Header Ads



ஜிந்தோட்டையில், நடந்தது என்ன..? (முழு விபரம்)

(றஸ்மி - காலி)

நான்கு கிராம சேவகர் பிரிவுகளைக் கொண்டமைந்த, சிங்களக் குடும்பங்கள் உட்பட சுமார் 2000 குடும்பங்கள் வாழும், சுற்றி வர சிங்களப் பிரதேசங்களை சூழமைந்த, ஏனைய ஊர்களோடு ஒப்பிடுமிடத்து இனங்களுக்கிடையில் மிகுந்த புரிந்துணர்வுடனும், ஒத்துழைப்போடும் வாழும் கிந்தோட்டைப் பிரதேசத்தில் இடம்பெற்ற ஒரு மோட்டார் சைக்கிள் விபத்து தேசிய மட்டத்தில் பிரதான பேசுபொருளாக மாறும் அளவுக்கு இனக்கலவரமாக மாறி விட்டது.

மிகவும் அபூர்வமாக ஒரு சில சம்பவங்கள் நடந்தாலும் உடனடியாக அப்பிரச்சினை தீர்க்கப்பட்டு சுமூக நிலைக்குத் திரும்பும் அளவுக்கு பக்குவப்பட்டிருந்த ஒரு ஊரில் இப்படி ஒரு பேரவலம் ஏற்பட்டது உண்மையிலே கவலைக்குரிய ஒரு விடயமாகும். இச்சிறு சம்பவம் பூதாகரமாக்கப்படுவதற்கு சமூக வலைதளங்களும், இனவாதத்தினை வௌிப்படையாகவே போதிக்கும் சில பௌத்த காவிகளுமே காரணமாகும்.

கடந்த சில தினங்களுக்கு முன் இடம்பெற்ற ஒரு வீதி விபத்தே இப்பிரச்சினையின் மூல காரணமாக இருந்தது என்றாலும் இதற்குப் பின்னால் அரசியல் உள்நோக்கங்களும் இல்லாமல் இல்லை என்பது ஊரிலுள்ள புத்திஜீவிகளினதும், பொதுமக்களினதும் அபிப்பிராயமாகும்.

விடயத்திற்கு வருவோம். பாதையில் சென்று கொண்டிருந்த ஒரு முஸ்லிம் தாயினையும், அவரது சிறிய மகளையும் மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்த ஒரு சிங்கள இளைஞன் முட்டி மோதியதே பிரச்சினையின் மூல காரணமாகும். குறித்த இளைஞன் அவ்வேளை சாராயம் அருந்தியிருந்ததாகவும் சந்தர்ப்பத்தின் போது வீற்றிருந்த மக்கள் சொல்கின்றனர். வழமையாகவே இச்சிங்கள இளைஞன் மக்களை எரிச்சலடையச் செய்யும் வகையிலும், பிரச்சினையொன்றை வலுக்கட்டாயமாகவே உருவாக்கிக் கொள்வதற்கும் இவ்வாறு மிக வேகமாகப் பயணிப்பதனை தனது வாடிக்கையாகக் கொண்டவன். இவனைப் போலவே வம்புக்கிழுப்பதற்கென்றே சில சிங்கள இளைஞர்கள் பாதைகளில் மிகப் பயங்கர வேகத்துடன் பயணிப்பது தினமும் நடைபெறும் ஒரு விடயமானாலும் அதனை ஊரிலுள்ள முஸ்லிம்கள் பெரிதாக அலட்டிக் கொள்வதில்லை. மறுபக்கம், முஸ்லிங்களும் பாதைகளில் நிறைந்து கொண்டு போக்குவரத்திற்கு சில நேரங்களில் அஷௌகரீகமாக நடந்து கொள்வதனையும் மறுப்பதற்கில்லை.

பொதுவாக, வாகன விபத்துக்கள் ஏற்பட்டால் பாதசாரிகளின் பக்கம் பிழை இருந்தாலும், உயிருக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து குறித்த வாகன உரிமையாளரை எச்சரிப்பது அல்லது தாக்குவது தான் இலங்கை போன்ற மூன்றாம் மண்டல நாடுகளின் வழமை. இதனை இலங்கையில் எந்தப் பகுதியிலும் காணலாம். இப்படியான விபத்துக்களின் போது கொதிநிலையடையும் பொதுமக்கள் குறித்த வாகனத்தினை எரியூட்டுவதனையும், தன் பக்கம் பிழை இல்லை என்றாலும் வாகன சாரதி தப்பி ஒழித்து ஓடுவதும் இலங்கையில் சர்வசாதாரணமாக நடக்கும் ஒரு விடயம்.

குறித்த இந்த சம்பவத்தில் அந்த மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞனின் மேலே முழுத் தவறும் இருந்தது. மோதுண்ட மறுகணவே அந்த சிங்கள இளைஞன் குறிப்பிட்ட இடத்திலிருந்து ஓடித் தலைமறைவாகியதுடன் தனது நண்பனொருவனைத் தொடர்பு கொண்டு அந்த இடத்திற்குச் சென்று தனது மோட்டார் சைக்கிளை மீட்டுத் தருமாறு வேண்டியுள்ளான். அந்த இளைஞனும் வழமையாகவே முஸ்லிங்களை சீண்டும் பழக்கம் கொண்டவன் தான். தனது நண்பனின் வேண்டுகோளுக்கிணங்க அங்கு வந்த குறித்த இளைஞன் விபத்துக்குள்ளான அந்த மோட்டார் சைக்கிளை அகற்றிக் கொண்டு செல்ல முற்பட்ட வேளை அங்கிருந்த சில முஸ்லிம் இளைஞர்கள் அவனைத் தடுத்து சம்பந்தப்பட்ட ஓடி ஔிந்த இளைஞனுக்கு வந்து மோதுண்ட குறித்த அப்பாவிப் பெண் விடயத்தில் நீதியாக நடந்து கொள்ளச் சொல்லுமாறு வேண்டியுள்ளனர். அதனைப் பொருட்படுத்தாத அந்த சிங்கள இளைஞன் மிக மோசமான இனவாத சொற்களைக் கொண்டு முஸ்லிங்களைத் தூற்றிக் கொண்டு செல்லவே பொறுமையிழந்த ஒரு முஸ்லிம் இளைஞன் அவனைத் தாக்கியுள்ளான். (நாட்டு நிலவரங்களைக் கருத்திற்கொண்டு முஸ்லிம் இளைஞர்கள் இங்கு கொஞ்சம் விட்டுக்கொடுத்து நடந்திருக்கலாம்.) விடயம் பொலிஸ் வரை செல்லவே, அங்கு பாதிக்கப்பட்ட குறித்த பெண்ணுக்கு ரூ.25,000.00 நஷ்டஈடு வழங்குவது என்ற இணக்கப்பாட்டுடன் குறித்த சம்பவம் முடிவுக்கு வந்தது.
ஆனால், மறுதினம் முஸ்லிம் இளைஞர்கள் சிலர் பின்னேரம் விளையாடி விட்டு சிங்களவர்கள் செரிந்து வாழும் விதானகொட என்ற பாதையால் வீடு திரும்பிக் கொண்டிருந்த வேளை சிங்கள இளைஞர்கள் சிலரால் தாக்கப்பட்டுள்ளனர். அடிவாங்கிய முஸ்லிம் இளைஞர்கள் மீண்டும் தமது நண்பர்களைத் திரட்டிக் கொண்டு தம்மைத் தாக்கியவர்களை மீண்டும் தாக்க வந்துள்ளனர். இதன்போது அந்த சிங்கள இளைஞர்கள் அங்கிருந்த ஒரு சிங்கள வீட்டினுள் புகுந்ததால் அவ்வீட்டுக்கு ஒரு சிறிய தேசம் ஏற்பட்டது. ஆனால் சேதத்தினை அதிகரித்துக் காட்டுவதற்காக அவ்வீட்டாரும், குறித்த சிங்கள இளைஞர்களும் தமது கைகளாலேயே அந்த வீடு மற்றும் உபகரணங்களை சேதப்படுத்திக் கொண்டு முஸ்லிங்கள் மீது அதனைப் பலிபோடும் கைங்கரியத்தினையும் செய்துள்ளனர்.

இதற்குப் பின்னர் இந்த சம்பவத்தினை முடியுமானவரை சுமூக நிலைக்குத் திருப்ப முஸ்லிம் ஊர் தலைமைகள் கடும் முயற்சி செய்தும் பௌத்த குருமார் அதற்குத் தயாராக இருக்கவில்லை. சம்பவத்துடன் தொடர்புடைய சில முஸ்லிம் இளைஞர்கள் கைது செய்யப்பட்டதோடு பௌத்த தேரர்களின் வேண்டுகோளுக்கிணங்க குறித்த பிரதேச சபை முன்னால் உறுப்பினரும் எதிர்க்கட்சித் தலைவருமான ஹூஸைன் கியாஸ் அவர்களும் கைது செய்யப்பட்டார். இங்கு ஹூஸைன் கியாஸ் என்பவர் குறித்த முஸ்லிம் இளைஞர்களைக் கட்டுப்படுத்திக் கொள்வதற்காகவே குறித்த இடத்திற்கு சமூகமளித்திருந்தார் என்பதும் ஊரில் இன, மத பேதம் பாராது சேவையாற்றுபவர் என்பதும், தான் கற்ற சிங்களப் பாடசாலையான கா/ கிந்தோட்டை மகா வித்தியாலயத்தின் பழைய மாணவர் சங்க செயலாளராக சிங்கள சகோதரர்களாகலேயே தெரிவு செய்யப்பட்டவர் என்பதும் குறித்த சம்பவத்திற்கு அவரும் காரணம் என்று சிங்கள இனவாத ஊடகங்களில் அவர் பற்றிய பிழையான செய்திகள் பரப்பப் பட்டு வருகின்றது எனபதும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய ஒரு விடயமாகும்.

குறித்த நாள் இரவு அதாவது 16.11.2017 அன்று ஊரின் ஒவ்வொரு எல்லைகளிலும் சிங்கள இளைஞர்கள் குழுமிக் கொண்டு அவ்வழியால் வரும் முஸ்லிங்களை அச்சுறுத்திக் கொண்டிருந்ததோடு ஒரு சிலரைத் தாக்கியும் உள்ளனர். அதில் முஸ்லிங்களால் மிகவும் மதிக்கப்படும் ஊரில் இன, மத பேதங்களுக்கு அப்பால் சமூகப் பணிகளில் முழுமையாக தன்னை அர்ப்பணித்து செயலாற்றும் காலி மாவட்ட ஜம்இய்யதுல் உலமா சபையின் உப தலைவரான மௌலவி லுதுபுல் அளீம் அவர்களும் ஒருவராவார்.

அடுத்த நாள் அதாவது 17.11.2017 அன்று காலை முதல் பொலிஸ் மற்றும் இராணுவப் பாதுகாப்பு ஊரில் பலப்படுத்தப்பட்டிருந்தாலும் முஸ்லிங்கள் பெரியளவு அச்சமோ, சந்தேகமோ கொள்ளவில்லை. இந்த சம்பவங்கள் இதற்கு முன்னாலும் நடந்திருப்பதால் பெரிய விபரீதமாக மாறும் என்று யோசிக்கும் அளவுக்கோ, அல்லது அதற்கான முன் ஆயத்தங்களுக்கோ முஸ்லிங்கள் செல்லவில்லை. மாறாக, வழமையான நாட்களைப் போன்றே அந்நாளைக் கடத்தினர். ஆனால், இதற்கு மாற்றமாக கிந்தோட்டையிலுள்ள தூபாராம விகாரையில் பௌத்த குருமாரின் தலைமையில் சிங்கள மக்களால் மாலை 7.30 மணிக்கு ஒரு சதி ஒன்றுகூடல் மேற்கொள்ளப்பட்டு பல தீர்மானங்களுக்கு அவர்கள் வந்துள்ளமை பின்னர் தான் முஸ்லிங்களுக்குத் தெரிய வந்தது. அவ்வேளை ஒரு சில பொலிஸாரைத் தவிர ஊரில் மேற்கொள்ளப்பட்டிருந்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் முற்றாக நீக்கப்பட்டிருந்தன. நிலைமைகள் விபரீதமாகும் என்ற அச்ச நிலைமை தோன்றியதன் பின் பல்வேறு பட்ட அரசியல் தலைமைகளுக்கும், பாதுகாப்புப் பிரிவினருக்கும் தகவல் வழங்கப்பட்டும் தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவில்லை. பல அரசியல் தலைவர்களது தொலைபேசி இணைப்புக்கள் செயற்படவில்லை.

இந்நிலையில், ஏற்கனவே திட்டமிட்டிருந்த படி சமூகவலைதளங்கள் ஊடாகவும், ஏனைய வழிமுறைகளூடாகவும் வெவ்வேறு பகுதியிலிருந்து பல வாகனங்களில் திரட்டப்பட்டு வந்த 300க்கும் மேற்பட்ட சிங்கள இளைஞர்கள் பல குழுக்களாகப் பிரிந்து கிந்தோட்டைக்குப் பிரவேசிக்கும் பாதைகளை எல்லாம் இடைமறித்த வண்ணம் கொஞ்சம் கொஞ்சமாக ஊருக்குள் பிரவேசித்து இரவு 9.30 மணியளவில் தமது தாக்குதல்களை ஆரம்பித்தனர். குறிப்பாக, அம்பிடிய தூபாராம, கினிகுருந்த, எலபடவத்த, உக்குவத்த ஆகிய கிந்தோட்டைக்குப் பிரவேசிக்கும் பாதைகளினூடாக நான்கு குழுக்களாக வந்த சிங்களக் காடையர்கள் முஸ்லிம்களின் வீடுகள் மற்றும் ஏனைய உடைமைகளைத் தாக்கிக் கொண்டும் தீயிட்டுக் கொண்டும் சென்றனர். பயங்கரமாக மிகவும் மோசமான இனத்துவேச வார்த்தைகளைப் பிரயோகித்துக் கொண்டு தமது தாக்குதல்களை ஆரம்பித்த சிங்கள இளைஞர்களை வழிநடாத்தியவர்கள் சமூகங்களுக்கு மத்தியில் சுமூக நிலையினை ஏற்படுத்த வேண்டிய பௌத்த குருமார் என்பதுதான் மிகவும் கவலைக்கிடமானது. எதிர்பாராத இத்தாக்குதல்கள் தொடரவே எந்தவித எற்படுகளுமின்றி இருந்த முஸ்லிங்கள் நிலைகுழம்பிப் போய் வீதி விலக்குகளையும், வீட்டு விளக்குகளையும் அணைத்து விட்டு வீடுகளுக்குள் அடங்கிக் கொண்டனர். ஒரு சில முஸ்லிம் இளைஞர்களே களத்தில் நின்றாலும் அவர்களிடம் எந்தவித ஏற்பாடுகளும் இருக்கவில்லை. முடியுமானவரை அவர்களின் பிரவேசத்தினைத் தடுக்க அவர்கள் பாடுபட்டனர். அவ்விளைஞர்களும் களத்தில் இருந்திருக்காவிட்டால் சேதங்கள் இன்னும் மிகப் பயங்கரமாகவே இருந்திருக்கும்.

மூன்று மணித்தியாலங்களாகத் தொடர்ந்த இத்தாக்குதல்கள் காரணமாக சுமார் 60க்கு மேற்பட்ட வீடுகளும், 26 கடைகளும், 12 வாகனங்களும் இரண்டு பள்ளிவாயல்களும் சேதப்படுத்தப்பட்டன. (குறித்த புள்ளிவிபரங்கள் 18.11.2017 அன்று காலி மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற ஒரு கூட்டமொன்றின் போது முன்வைக்கப்பட்டவை என்பதனால் அதனையே பதிந்தேன்) இதில் பல வீடுகள் மோசமாக சேதப்படுத்தப்பட்டிருந்ததோடு பல வாகனங்கள் முழுமையாக தீக்கிரையாக்கப்பட்டிருந்தன. பாதுகாப்புப் பிரிவினர்கள் மிகத் தாமதித்தே களத்துக்கு விரைந்ததமை சிங்களவர்கள் தாம் எதிர்பார்த்தது போலவே தாக்குதல்களை மேற்கொள்வதற்கு வசதியாக அமைந்துவிட்டது.

களத்துக்கு விரைந்த பாதுகாப்புப் பிரிவினர் மற்றும் பொலிஸார் கூட நடுநிலைமையாக இயங்காமல் மிகவும் பாரபட்சமாகவே நடந்து கொண்டனர். முஸ்லிம் இளைஞர்களைத் தடுத்து நிறுத்துவதில் அவர்கள் காட்டிய அக்கறையின் தீவிரத்தில் ஒரு சதவீதத்தினைக் கூட தாக்குதலை மேற்கொள்ள வந்த வௌியூர்காரர்களைத் தடுப்பதில் அவர்கள் காட்டவில்லை. இக்கலவரத்தின் போது களத்தில் சிங்களக் காடையர்களுக்கு வழிகாட்டிக் கொண்டிருந்த ஒரு சிங்கள பௌத்த பிக்குவை பொலிஸார் குனிந்து கைகூம்பி வணங்கிக் கொண்டிருந்ததனையும் எமது இளைஞர்கள் காணத் தவறவில்லை. மட்டுமல்லாது, முஸ்லிங்களை அதிக வாடிக்கையாளர்களைக் கொண்ட ஒரு சிங்களக் கடை பாதுகாப்புப் பிரிவினராலேயே தீவைக்கப்பட்டமை மிக உறுதியான தகவலாக அமைந்திருந்ததோடு அதனை குறிப்பிட்ட பகுதியினைச் சேர்ந்த ஒரு சிங்கள வைத்தியர் ஒருவரும் உறுதிபடக் கூறியுள்ளார்.

மூன்று மணித்தியாலங்களாக முழுத் தாக்குதலில் ஈடுபட்ட சிங்களக் காடையர்கள் தமது முயற்சியினை கைவிடாமல் தொடர்ந்தும் விடியும் வரை கலைந்து செல்லாமல் மீண்டும் மீண்டும் சந்தர்ப்பங்களை எதிர்பார்த்து ஒவ்வொரு இடங்களிலும் குழுமிக் கொண்டிருந்தனர்.

உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டு அடுத்த நாள் காலை 9.00 மணிக்கு ஊரடங்குச் சட்டம் நீக்கப்படும் வரை வீடுகளில் பெண்களும், சிறுவர்களும் வீடுகளின் பின்பக்கங்களிலும், கழிவறைகளிலும் நேரத்தினைக் கடத்தியுள்ளனர். ஊரடங்குச் சட்டம் நீக்கப்பட்டதோடு களத்திற்கு விரைந்த முஸ்லிம் சிவில் அமைப்புக்கள் உடனடியாக சேத விபரங்களை மதிப்பிடத் தொடங்கினர். பல வீடுகளிலிருந்து பணங்கள் மற்றும் தங்க ஆபரணங்கள் கூட அலுமாரிகள் உடைக்கப்பட்டு களவாடப்பட்டிருந்தன. ஒரு வீட்டிலே சின்னப் பிள்ளைகளால் ஆர்வத்தோடு முட்டிகளில் சேமிக்கப்பட்டிருந்த சில்லறை நாணயங்களும் முட்டிகள் உடைக்கப்பட்டு களவாடப்பட்டிருந்தது. சேத விபரங்களை மதிப்பிடல், ஆவணப்படுத்தல் வேலைகளோடு முழு ஊர் மக்களுக்கும் தேவையான மூவேளைச் சாப்பாடுகளை ஏற்பாடு செய்வதிலும் ஊர் சிவில் சமூகங்கள் முழுமையாக ஈடுபட்டனர்.

மீண்டும் மாலை 6.30 (18.11.2017) முதல் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டு முழுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த நிலையிலும் இரவு 10.00 மணியளவில் சிங்களப் பகுதியை அண்டிய மிகவுமே வறிய நிலையிலுள்ள ஒரு ஏழை முஸ்லிமின் வீடு தீக்கிரையாக்கட்டது. குறித்த சந்தர்ப்பத்தில் அவ்வீட்டில் யாரும் இருக்கவில்லை. அவர்கள் ஏற்கனவே பயத்தின் காரணமாக வௌி இடங்களில் தங்கியிருந்தனர். (குறித்த தீவைத்தல் கைங்கரியத்தில் ஈடுபட்டவர் முஸ்லிங்கள் மிகவுமே செரிந்து வாழும் பகுதியில் சில்லறைக் கடை மற்றும் மற்றும் பழக்கடை வியாபாரம் செய்து முற்றுமுழுதாக முஸ்லிங்களையே வாடிக்கைளானராகக் கொண்ட ஒரு வியாபாரி என்பது இப்பொழுது தெரிய வந்துள்ளது. அத்தோடு நேற்றைய இரவும் ஒரு ஜம்ஆ பள்ளிக்கு பெற்றோல் குண்டு வீசப்பட்டிருந்தது. ஆனால் பாதிப்புக்கள் ஏற்படவில்லை. மட்டுமல்லாது, பக்கத்து ஊரான ஹிரிம்புற வின் ஜூம்ஆப் பள்ளிவாயலுக்கும் கல்வீச்சு மேற்கொள்ளப்பட்டுள்ளதோடு, கட்டுகொடை என்ற முஸ்லிங்கள் அதிகமாக செறிந்து வாழும் முஸ்லிம் ஊரிலுள்ள ஒரு தும்புத் தொழிற்சாலையொன்றும் எரியூட்டப்பட்டுள்ளது.

வியாழக்கிழமை இடம்பெற்ற சம்பவத்தின் பின்னால் வௌ்ளிக்கிழமை கா/ கிந்தோட்டை மகா வித்தியாலம் என்ற சிங்களப் பாடசாலைகளில் கல்வி கற்கும் முஸ்லிம் மாணவர்களை அப்பாடசாலையைச் சேர்ந்த சிங்கள மாணவர்களே மிக மோசமாக இனவாத சொற்கனைகளால் திட்டி பல்கலைக்கழகங்களில் பகிடிவதை செய்வது போன்று கண்ணையும், கையையும் கட்டி முகத்துக்கெல்லாம் தாக்குதல் செய்துள்ளனர். சிங்கள இளைஞர்கள் மட்டுமல்லாது சிறுவர்களுக்கு மத்தியிலும் கூட மிக மோசமான இனவெறி ஊட்டப்பட்டு வருகின்றது என்பதனையே இது வௌிப்படையாக எடுத்துக் காட்டுகின்றது. சம்பவங்களோடு எந்தவிதத் தொடர்பும் அற்ற, பரீட்சைகளுக்கு முகம் கொடுக்க வேண்டிய அப்பாவி முஸ்லிம் மாணவர்கள் சகபாடி மாணவர்களாலேயே தாக்கப்படுவது எந்தவித்திலும் ஏற்றுக் கொள்ள முடியாதவொன்று என்பதும் சகவாழ்வு, சகிப்புத்தன்மை, பன்மைத்துவத்தினை அங்கீகரித்தல் என்பன எந்தளவு தூரம் மாணவர்கள் மத்தியிலிருந்தே அற்றுப் போயுள்ளது என்பது ஆழமாக விவாதிக்கப்பட வேண்டியவொன்றாகும். நாட்டின் எதிர்காலத் தலைவர்களாக வர வேண்டிய இந்த சிறுவர்கள் சிறு வயதிலேயே மிக மோசமான இனவாதிகளாக மாறிக் கொண்டிருப்பதற்கு யார் காரணம் என்பதும் தேடப்பட வேண்டிய ஒரு விடயம். குறித்த இந்த கலவரத்தினால் இந்த முறை க.பொ.த. சாதாரணப் பரீட்சை எழுத வேண்டிய முஸ்லிம் மாணவர்கள் உளவியல் ரீதியாக மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளதோடு அவர்கள் கற்றல் நடவடிக்கைகளையும் முற்றாகக் கைவிட்டு விட்டு ஊர் வேளைகளில் ஈடுபட்டுக் கொண்டிருப்பது மிகவும் துரதிஷ்டமான ஒரு நிகழ்வாகும்.

இங்கு இன்னொரு விடயத்தினையும் சுட்டிக்காட்ட வேண்டும். முஸ்லிங்கள் மத்தியில் வியாபாரத் தளங்களை நிறுவி முஸ்லிங்களையே 90 வீத வாடிக்கைளார்களாகக் கொண்ட சிங்கள வியாபாரிகளும் இத்தாக்குதல் நடவடிக்கைளில் ஈடுபட்டிருந்தனர். கிந்தோட்டை முஸ்லிங்கள் தம்மோடு இணைந்து வாழும் சிங்களவர்களை என்றுமே ஒதுக்கிப் பார்த்ததில்லை. பல சிங்கள மேசன் மற்றும் தச்சர்கள், சில்லறைக்கடை வியாபாரிகள், வைத்தியர்களின் முழுமையான வாடிக்கைளார்கள் முஸ்லிங்களே. என்றுமே சிங்களவர்களை கிந்தோட்டை முஸ்லிங்கள் இனவாதக் கண்ணோட்டத்தோடு பார்த்ததில்லை.

பேசித் திர்க்கப்பட வேண்டிய ஒரு சிறிய சம்பவம் இனவாதத்தினை விதைப்பதையே முழு நேரத் தொழிலாகக் கொண்ட பொளத்த காவி நாய்களாலும், செய்வதற்கு உறுப்படியான ஒரு வேலை இல்லாமல் முகநூலில் குந்திக் கொண்டு இனவாதத்தினைப் பரப்பிக் கொண்டிருக்குக்கும் சிங்கள இளைஞர்களாலும், அரசியல் உள்நோக்கம் கொண்ட அரசியல்வாதிகளாலும் ஒரு பெரிய கலவரத்துக்கே வித்திடப்பட்டது இலங்கையின் ஒரு சாபக் கேடாகும். இலங்கை போன்ற வளங்கள் நிறைந்த ஒரு மிகச் சிறிய நாட்டினை திட்டமிட்டு முன்னேற்ற வக்கில்லாத ஒரு கேவலமான, லாயக்கே அற்ற அரசியல் தலைவர்களையும், மதத் தலைவர்களையும் கொண்ட ஒரு நாட்டில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். யுத்தத்தின் பின் கண்ட அபிவிருத்திக் கனவு, கனவாகவே யுக முடிவு வரை இருக்கப் போகின்றது. பிராந்தியத்திலுள்ள மலேசியா, சிங்கப்பூர், தாய்லாந்து போன்ற நாடுகள் பொருளாதாரத்தில் எங்கோ சென்று கொண்டிருக்க, வெறுமனே 20% முஸ்லிங்களை சனத்தொகையாகக் கொண்ட சிங்கப்பூர் நாட்டில் பர்தா அணியும் ஒரு முஸ்லிம் பெண் ஜனாதிபதியாகும் அளவுக்கு மிகவுமே பக்குவப்பட்ட மக்களையும், அரசியல் சாசனத்தினையும் கொண்டிருக்க, வளங்கள் நிறைந்த இச்சிறு நாடோ சுடுகாடாகிக் கொண்டு செல்கின்றது.

இனி எந்தவொரு ஜென்மத்திலாவது இலங்கை அபிவிருத்தி அடையும் என்பதனை கனவிலும் எதிர்பார்க்க முடியாது.

"இலங்கைக்கு அபஸரண"

7 comments:

  1. ரஸ்மிக்கு எமது நன்றிகள். இலங்கை முஸ்லிம்களின் பிரச்சினை உடனடியாக சர்வதேசப்படுத்தப்பட வேண்டும். இலங்கையில் சட்டம் ஒழுங்கு சரியாக அமுல்படுத்தப்படுவதில்லை. இதட்கான முழுப்பொறுப்பும் இந்த நாட்டின் பாதுகாப்பு தரப்பே பொறுப்பேற்க வேண்டும். இந்த விடயத்தை முஸ்லீம் அரசியல் வாதிகளினாலேயே முன்னெடுக்க பட வேண்டும்.
    ஒரு சரியான முஸ்லீம் அரசியல் தலைமைத்துவமும்... அரசியல் பிரதிநிதியும் இல்லாமையே முதல் காரணமாகும். எந்த அரசியல் வாதிக்கு முப்படைகளின் தளபதியான ஜனாதிபதியையும், பாதுகாப்பு அமைச்சரையும் குற்றம் சாட்ட அரசியல் நெஞ்சுரம் இருக்கு என்று கேட்க விரும்புகிறோம். முடிந்தால் இது சம்பந்தமாக பாராள மாற்றத்தில் ஒரு கவன ஈர்ப்பு பிரேரணையை இவர்களால் கொண்டு வர முடியுமா??????????????????????? அந்த பிரேரணையில் இந்த நாட்டில் சிங்கள படையே உண்டு. அது எல்லா இன மக்களுக்குமான படையாக மாற்றி அமைக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்த முடியுமா???????

    சட்டம் ஒழுங்கை நிலை நாட்டும் பாதுகாப்பு படை இந்த நாட்டில் உருவாக்கப்பட வேண்டும். 90% பிரச்சினை தீர்ந்து விடும். சோரம் போகும் அரசியல் வாதிகள் கவனத்தில் கொள்வார்களா??????????

    ReplyDelete
  2. மாவனல்லை, அழுத்கம இப்பொழுது கிந்தொடை.....
    இந்த மூன்று சந்தர்ப்பங்களிலும் ஒரு ஒற்றுமையை காணலாம்.
    பொலிசார் சிங்கள காடையர்களை பாதுகாக்கவும் முஸ்லிம்களை கட்டுப்படுத்தவுமே குவிக்கப்பட்டார்கள்.
    இனிமேலும் நம் சமூகம் இவர்களை நம்பி மடையர்களாகுவதா?
    பெற்றோர்கள் குழந்தைகளை தைரியமுள்ளவர்களாகவும் நுட்பமாக செயற்படுபவர்களாவும் வளர்ககவேண்டும்.

    மேலும் இந்த மூன்று சந்தர்ப்பங்களிலும் வெளியூர் காடையர்களாலேயே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஆனால் அவர்களுக்கு ஒத்தாசையாகவும் , ஆட்காட்டிகளாகவும் இருந்தவர்கள் உள்ளூர் வாசிகள் என்பதை மறுக்கமுடியாது.
    இனிமேலாவது இயக்காவாதிகளாக எங்களை பலபிரிவுகளாக பிரித்துக்கொண்டு மலவீனர்களாக ஆகாமல் ஒன்று சேர முயற்சிப்போம்.
    இன்ஷா அல்லாஹ்!!

    ReplyDelete
  3. மிகவும் பக்கசார்பாக எழதப்பட்டுள்ளது

    ReplyDelete
  4. முஸ்லிம்கள் கடைப்பிடிக்க வேண்டிய பொறுமை எம்மிடம் இல்லாததன் காரணம்தான் இவ்வாறான சிறிய விடயம்கள் எல்லாம் பெரும் இனக்கலவரத்தில் முடிகிறது. அன்று அக்குரணையிலும் இதைப்போன்ற ஒரு சிறிய சம்பவம்தான் முஸ்லிம்களால் பொறுமையாக கையாளப்படாததனால் ஒரு பெரும் இனக்கலவரத்தில் முடிந்தது. நாம் எப்போதுமே மற்றவரை தூற்றாமல் நாம் கடைப்பிடிக்க வேண்டிய பொறுமையை எமது மக்களுக்கு அறிவூட்டல் அவசியம்.

    ReplyDelete
  5. முதலில் இலங்கையில் முகநூல் (FACEBOOK , WATASAPP) முழுமையாக முடக்கப்பட வேண்டும் இப்படி செய்தால் ஓரளவு இனி வரும் காலங்களில் நடக்க இருக்கும் அசம்பாவிதங்களை தடுக்கலாம். என்றாலும் இலங்கை பெரும்பான்மை சிங்களவர்களிடம் இனவாதம் என்பதை ஓரளவு மண்டையில் போட்டு விட்டார்கள். இதற்கு ஜனசார பிக்குவும் அதற்கு உடந்தையாக இனவாத கட்சிகளும் முக்கியமாக சம்பிக்க ரணவக என்ற அமைச்சரும் மற்றும் இதில் அரசியல் இலாபம் தேடும் அரசியல் வாதிகளும் அடங்குவர்.
    ஹ்ம்ம் இலங்கையில் இனவாதம் தலை தூக்கி விட்டது இனி வரும் காலம் மிகவும் துன்பகரமான காலமாக தான் இருக்க போகின்றது. எல்லோரும் மன தூய்மையுடன் அல்லாஹ்விடம் பிரார்த்திப்போம். முக்கியமாக நாம் பெயரவில் முஸ்லிமாக இல்லாமல் செயலவில் முஸ்லிம்களாக வாழ முயற்சிப்போம்.

    ReplyDelete
  6. உண்மையில் எமது சமூகத்தை சேர்ந்த இளைஞர்கள் ஓரளவுக்கு பொறுமையாக இருந்திருக்கலாம்.எது எப்படியோ ஒரு சிறிய சம்பவத்தையும் பூதாகரமாக பார்க்கவும் அதை ஒரு இனக்கலவரமாகவும் மாற்றுவதற்கு பேரினவாதிகள் பெரும் பிரயத்தனங்கள் செய்து கொண்டு இருக்கிறார்கள். ஒவ்வொரு கிராமத்திலும் இனவாத தீப்பொறிகளை இளம் பிஞ்சுகளின் உள்ளங்களிலும் விதைத்து விட்டுள்ளதை இச்சம்பவம் எமக்கு மிகத்தெளிவாக தெரிவித்து இருக்கிறது. எனவே இதற்குரிய மாற்றுத்தீர்வு பற்றியே நாம் சிந்திக்க வேண்டிய தருணம் வந்துவிட்டது. முஸ்லிம்கள் வாழும் பகுதிகளுக்கு மத, இன நல்லுறவு குழுக்கள் தாபித்தல்.இப்படியான நிலையில் பொலிசார்,பாதுகாப்பு படையினர் இன,மத பேதமின்றி செயற்படும் நிலைமையை தோற்றுவிட்டது.இங்கே ஒரு விடயத்தை பெரும்பான்மை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் சம்வத்துடன் தொடர்பானவர்கள் யார் என்று உடனடியாக கண்டு பிடித்து சட்டம்,நீதியின் முன் நிறுத்துவது.தீர்வு பெற்றுக் கொள்வது.இதை விடுத்து தான் தோன்றித்தனமாக எந்தவித நியாயமுமின்றி வெறியாட்டம் போடுவதற்கு இந்த நாட்டில் யார் சட்ட அங்கீகாரம் கொடுத்தது.உடனடியாக முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளு மன்றதமன்றத்துக்கு உள்ளேயும் வெளியேயும் இப்படியான இனவன்முறையை இனிமேலும் அனுமதிக்க முடியாது என்று உரத்துக் குரல் கொடுக்க வேண்டும்.

    ReplyDelete
  7. முஸ்லிம்கள் ஓருயிர் ஓருடல்போல் எப்போது சகோதரர்களாக செயட்படுகிறார்களோ அன்றே முஸ்லிம்களின்மீது நடாத்தப்படும் அத்துமீறல்களுக்கெல்லாம் ஒரு முடிவுகாலம் பொறக்கும் ஆனால் இந்த கட்ச்சிகள் இயக்கங்கள் என்னும் பிரிவினைகள் மார்க்கத்தை கூறுபோடும் முனாஃபிக்குகள் இருக்கும்வரை இது சாத்தியமே இல்லை

    ReplyDelete

Powered by Blogger.