Header Ads



ஜனாதிபதி பங்கேற்கும் நிகழ்வு, ஆர்ப்பாட்டத்துக்கு தடைவிதிக்க நீதவான் ஹம்ஸா மறுப்பு

திருகோணமலை இந்து கலாசார மண்டபத்துக்கு  முன்னால் வேலையற்ற பட்டதாரிகள், இன்று (16) முன்னெடுக்கவுள்ள ஆர்ப்பாட்டத்துக்குத் தடை விதிக்கக் கோரி, திருகோணமலை தலைமயகப் பொலிஸாரால் தாக்கல் செய்யப்பட்ட விண்ணப்பத்தை, திருகோணமலை பிரதான நீதவான் எம்.எச்.எம்.ஹம்ஸா நிராகரித்தார்.

அரச நத்தார் விழா, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் திருகோணமலை இந்து கலாசார மண்டபத்தில் இன்று நடைபெறவுள்ளது.

இதற்கமைய, தமது ஆதங்கத்தை ஜனாதிபதிக்குத் தெரியப்படுத்தும் வகையில், வேலையற்ற பட்டதாரிகள் அங்கு ஆர்ப்​பாட்டமொன்றை முன்னெடுக்கத் தீர்மானித்துள்ளனர்.

எனினும், குறித்த ஆர்ப்பாட்டத்தின் மூலம், மக்களுக்கு இடைஞ்சல் ஏற்படும் வகையில் பிரதான வீதிகளில் நெறிசல்  ஏற்படுத்த எதிர்பார்த்திருப்பதாக, பொலிஸ் புலனாய்வுப் பிரிவு தகவல் தெரிவித்துள்ளது.

இதனையடுத்து, இந்த ஆர்ப்பாட்டத்துக்குத் தலைமை தாங்கவிருக்கும் முகம்மட் அப்துல் முகம்மட் ராபி என்பவருக்கு எதிராகவும் ஆர்ப்பாட்டத்துக்குத் தடை விதிக்கக் கோரியும் திருகோணமலை தலைமயகப் பொலிஸார்  வழக்குத் தாக்கல் செய்தனர்.

எனினும், வேளையில்லா பட்டதாரிகளின் ஆதங்கமும் அவர்களுடைய நியாயமான கோரிக்கைகளையும் சமாதானமான முறையில் முன்வைப்பதில் எந்தத் தடையுமில்லையென, நீதவான் பொலிஸாரிடம் தெரிவித்தார்.

இதேவேளை, சமாதானத்துக்குக் குந்தகம் விளைவுக்கும் விதத்தில் செயற்பட்டால்  சட்ட நடவடிக்கை எடுக்குமாறும் திருகோணமலை பிரதான நீதவான் எம்.எச்.எம்.ஹம்ஸா கட்டளையிட்டார்.

அப்துல்சலாம் யாசீம் 

No comments

Powered by Blogger.