Header Ads



ஹரீஸிடம் சந்திரிக்காவின் உறுதிமொழி

தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அமைச்சின் கீழ் உள்ள ONUR திட்டத்தின் ஊடாக அம்பாறை மாவட்டத்தில் பல அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுப்பதற்கு நிதி ஒதுக்கீடு செய்து தருவதாக குறித்த திட்டத்தின் தலைவியாக உள்ள முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் ஹரீஸிடம் உறுதியளித்துள்ளார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சருமான சட்டத்தரணி அல்ஹாஜ் எச்.எம்.எம். ஹரீஸ் ONUR திட்டத்தின் தலைவியாக உள்ள முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவை நேற்று (11) திங்கட்கிழமை சந்தித்து ONUR திட்டத்தின் ஊடாக அம்பாறை மாவட்டத்தில் பல அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுப்பதற்கு நிதி ஒதுக்கீடு செய்து தருமாறு கேட்டுக்கொண்டதைத் தொடர்ந்து மேற்குறித்த உறுதிமொழி வழங்கப்பட்டது. 

சினேகபூர்வமாக நடைபெற்ற குறித்த சந்திப்பில் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சரின் பிரத்தியேக செயலாளர் எம். அல்தாப் மற்றும் இணைப்புச் செயலாளர் எம்.எஸ்.எம். மிஸ்வர் ஆகியோரும் கலந்து கொண்டனர்.   

தேசிய ஒருமைப்பாட்டிற்கும் நல்லிணக்கத்திற்குமான அலுவலக (ONUR) திட்டத்தின் ஊடாக அம்பாறை மாவட்டத்தில் குறிப்பாக பாடசாலைகள், வீதிகள் அபிவிருத்தி செய்யப்படவுள்ளதோடு வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் மக்கள் சுயதொழிலை மேற்கொள்ளும்வகையில் வாழ்வாதார உதவிகளும் வழங்கப்படவுள்ளன. 

மேலும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சுடன் விளையாட்டுத்துறை அமைச்சு இணைந்து இனங்களுக்கிடையில் நல்லுறவை வளப்படுத்தும் வகையில் விளையாட்டின் ஊடாக சமாதானம் என்ற ஒரு திட்டத்தை ஆரம்பிப்பதற்கு இதன்போது இணக்கம் காணப்பட்டது. குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள தமிழ் முஸ்லிம் மக்களுக்கும் தெற்கில் உள்ள சிங்கள இளைஞர்களுக்குமிடையில் புரிந்துணர்வை ஏற்படுத்துவதற்காக விளையாட்டின் ஊடாக சமாதானம் என்ற புதிய கருப்பொருளில் இத்திட்டத்தை ஆரம்பிப்பதற்கு முழுமையான அங்கீகாரத்தை முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா வழங்கியுள்ளார். இதற்கான நிதிகளையும் ஏற்படுத்தித் தருவதாக பிரதி அமைச்சரிடம் உறுதியளித்துள்ளார். 

அத்தோடு விளையாட்டின் ஊடாக சமாதானம் என்ற குறித்த திட்டத்தின் நிகழ்வை கல்முனையில் அங்குரார்ப்பணம் செய்வதற்கு முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பெப்ரவரி மாதம் நடுப்பகுதியளவில் கல்முனைக்கு பிரதி அமைச்சரின் அழைப்பை ஏற்று வருகை தரவுள்ளார். இதேவேளை இதன்போது இன்னும் பல நிகழ்வுகளிலும் கலந்து கொள்வதற்கு இணக்கம் தெரிவித்துள்ளார். இச்சந்திப்பின்போது கல்முனையின் சமகால விடயங்கள் தொடர்பிலும் விரிவாக கலந்துரையாடப்பட்டது.

(அகமட் எஸ். முகைடீன்)

1 comment:

Powered by Blogger.