Header Ads



வட மாகாண சபை, ஆடுகிறதா..?

“நாடாளுமன்றமே, இந்த நாட்டுக்குப் பொறுப்புக் கூறுகிறது. வட மாகாண சபையானது, வடக்கு மாகாணத்துக்கு மட்டுமே பொறுப்புக் கூறுகிறது” என்று சுட்டிக்காட்டிய ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினரான பத்ம உதயசாந்த குணசேகர, ஏனைய மாகாண சபைகளிடம் கேட்கப்படும் கேள்விகளுக்குச் சம்பந்தப்பட்ட மாகாண சபைகளால் பதில்கள் அனுப்பி வைக்கப்படும் நிலையில், வட மாகாண சபை மட்டும் அதைச் செய்யாமல் இருப்பது ஏன் என்றும் அங்கிருப்பவர்கள் மாமன்னர்களா? என்றும் வினவினார்.

நாடாமன்றத்தில் நேற்று (23) வாய்மூல விடைக்கான வினாக்கள் நேரத்தின் போதே, அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

1983ஆம் ஆண்டளவில் வவுனியா மாவட்டத்தினுள் காணப்பட்ட நீர்பாசனங்கள், சிறு குளங்கள், அணைக்கட்டுகள், கால்வாய்களின் எண்ணிக்கை மற்றும் அவற்றின் மூலம் பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்பட்ட விவசாய நிலங்களின் அளவு என்பன பற்றி கேள்விகளைக் கேட்டிருந்தார்.

நீர்பாசன மற்றும் நீரக வளமூல முகாமைத்துவ அமைச்சரின் சார்பாக இதன்போது பதிலளித்த ஆளுந்தரப்பின் பிரதம கொறடாவான அமைச்சர் கயந்த கருணாதிலக, “இந்தக் காலத்துடன் சம்பந்தப்பட்ட தகவல்களைத் தேட முடியாத காரணத்தால் இவற்றுக்கான விவரங்களை அறியத்தர முடியாது” என்று குறிப்பிட்டார்.

அத்துடன், 1983ஆம் ஆண்டு தொடக்கம் 2009ஆம் ஆண்டு யுத்தம் முடிவடையும் வரை நீர்பாசனங்கள், குளங்கள், அணைக்கட்டுகள், கால்வாய்களை புனரமைப்பதற்காக ஒதுக்கப்பட்ட பணத்தொகை ஆண்டு வாரியாக எவ்வளவு என்ற கேள்விக்கும் அமைச்சர் கருணாதிலக மேற்படி பதிலேயே வழங்கினார்.

இதேநேரம், யுத்த நிலைவரம் முடிவடைந்த பின்னர் 2015ஆம் ஆண்டு வரை ஒட்டுமொத்த நீர்ப்பாசனங்கள், குளங்கள், அணைக்கட்டுகள், கால்வாய்களின் புனரமைப்புக்காக அரசாங்கத்தால் ஒதுக்கப்பட்ட பணத்தொகை ஆண்டு வாரியாக எவ்வளவு என்ற கேள்வியைப் பொறுத்த வரையில், 2011ஆம் ஆண்டுக்கு முன்னரான தகவல்களைத் தேடிக்கொள்ள முடியாதுள்ளதாக தெரிவித்த அமைச்சர், 2011ஆம் ஆண்டு தொடக்கம் 2015ஆம் ஆண்டு வரை அரசாங்கத்தால் ஒதுக்கப்பட்ட நிதிகள் பற்றிய விவரங்களைப் பதிலாக வழங்கினார்.

இதன்போது குறுக்கிட்ட பத்ம உதயசாந்த குணசேகர எம்.பி,

“வட மாகாண சபையின் நிர்வாகப் பகுதிக்குள் இருக்கும் இந்தத் தகவல்களைத் தேட முடியாமையால் அவற்றைப் பெற முடியாதிருப்பதாகவே அமைச்சர் இங்கு பதிலளித்தார். வடக்கு மற்றும் கிழக்கு பற்றி நான் தொடர்ச்சியாக இவ்வாறான கேள்விகளை முன்வைத்திருக்கிறேன். அவ்வாறான ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும் இவ்வாறான பதில்கள் எமக்குக் கிடைக்கின்றன. நாடாளுமன்றமே, இந்த நாட்டுக்கு பொறுப்பு கூறுகிறது. வட மாகாண சபையானது, வடக்கு மாகாணத்துக்கு மட்டுமே பொறுப்புக் கூறுகிறது.

“அதிகாரங்களைப் பகிரும் அரசியலமைப்பொன்றும் வருவதற்கு முன்னர் நாடு பிளவுப்படுத்தப்பட்டும் இல்லாத நிலையில் ஒற்றையாட்சிக்குள் வட மாகாண சபையின் தகவல்களை நாடளுமன்றத்துக்குக் கொண்டு வர முடியவில்லை என்றால், இந்த நாடளுமன்றம் இருந்து என்ன பயன்? இந்தப் பதிலில் நானோ அல்லது மக்களோ திருப்பதியடையப் போவதில்லை. வவுனியா மக்கள் திருப்தியடையப் போவதுமில்லை.

“ஆகவே, வட மாகாண சபையின் அந்தப் பதிலை நாடாளுமன்றம் ஏற்றுக்கொள்கிறதா என்று கயந்த கருணாதிலகவிடம் கேட்கிறேன். அந்தத் தகவல்களைப் பெற்றுக்கொள்வது ஒற்றையாட்சியின் கீழ் காணப்படும் இந்த நாடாளுமன்றத்தின் பொறுப்பாகும்.

“ஏனைய மாகாண சபைகளிடம் கேட்கப்படும் கேள்விகளுக்கு சம்பந்தப்பட்ட மாகாண சபைகளால் பதில் அனுப்பப்படும் நிலையில், வட மாகாண சபையில் இருப்பது மட்டும் மாமன்னர்கள் கிடையாதே” என்று தெரிவித்தார்.

இதேநேரம், இந்த விடயத்தை சம்பந்தப்பட்ட அமைச்சரின் கவனத்துக்கு முன்வைக்கிறேன் என்று ஆளுந்தரப்பின் பிரதம கொறடாவான கயந்த கருணாதிலக தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.