Header Ads



தெரு நாய் கடித்து, மூதாட்டி மரணம்

வீட்டு வாசற்படியில் களைப்பாறிக் கொண்டிருந்த மூதாட்டியை தெரு நாய் கடித்ததால் ரேபீஸ் எனப்படும் நீர் வெறுப்பு நோய் ஏற்பட்டு அம்மூதாட்டி மரணித்து விட்டதாக வைத்தியசாலையில் தெரிவிக்கப்பட்டது.

கிரான் சுகாதார வைத்திய அதிகாரிப் பிரிவிலுள்ள சந்திவெளி, ஜீவபுரம் நாவலடி வீதியை அண்டி  வசிக்கும் லக்ஷ்மணன் இராசம்மா (வயது 72) என்ற மூதாட்டியே ரேபிஸ் நோய்க்குப் பலியாகியுள்ளார்.

இச்சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது, இந்த மூதாட்டி கடந்த 04 ஆம் திகதி வாசற்படியில் அமர்ந்து களைப்பாறிக் கொண்டிருக்கும்போது தெருநாயொன்று உள் நுழைந்து மூதாட்டியின் முகத்தில் கண் இமைப் பகுதியில் கடித்துள்ளது.

உடனடியாக சந்திவெளி பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.

அங்கு நான்கு தினங்கள் தங்கி சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த 04, 07 மற்றும் 11ஆம் திகதிகளில் ரேபிஸ் விசர்நோய்த் தடுப்பூசி ஏற்றப்பட்டு அடுத்த தடுப்பூசி பெப்ரவரி 03ஆம் திகதிக்கு நாள் குறிக்கப்பட்டு மூதாட்டி வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் கடந்த 29ஆம் திகதி மூதாட்டி சுவாசிக்க முடியாமல் சிரமப்பட்டதோடு தண்ணீரைக் காணும்போது அச்சமடைந்துள்ளார்.

அதனால், உடனடியாக மட்டக்களப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் செவ்வாய்க்கிழமை மாலை மரணமடைந்துள்ளார்.

இவரது சடலம் உடற் கூறு மருத்துவ ஆராய்ச்சி பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, குறித்த சந்திவெளிப் பகுதியில் விசர்நோயுடன் அலைந்து திரிந்த தெரு நாய் கொல்லப்பட்டு அதன் தலைப்பகுதி கொழும்பு மருத்துவ ஆராய்ச்சிப் பிரிவுக்கு பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, ரேபிஸ் கிருமி தொற்றிய நாயென வைத்திய நிபுணர்கள் உறுதிப்படுத்தி அனுப்பி வைத்துள்ள அறிக்கை இன்று கிடைக்கப் பெற்றுள்ளதாக கிரான் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி ஆர். ரவிச்சந்திரன் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.