Header Ads



நிமலின் பிரதமர் கனவுக்கு, கட்சிக்குள்ளேயே எதிர்ப்பு

பிரதமராக நிமல் சிறிபால டி சில்வாவை நியமிக்கும் யோசனைக்கு சுதந்திரக் கட்சிக்குள்ளேயே கருத்து முரண்பாடுகள் உருவாகியுள்ளன என்று அறியமுடிகின்றது. 

இதனால், தனியாட்சி அமைப்பதற்குரிய சாத்தியம் ஐக்கிய தேசியக் கட்சிக்கே அதிகம் காணப்படுவதாகவும் தெரியவருகின்றது.

ரணில் விக்கிரமசிங்கவைப் பதவிநீக்கம் செய்துவிட்டு கூட்டு எதிரணியின் ஆதரவுடன் நிமால் சிறிபால டி சில்வாவை பிரதமராகக்கொண்ட அரசை அமைக்க, சுதந்திரக் கட்சி முற்பட்டதால் கடந்த சில நாட்களாகவே கொழும்பு அரசியல் களம் பெரும் பரபரப்பாகக் காணப்படுகின்றது.

கூட்டு எதிரணியின் தலைவர்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்து பேச்சு நடத்தி, நிமால் சிறிபால டி சில்வாவின் தலைமையிலான அரசுக்கு ஆதரவளிக்க இணக்கம் தெரிவித்திருந்தனர்.

இதையடுத்து, பிரதமரை பதவி நீக்கம் செய்வதற்கான வாய்ப்புகள் குறித்து சட்டமா அதிபர் மற்றும் சட்ட நிபுணர்களுடன் தாம் ஆலோசனை நடத்துவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உறுதியளித்திருந்தார்.

எனினும், தாம் பதவி விலகப்போவதில்லை என்றும், அரசியலமைப்புக்கமைய தமது கடமைகளை முன்னெடுக்கப் போவதாகவும் அறிவித்தார்.

இந்நிலையில், நிமால் சிறிபால டி சில்வாவை பிரதமராக நியமிப்பதற்கு ஆதரவு கோரும் கடிதத்தில், போதிய கையெழுத்துகளைப் பெறமுடியாத நிலையில், இந்த முயற்சி பின்னடைவைச் சந்தித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

நிமால் சிறிபால டி சில்வாவை பிரதமராகக்கொண்ட அரசாங்கத்தை அமைக்கும் திட்டத்துக்கு சுதந்திரக் கட்சியின் மூத்த தலைவர்கள் சிலர் ஆதரவளிக்க மறுத்துள்ளனர்.

சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலரும் அமைச்சருமான துமிந்த திஸாநாயக்க, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலரும் அமைச்சருமான மகிந்த அமரவீர, சரத் அமுனுகம, மகிந்த சமரசிங்க உள்ளிட்ட அமைச்சர்களே இவ்வாறு எதிர் நிலைப்பாட்டில் உள்ளனர். பிரதமராக ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிர்ப்பில்லை என்ற கருத்தையே இவர்கள் முன்வைத்துள்ளனர்.

எனவேதான், அமைச்சரவையில் அதிரடிமாற்றத்தை ஏற்படுத்திவிட்டு ஆட்சியைத் தொடர்வது பற்றி ஜனாதிபதி பரீசிலித்துவருகிறார் எனக் கூறப்படுகின்றது.

No comments

Powered by Blogger.