Header Ads



மைத்திரிபால மீண்டும் ஜனாதிபதியாவதற்கு, டிலானின் நிபந்தனை

தேசிய அரசாங்கத்தை தோல்வியடைய செய்யும் கொள்கை திட்டங்களை  அடுத்த மாதம் 26ம் திகதி வெளியிடப் போவதாக மஹிந்தவுடன் கூட்டு எதிர்கட்சியில் இணைந்துக் கொண்ட ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் 16 உறுப்பினர்களும் தெரிவித்தனர்.

2020 ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெற்றிப் பெற வேண்டுமாயின் தற்போது தேசிய அரசாங்கத்தில் எஞ்சியுள்ள ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் உறுப்பினர்கள் அனைவரும்  ஐக்கிய தேசிய கட்சியின்  இணைந்த அரசாங்கத்தில் இருந்து வெளியேற வேண்டும் என்று பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா  குறிப்பிட்டார்.

முன்னாள் பிரதி சபாநாயகர் இல்லத்தில் இன்று -24- வியாழக்கிழமை இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்  கொண்டு உரையாற்றும் போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்தும் குறிப்பிடுகையில்.

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரனைக்கு ஆதரவு வழங்கியதன் பின்னர் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் 16  உறுப்பினர்களும்  தேசிய அரசாங்கத்தில் இருந்து வெளியேறினோம். இவ்விடயம் யதாரத்தமாக இடம் பெற்றதல்ல கடந்த  உள்ளுராட்சி மன்ற தேர்தலில் தேசிய அரசாங்கம் பெற்றுக் கொண்ட பெறுபேறுகளினை கருத்திற் கொண்டே இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது. இதற்கு பிரதமரின் நம்பிக்கையில்லா பிரேரனையும் சாதகமாக  காணப்பட்டது.

தேசிய அரசாங்கத்தில் இருந்து வெளியேறிய 16 உறுப்பினர்களும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமைத்துவத்திலான கூட்டு எதிரணியில் இணைந்துக் கொண்டுள்ளோம். இருப்பினும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் கொள்கைகளை கருத்திற் கொண்டே செயற்படுவோம் கட்சிக்கு எதிராக ஒருபோதும் செயற்பட மாட்டோம். இதுவே எமது 16 உறுப்பினர்களின் கூட்டு கொள்கையாக காணப்படுகின்றது.

 ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியினை பலப்படுத்தி முறையற்ற  நிர்வாகத்தினை மேற்கொள்ளும் ஐக்கிய தேசிய கட்சிக்கு எதிராக செயற்படுவதை நோக்கமாக கொண்டே பொது எதிரணியுடன் இணைந்துக் கொண்டுள்ளோம்.கூட்டு எதிரணி என்பது தனிப்பட்ட ஒரு கட்சியல்ல பல கட்சிகளை ஒன்றினைத்த கட்சியாகவே காணப்படுகின்றமையினால்  ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் கொள்கைகளுக்கு எவ்வித பாதிப்புக்களும் ஏற்படாது.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியும், ஐக்கிய தேசிய கட்சியும் கூட்டு ஒப்பந்தத்தின் அடிப்படையிலே தேசிய அரசாங்கத்தினை கடந்த மூன்று வருட காலமாக முன்னெடுத்து செல்கின்றது. அரசாங்கத்தின் அனைத்து கொள்கைத் திட்டங்களும்  தோல்வியடைந்துள்ளது.  மக்களால் வெறுக்கப்பட்ட  நிர்வாகத்தினை தொடர்ந்து முன்னெடுத்து செல்வதால் எவ்வித பயன்களும் ஏற்படமாட்டாது.

2020ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் தற்போது நாட்டில் காணப்படுகின்ற அனைத்து அரசியல் மற்றும் சமூக பிரச்சினைகளுக்கு தீர்வினை பெற்றுக் கொடுக்கும் ஒரு ஆயுதமாக காணப்படுகின்றது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன  மீண்டும் ஜனாதிபதியாக வேண்டுமாயின்  ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் துமிந்த திஸாநாயக்க உடனடியாக பதவி விலக வேண்டும். பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரனைக்கு முன்னர் இவரை பதவி நீக்கம் செய்திருந்தால் . இன்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க அரசாங்கத்தினை விட்டு வெளியேறியிருப்பார்.

அத்துடன் தற்போது தேசிய அரசாங்கத்தில் உள்ள ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் உறுப்பினர்கள்  அனைவரும் ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் வெளியேற வேண்டும் . அதன் பின்னர் கட்சியின் முழுமையான மறு சீரமைப்பினை மேற்கொண்டு கூட்டு பொது எதிரணியுடன்  ஒன்றினைந்து ஐக்கிய தேசிய கட்சிக்கு எதிராக தேர்தலில் போட்டியிடலாம். இந்த விடயங்களை கையாண்டால் ஜனாதிபதியாக மீண்டும் தெரிவு செய்யப்படலாம். தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மக்களினால் ஆதரிக்கப்பட்டவராகவே இன்றும் காணப்படுகின்றார். ஐக்கிய தேசிய கட்சியின் முறையற்ற  நிர்வாகத்தில் பங்குதாரராக இருப்பதே மக்களின் வெறுப்பிற்கு பிரதான காரணம்.

எதிர்காலத்தில் ஐக்கிய தேசிய கட்சிக்கு எதிராக மேற்கொள்ளப்படுகின்ற  அனைத்து போராட்டங்களுக்கும் பொது எதிரணியுடன் இணைந்து ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் உறுப்பினர்களாக செயற்படுவோம்.  கட்சியினை பலப்படுத்தி எதிர்வரும் தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சிக்கு பாரிய தோல்விகளை பெற்றுக் கொடுப்பதற்கு இப்போதிலிருந்து செயற்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றோம் என தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.