உலகத்துக்கே பெரும் அச்சுறுத்தலாகியுள்ளன. சில குழுவினர் போலியான விடயங்களை உண்மைச் செய்திபோன்று மக்களுக்குக் கூறுகின்றனர். இதனால்தான் 'உண்மை' என்ற பெயரில் ஐ.தே.கவின் ஊடகப் பிரிவு மறுசீரமைக்கப்பட்டுள்ளது என்றார்.

மகேஸ்வரன் பிரசாத் 

No comments

Powered by Blogger.