Header Ads



மைத்திரியிடம் நட்டஈடு கேட்கும் NFGG


ஜனாதிபதியின் வருகை முன்னிட்டு, ஜனாதிபதியின் விளம்பரங்களை ஒட்டுவதற்காக, தனது வீட்டு மதில் சுவர் பயன்படுத்தப்பட்டதால், அது சேதமடைந்துள்ளதாகவும் அதற்காக தனக்கு 7,000 ஆயிரம் ரூபாய் நட்டஈடு செலுத்துமாறும், நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் காத்தான்குடி நகரசபைக்கான வேட்பாளர் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக, அக்கட்சியின் வேட்பாளர் ஏ.எல்.எம். சபீல், இன்று (30)  ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ள அவசர கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“தேர்தல் பிரசாரக் கூட்டத்துக்காக தாங்கள் காத்தான்குடிக்கு புதன்கிழமை (31)  விஜயம் செய்யவுள்ளதாக அறிகிறோம். தங்களது நல்லாட்சி அரசாங்கத்தில், தேர்தலில் போட்டியிடும் கட்சிகள் பிரசார நடவடிக்கைகளுக்காக சுவரொட்டிகள், பாதாதைகள் வைப்பதை முழுமையாகத் தவிர்க்கப்பட வேண்டும் என்பது தேர்தல் நிபந்தனையாகும்.

“அந்தவகையில், எங்களது பிரதேசத்தில் தேர்தலில் போட்டியிடும் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி மிக சிறப்பான முறையில் தேர்தல் விதிமுறைகளை முழுமையாகக் கடைப்பிடித்து, பொதுமக்களுக்கு எவ்வித இடையூறுகளும் ஏற்படாத வகையில், தமது தேர்தல் பிரசார நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது.

“ஆனால், தங்களது காத்தான்குடி விஜயத்துக்கான தேர்தல் பிரசார ஏற்பாடுகள் முற்றிலும் தேர்தல் விதிமுறைகளை மீறி, சுவரொட்டிகள் மற்றும் பதாதைகளுடன் அலங்கரிக்கப்பட்டுவருகின்றது. பொதுமக்களின் சொத்துகளுக்கு சேதம் விளைவிக்கும் நடவடிக்கைளில் தங்களது கட்சியின் ஆதரவாளர்கள் ஈடுபடுவதை எம்மால் ஏற்றுக்கொள்ள முடியமால் உள்ளது.

“புதிதாக வர்ணம் பூசப்பட்டுள்ள எனது வீட்டு மதில் சுவரில் தங்களது தேர்தல் பிரசார சுவரொட்டிகளை ஒட்டி எனது உடமைக்கு, தங்களது கட்சி தொண்டர்கள் சேதம் விளைவித்துள்ளனர்.

“இந்த நாட்டின் ஜனாதிபதியாகிய தங்களது கட்சியிலேயே இவ்வாறான முறைகேடுகள் இடம்பெற்றால், ஏனைய கட்சிகள் எவ்வாறு தேர்தல் விதிமுறைகளைக் கடைப்பிடிப்பார்கள்.

“எனவே, காத்தான்குடிக்கு தேர்தல் பிரசாரத்துக்காக வருகை தரவுள்ள தாங்கள், எனக்கு ஏற்பட்டுள்ள சேதத்துக்கான நட்டஈடாக 7,000 ரூபாயை முழுமையாக செலுத்துவதுடன், ஏனைய மக்களுக்கும் ஏற்பட்ட இப்படியான நட்டத்தைச் செலுத்தி விட்டு, தங்களது தேர்தல் பிரசார கூட்டங்களில் கலந்துகொள்ளுமாறு கெட்டுக்கொள்கிறேன்” எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஏ.எச்.ஏ. ஹுஸைன்

No comments

Powered by Blogger.