Header Ads



ஜனாதிபதி ஏன், பாராளுமன்றத்தை முடக்கினார்..? எம்.பி.க்கள் அதிர்ச்சி

மைத்திரிபால சிறிசேனவினால் சிறிலங்கா நாடாளுமன்றம் மே 8ஆம் நாள் வரை முடக்கப்பட்டுள்ளது. நேற்று நள்ளிரவில் இருந்து நடைமுறைக்கு வரும் வகையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அரசியலமைப்பின் 70 ஆவது பிரிவில், சிறிலங்கா அதிபருக்கு கொடுக்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய, சிறிலங்கா நாடாளுமன்றத்தின் செயற்பாடுகள் அனைத்தும், மே 8 வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

இதற்கமைய, நாடாளுமன்றம் முடக்கப்பட்டுள்ள காலப்பகுதியில், எந்த பிரேரணைகளையும் முன்வைக்கவோ, கேள்விகளை முன்வைக்கவோ முடியாது. கிட்டத்தட்ட நாடாளுமன்றத்தின் செயற்பாடுகள் அனைத்தும் முடக்கப்பட்டிருக்கும்

நாடாளுமன்றத்தின் அடுத்த கூட்டத்தொடர், மே 8ஆம் நாள் ஆரம்பமாகும் என்று சிறிலங்கா அதிபர் நேற்றிரவு வெளியிட்ட சிறப்பு அரசிதழ் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.

கடைசியாக சிறிலங்கா நாடாளுமன்றம், 2009 மே 17ஆம் நாள் முடக்கப்பட்டது. அப்போது போர் இறுதிக்கட்டத்தை எட்டியிருந்தது.

தற்போது, சிறிலங்கா அரசியலில் பெரும் குழப்பங்கள் ஏற்பட்டுள்ள நிலையில், சிறிலங்கா அதிபர் இந்த முடிவை எடுத்துள்ளார்.

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் 16 நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்வரும் 19ஆம் நாள் நடைபெறவிருந்த அமர்வில், எதிரணியில் அமரப் போவதாக அறிவித்திருந்த நிலையில், சிறிலங்கா அதிபரின் இந்த திடீர் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சிறிலங்கா அதிபரின் இந்த முடிவை ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் உறுதிப்படுத்திய அவரது செயலர் ஒஸ்ரின் பெர்னான்டோ, இந்த முடிவுக்கான காரணம் எதையும், வெளியிடவில்லை.

மே 8ஆம் நாளுக்கு முன்னதாக, ஒரே ஒரு நாடாளுமன்ற அமர்வு தான் நடைபெறவிருந்ததாகவும், புதிய அமைச்சரவை ஏப்ரல் 23ஆம் நாள் பதவியேற்கும் என்றும் சிறிலங்கா நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவர் கூறியுள்ளனர்.

அதேவேளை, தனது பெயரை வெளியிட விரும்பாத அமைச்சர் ஒருவர் ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தகவல் வெளியிடுகையில், நாடாளுமன்ற முடக்கத்தினால், தற்போதுள்ள அனைத்து நாடாளுமன்றக் குழுக்களும் செயலிழக்கும் என்றும், நாடாளுமன்றம் மீளக் கூடும் போது புதிய குழுக்கள் அமைக்கப்பட வேண்டும் என்றும் கூறினார்.

இதனிடையே, இந்த அறிவிப்பு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளதாக சிறிலங்கா அரசதரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் ஏஎவ்பி செய்தி நிறுவனத்திடம் கூறியுள்ளார்.

1 comment:

  1. they can sleep at their home rather than sleeping in Parlimemt at the rate payer's money.

    ReplyDelete

Powered by Blogger.