Header Ads



ஆனமடுவ முஸ்லிம் கடையை தாக்க, மைதானத்தில் இரவில் கூடி திட்டமிட்ட 20 பேர்

ஆனமடுவ முஸ்லிம் உணவு விடுதி மீதான பெற்றோல் குண்டுத் தாக்குதலானது, திட்டமிடப்பட்டு தாக்குதலுக்கு முன்தினம் சதித்திட்டம் தீட்டப்பட்டு மேற்கொள்ளப்பட்டதாக விசாரணையாளர்களுக்கு தகவல் கிடைத்துள்ளதாகவும் புத்தளம் மாவட்ட உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இந்த பெற்றோல் குண்டுத்தககுதலுக்கு முன்னைய தினம் த.மு.தஸநாயக்க விளையாட்டு மைதானத்தில் இரவோடிரவாக 20 இற்கும் அதிகமான இளைஞர்கள் ஒன்றுகூடி, இந்த தாக்குதலை திட்டமிட்டமை தொடர்பில் விசாரணை அதிகாரிகள் தகவல்களை வெளிப்படுத்தியுள்ளதாக அவர் தெரிவித்தார்.

அதன்படி ஏற்கனவே இந்த தாக்குதல் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள பாடசாலை மாணவன் ஒருவன் உள்ளிட்ட 7 பேரும், 2018 ஆம் ஆண்டின் முதலாம் இலக்க அவசர கால சட்டத்தின் பிரகாரம் நடவடிக்கை எடுக்கப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அதிகாரி தெரிவித்தார்.

கடந்த 11 ஆம் திகதி அதிகாலை 2 மணியளவில் மூன்று மோட்டார் சைக்கிள்களில் வருகை தந்துள்ள சந்தேக நபர்கள் இந்த ஹோட்டல் மீது தாக்குதல் நடாத்தி விட்டு தப்பிச் சென்றிருந்தனர்.

முதலில் ஹோட்டலின் முன் பகுதியில் பெற்றோலை ஊற்றி விட்டு பின்னர் பெற்றோல் குண்டுத்தாக்குதலை நடாத்தியமை தொடர்பில் விசாரணைகளில் வெளிப்படுத்தப்பட்டன. அத்துடன் தாக்குதலுக்கு வந்த மூன்று மோட்டார் சைக்கிள்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

இந் நிலையில் தீக்கிரையான ஹோட்டலுக்கு அருகில் உள்ள மற்றொரு வர்த்தக நிலைய சி.சி.ரி.வி.கமராவில் இருந்த பதிவுகளை மையப்படுத்தி ஒரு சந்தேக நபரைக் கைது செய்ததாகவும் அதனைத் தொடர்ந்து அவரிடம் முன்னெடுத்த விசாரணைகளில் ஏனையோரை கைது செய்ததாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இதனிடையே ஆனமடுவ தாககுதல்கள் தொடர்பில் கைது செய்யப்பட்ட 7 சந்தேக நபர்களுக்கும் கண்டி வன்முறைகளுடனோ அதன் சூத்திரதாரிகளான மஹாசென் அமைப்பினருடனோ தொடர்புகள் உள்ளனவா எனவும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

No comments

Powered by Blogger.