Header Ads



சம்பந்தனை திட்டி, பயனில்லை..

-Raazi Muhammadh Jaabir-

"பார்த்தீர்களா சம்பந்தன் சொல்லியிருப்பதை.முஸ்லிம் ஆக்கள் சேலை உடுத்துக் கொண்டு செல்ல வேண்டுமாம்.அந்தக் கெழவன் ஆரு இப்படிச் செல்ல.ஏதாவது செய்யணும் நாம'' என்றார் நண்பரொருவர்.

''சம்பந்தர் சொல்வதில் என்ன தவறிருக்கிறது?'' என்று கேட்டேன் நான்.

நண்பர் உற்றுப் பார்த்தார் என்னை.இந்தப் பதிலை உங்களிடமிருந்து நான் எதிர்ப்பார்க்கவில்லை என்று சொல்வது போல அவரின் முகத்தின் ஏமாற்றம் தெரிந்தது.

நான் கூறினேன்.

'சம்பந்தர் யார்?அவருக்கும் முஸ்லீம் வாக்குகளுக்கும் என்ன தொடர்பு?ஒரு வியாபாரியின் இறுதி இலட்சியம் இலாபம் போல ஒரு அரசியல்வாதியின் இறுதி இலட்சியம் வாக்கு.தண்ணீரையும் காசாக்க நினைக்கும் வியாபாரியைப் போல கண்ணீரையும் வாக்காக்க நினைப்பவன் அரசியல்வாதி''

''சம்பந்தர் ஒரு தமிழர்.அதுவும் திருகோணமலையைச் சேர்ந்தவர்.ஹபாயா விவகாரம் நடந்தது திருகோணமலையில்.அதுவும் ஒரு இந்துக் கல்லூரியில்.அத்தனையும் கொத்துக் கொத்தாக வாக்குகள்.அரசியல்வாதி நியாயத்தின் பக்கம் எப்போது நின்றிருக்கிறான்?தனது வாக்குவங்கியை சம்பந்தர் எப்படி இழப்பார்?''

''தப்பித்தவறி சம்பந்தர் முஸ்லிம்கள் ஹபாயா அணிந்து வரலாம் என்று அறிக்கை விட்டிருந்தால் இதுதான் அவர் பாராளுமன்ற உறுப்பினராக இருக்கும் இறுதி முறையாக இருக்கும். முஸ்லிம்களின் வாக்குகள் அவருக்குத் தேவையில்லை.அவர் தங்கியிருக்கும் தமிழர்கள் வாக்குகளை அவர் இழக்கத் தயாரில்லை.அந்தச் சின்னஞ் சிறு பயல் ஐபூப் அஸ்மினே யாழ்ப்பாண தமிழர்களின் வாக்குக்காக இஸ்லாத்தை உதறித்தள்ளத் தயாராகும் போது அரசியலில் பழம் தின்று கொட்டை போட்ட சம்பந்தருக்கு ஹபாய் விவகாரத்தில் தமிழர்களின் வாக்குகளைப் பெற்றுக் கொண்டு தமிழர்களின் நிலைப்பாட்டை ஆதரிக்காமல் முஸ்லிம்களை ஆதரிப்பதற்கு என்ன தேவை இருக்கிறது? என்றேன் நான்.

''அப்படியென்றால் சம்பந்தர் செய்தது சரியா' என்றார் நண்பர் சற்றுக் கோபத்துடன்.

'சம்பந்தர் செய்தது எமக்குத் தவறு. ஆனால் சம்பந்தருக்குச் சரி' என்று சொல்லிவிட்டுத் தொடர்ந்தேன்.

''சம்பந்தர் தன் மக்களுக்காகவும்,தன் இனத்திற்காகவும்,தன் வாக்குகளுக்காகவும் பேசுகிறார்.நாம் கோபப்படவேண்டியது சம்பந்தர் மீது அல்ல.நாம் தெரிவு செய்திருக்கும் 'சம்பந்தர்கள்' மீது.எமது அரசியல்வாதிகள் எமக்காகப் ஏன் இன்னும் பேசவில்லை என்றுதான் நாம் கோபப் படவேண்டுமே ஒழிய சம்பந்தர் ஏன் தமிழர்களுக்காகப் பேசினார் என்று கோபப் படக்கூடாது.

இத்தனை பிரச்சினைகள் நடந்து கொண்டிருக்கின்றன. இதுவரைக்கும் எமக்காகப் பேசாத எமது கோழைகள் மீது கோபப் படாமல்,'சம்பந்தர் பேசிவிட்டார்.நெஞ்சில் தைரியமிருந்தால் எழும்பி நின்று அவருக்குப் பதில் சொல்லடா கோழையே' என்று எம்மவர்களைத் திட்டாமல் நாம் சம்பந்தரைத் திட்டிக் கொண்டிருக்கிறோம்.தமது இனத்துக்காகப் பேசாத முஸ்லிம் அரசியல்வாதிகளின் மீது கோபப்படாமல் தனது இனத்திற்காகப் பேசும் சம்பந்தர் மீது கோபப்படுககிறோம்.

சம்பந்தருக்கு தன் மக்கள் மீது இருக்கும் பயம் கூட எம்மவருக்கு எம்மீது இல்லை.ஏன் தெரியுமா? நாம் பேசினாலும் பேசாவிட்டால் தேர்தல் வந்தால் அனைத்தையும் மறந்து விட்டு வாக்குப் போடும் முட்டாள்கள் எமது மக்கள் என்று எம்மை எமது அரசியல்வாதிகள் நன்றாகப் புரிந்து வைத்திருக்கிறார்கள்'' என்றேன்.

நண்பர் மௌனமானார்.
அவரிடம் வேறு பதில் இருக்கவில்லை.
#அரசியல்கற்போம்

2 comments:

  1. சரியான மதில் கொடுத்திங்க சகோ

    ReplyDelete

Powered by Blogger.