Header Ads



சாய்ந்தமருது தனி உள்ளுராட்சி சபை, மக்கள் ஆணையை நான் மதிக்கிறேன் - ஹரீஸ்


சாய்ந்தமருது தனி உள்ளுராட்சி சபை தொர்பாக மக்கள் ஆணையை நான் மதிக்கிறேன். தனிப்பிரதேச சபை விடயத்தில் அது பிரிக்கப்படவேண்டும் என்ற கோரிக்கை தொடர்பாக அதிக கவனமெடுத்து செயற்படுவேன். இது தொடர்பாக மக்கள் விரும்புகின்ற வகையில் தனியாகப் பிரிவதனால் ஏனைய பிரதேசங்களுக்கு இருக்கின்ற விடயங்களையும் கவனத்தில் எடுத்து  மிகவிரைவில் அதன் சாத்தியம் தொடர்பாக நடவடிக்கை மேற்கொள்வேன்.

சாய்ந்தமருது பிரதேச செயலக அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் இன்று(24) கல்முனை தொகுதி ஒருங்கிணைப்பு குழு இணைத்தலைவர்களான அரச தொழில் முயற்சிகள் மற்றும் கண்டி அபிவிருத்தி பிரதி அமைச்சரும்,ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதி தலைவருமான எச்.எம்.எம்.ஹரீஸ் மற்றும் கல்முனை ஐக்கிய தேசிய கட்சி அமைப்பாளர் சட்டத்தரணி எம்.எச்.அப்துல் ரசாக் ஆகியோரின் தலைமையில் நடைபெற்றது.

இதன்போது பிரதியமைச்சர் ஹரீஸ் மேலும் உரையாற்றும்போது,

இந்த பிரதேச இணைப்புக்குழு ஊடாக எமது பிரதேசத்தின் அபிவிருத்தி உட்கட்டுமான விடயங்கள் தொடர்பாக பரஸ்பரம் கருத்துப்பரிமாறல்களை மேற்கொள்ளும் ஒரு தளமாக இக்கூட்டத்தை நாம் பயன்படுத்த வேண்டும். சாய்ந்தமருதின் புதிய கல்முனை மாநகர சபை உறுப்பினர்கள் மற்றும் பள்ளிவாயல் தலைமை உட்பட அனைவரினதும் ஒத்துழைப்புடன் நாம் ஒற்றுமையாக செய்படும் நிலைமை உருவாகியிருக்கின்றது.

இந்த நாட்டின் 19வது திருத்தச்சட்டத்தின்படி வருகின்ற 2019 டிசெம்பர் அளவில் மீண்டும் ஒரு ஜனாதிபதித் தேர்தல் நடைபெற வேண்டும். இவ்வாறான சூழ்நிலையில் பதிவியிலிருக்கின்ற அரசாங்கத்தின் ஊடாக இப்பிரதேசத்திற்குத் தேவையான அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்கள் இருந்து கொண்டிருக்கின்றது. இதற்குள் எமது தேவைகள் தொடர்பாக ஒற்றுமையாக எமது தீர்மானங்களை எடுத்து நாங்கள் முன்னோக்கிச் செல்ல வேண்டும் என்பது எமது குறிக்கோளாகும். ஏனென்றால் புதிய அமைச்சரவை மாற்றத்திற்குப் பின்பு அரசாங்கம் சில முற்போக்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு தீர்மானித்துள்ளது. இத்தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் என்ற அடிப்படையில் இந்தப்பிரதேச ஒருங்கிணைப்புக்குழுவினர்களின் ஒத்துழைப்போடு கட்சி பேதமின்றி பொதுவான விடயங்களில் நாங்கள் மனந்திறந்து ஒரு இணக்கப்பட்டிற்கு வர வேண்டும் என்பதே எமது விருப்பமாகும். அபிவிருத்தி என்கின்றபோது மக்களின் பிரதிநிதி என்றவகையில் சிறந்த அபிவிருத்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கின்ற பொறுப்பு எம்மீது இருக்கின்றது. பல இன மக்கள் குழுக்கள் இருந்து ஒற்றுமையாக இயங்குகின்ற குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் சிறப்பாக அபிவிருத்தி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இதனை உதாரணமாகக் கொண்டு நாம் செயலாற்ற முன்வரவேண்டும்.

பிரதேசத்தின் கல்வி அபிவிருத்தி தொடர்பாக அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும். மாணவர்கள் குறிப்பாக 9 தொடக்கம் உயர் கல்வி கற்கின்ற மாணவர்கள் வரை போதை வஸ்து பாவனைக்கு அடிமையாகி வருகின்றனர். இதனை கருத்தில் எடுத்து எமது கல்வி அதிகாரிகள் செயற்பட்டு அதனை இல்லாதொழிக்க முன்வர வேண்டும் என்றார்.

இங்கு சாய்ந்தமருது பிரதேசத்தில் காணப்படும் விடுபட்ட அபிவிருத்திகள், வடிகான் பிரச்சினைகள், திண்மக்கழிவு அகற்றும் பிரச்சினை, வீதி அபிவிருத்தி, பீச் பார்க் போன்ற பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.

அதுபோல் இதர பிரச்சினைகள் அனைத்திற்கும் விரைவாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என துறை சார் அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

இந்நிகழ்வில் பிரதேச செயலாளர் ஐ.எம் ஹனீபா, சாய்ந்தமருது ஜும்ஆப் பள்ளிவாசல் தலைவர் வை.எம் ஹனீபா, கல்முனை மாநகர சபை முதல்வர் சட்டத்தரணி ஏ.எம். றக்கீப், கல்முனை மாநகர சபையின் சாய்ந்தமருது உறுப்பினர்களான ஏ.ஆர்.எம்.அசீம், எம்.ஏ.றபீக், ஏ.எம்.அஸீஸ், எம்.வை. எம்.ஜஃபர், என்.எம்.றிஸ்மிர், முஹர்ரம் பஸ்மிர், நஸ்ரின் முர்ஷித் அமீன், எம். ஆயிஷா சித்திக்கா, ஏ.என்.சித்தி றமீசா, ஏ.எச்.சுவையில், உதவி பிரதேச செயலாளர் ஐ.எம்.றிகாஸ், பிரதி திட்டமிடல் பணிப்பாளர் திருமதி லதாகரன், உததி திட்டமிடல் பணிப்பாளர் ஏ.எம்.ஜஃபர் மற்றும் திணைக்களங்களின் தலைவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

(எஸ்.அஷ்ரப்கான்)

No comments

Powered by Blogger.