Header Ads



மொட்டை வாளை சுழற்றாதீர்கள் - ஜனாதிபதியை நக்கல் அடிக்கும் ஜே.வி.பி.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மொட்டை வாளை சுழற்றிக்கொண்டு இருப்பதைவிட, பிணைமுறி மோசடி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையை ஓர் ஆயுதமாகப் பயன்படுத்தி திருடர்களுக்குத் தண்டனை வழங்குவதற்குரிய நடவடிக்கையை எடுக்கவேண்டும் என்று ஜே.வி.பி. வலியுறுத்தியுள்ளது.

ஒபரேசன் 01 வெற்றியளிக்காத நிலையில் எவ்வாறு பாகம் 2ஐ ஆரம்பிக்கமுடியும் என கேள்வி எழுப்பியுள்ள அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி, எமனுக்குரிய வேலையைச் செய்வதற்கு முன்னர் ஜனாதிபதிக்குரிய அதிகாரங்களைப் பயன்படுத்தி குற்றவாளிகளை சிறையிலடைக்குமாறும் கோரியுள்ளார்.

ஜே.வி.பியின் செய்தியாளர்  பத்தரமுல்ல பெலவத்தையிலுள்ள அக்கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே சுனில் ஹந்துன்நெத்தி எம்.பி. மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

""ஊழல், மோசடியாளர்களை நரகத்துக்கு அனுப்பிய பின்னரே பதவியிலிருந்து வெளியேறுவேன் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சூளுரைத்துள்ளார். அதாவது, ஜனாதிபதி பதவியில் தான் தொடர்ந்தும் இருப்பேன் என்பதை அவர் மறைமுகமாக இடித்துரைத்துள்ளார். எனவே, குற்றவாளிகளை அதளபாதாளத்துக்கு அனுப்புவதற்கு தண்டனையைப் பெற்றுக்கொடுப்பதற்குரிய நடவடிக்கையை அவர் எடுப்பார் என்ற நம்பிக்கை எமக்கு இல்லை.

ஆகவே, எமதர்மரின் வேலையை அவரை செய்வதைவிடுத்து, ஜனாதிபதிக்குரிய அதிகாரங்களைப் பயன்படுத்தி திருடர்களுக்குத் தண்டனை வழங்குமாறு கேட்டுக்கொள்கின்றோம். அத்துடன், ஒபரேசன் 2 ஆரம்பமாகியுள்ளது என ஜனாதிபதி அறிவித்துள்ளார். ஒபரேசன் 1 நடவடிக்கையின் மூலம் எத்தகைய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன? நாட்டுக்கு ஏற்பட்ட இழப்பீடு மீட்டெடுக்கப்பட்டதா? திருடர்கள் சிறையில் அடைக்கப்பட்டனரா? என ஜனாதிபதியிடம் கேட்க விரும்புகின்றோம்.

ஒபரேசன்1 வெற்றியளிக்காத நிலையில் அடுத்தக்கட்ட நடவடிக்கை எதற்கு? செயல் வடிவம் எதுவுமின்றி பொதுமேடைகளில் வீரவசனம் பேசுவதால் எவ்வித பயனும் மக்களுக்கு கிடைக்கப்போவதில்லை. மொட்டை வாளை வெறுமனே சுழற்றிக்கொண்டிருப்பதைவிட, பிணைமுறி மோசடி தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணை அறிக்கையை ஓர் ஆயுதமாகப் பயன்படுத்தி திருடர்களுக்கு எதிரான போராட்டத்தை ஆரம்பிக்கலாம்.

அதேவேளை, மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரனின் நியமனம் பாரதூரமான விடயமென்று பிணைமுறி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. நிதி அமைச்சின் பரிந்துரையின் பிரகாரம் ஜனாதிபதியே மத்திய வங்கிக்குரிய ஆளுநரை தெரிவுசெய்வார். இந்த நியமனம் குறித்து ஜனாதிபதி ஆணைக்குழு கேள்வியெழுப்பியுள்ளது. எனவே, அதற்குரிய பொறுப்பை ஜனாதிபதி ஏற்கவேண்டும்'' என்றார்.

No comments

Powered by Blogger.