Header Ads



2 ஆண்டுகள் மட்டுமே, பிரதமர் பதவி வகிப்பேன் - மகாதீர் முகமது அறிவிப்பு

மலேசியாவில் சமீபத்தில் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் சற்றும் எதிர்பாராத வகையில், நஜிப் ரசாக் தலைமையிலான ‘பேரிசன் நே‌ஷனல்’ கூட்டணி தோல்வியை தழுவியது.

92 வயதான மகாதீர் முகமது தலைமையிலான 4 கட்சிகளை கொண்ட எதிர்க்கட்சி கூட்டணி அபார வெற்றி பெற்றது. இதையடுத்து மகாதீர் முகமது பிரதமராக பதவி ஏற்றார்.

இந்த நிலையில் அவர் டோக்கியோ ‘வால் ஸ்டிரீட் ஜர்னல்’ பத்திரிகை மாநாட்டில் காணொலி காட்சி வழியாக பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–

ஒன்றல்லது இரண்டு ஆண்டுகளுக்கு மட்டுமே நான் பிரதமர் பதவி வகிப்பேன். அதன்பின்னர் நான் பதவி விலகுவேன். ஆனால் அரசை பின்னால் இருந்து இயக்குவேன்.

சிறையில் அடைக்கப்பட்டு உள்ள அன்வர் விடுதலை ஆனவுடன் நாடாளுமன்றத்தில் உறுப்பினர் ஆக வேண்டும். அதன்பின்னர் அவருக்கு கேபினட் மந்திரி பதவி அளிக்கப்படும். கூட்டணியில் உள்ள பிற கட்சி தலைவர்களைப் போன்றுதான் அவரும் பங்களிப்பு செய்ய முடியும். மற்றவர்களுக்கு என்ன அதிகாரம் வழங்கப்பட்டு உள்ளதோ அதே அதிகாரம்தான் அவருக்கும் வழங்கப்படும். அவருக்கென்று பிரத்யேக அதிகாரம் எதுவும் தரப்படமாட்டாது. கேபினட் மந்திரி பதவிகள் குறித்து நான்தான் தீர்மானிப்பேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

‘‘முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் மீது வழக்கு எதுவும் தொடரப்படுமா?’’ என்று மகாதீர் முகமதுவிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், ‘‘அவருக்கு எதிராக விரைவில் அரசு வழக்கு தொடுக்கும்’’ என பதில் அளித்தார்.

No comments

Powered by Blogger.