Header Ads



அரசியல்வாதிகள் மாத்திரம் காரணமல்ல...!

-டாக்டர். என். ஆரிப்-

சாய்ந்தமருது உள்ளுராட்சி சபை தொடர்பில் அந்த மக்கள் நீண்ட காலமாக கோரிக்கை வைத்து பலவிதமான முயற்சிகளை மேற்கொண்டு வந்திருந்தனர். அவ்வப்போது, தேர்தல் காலங்களில் சூடுபிடிப்பதும் பின்னர் தணிந்து விடுவதுமான ஒரு நிலைமையே கடந்த சில வருடங்களுக்கு முன்னர் வரை காணப்பட்டது. எனினும், இன்று அந்த நிலை மாறி தேசியம் தாண்டி சர்வதேசம் வரை பேசப்படுகின்ற ஒரு விடயமாக மாறிவிட்டது.

இந்தக் கோரிக்கையானது இன்று நேற்று உருவானதல்ல. அது 1988 ஆம் ஆண்டிலிருந்தே அதாவது கல்முனை பிரதேச சபை தோற்றம்பெற்ற மறுவருடத்தில் இருந்தே ஆரம்பித்துள்ளது. ஒரு சில தகவல் ஊடகங்கள் சரியான உண்மைகளை வெளிக்கொணராமல், இந்தக் கோரிக்கையானது கல்முனை மாநகர சபைக்கான கடந்த தேர்தலின் பின்னர் எழுந்த, யார் மேயர் என்ற பிரச்சினையின் பின்னரே தோற்றம்பெற்றது என்று சொல்கின்றன. இது முற்றிலும் தவறாகும். எனினும், அந்த நிகழ்வும் அதற்கு வேகம் கொடுத்தவைகளுள் ஒன்றாக இருக்கலாமே தவிர, அது தான் ஆரம்பமல்ல.

இதற்கு ஒரு சான்றாக, 1999.04.21 ஆம் திகதி அதாவது இற்றைக்கு பதினெட்டு வருடங்களுக்கு முன்னர், நாடாளுமன்றத்தில் பிரதேச சபைகள் திருத்த சட்டமூல உரையில் கலந்து கொண்டு உரையாற்றிய மர்ஹூம் அஷ்ரப் அவர்கள், சாய்ந்தமருதுக்கு தனியான பிரதேச சபையை ஏற்படுத்தித் தர வேண்டும் என்று குரல் எழுப்பியிருக்கிறார்.. அதே தினம் இச்சட்டமூல விவாதத்தில் கலந்துகொண்ட, முஸ்லிம் காங்கிரசின் தற்போதைய தலைவர் அமைச்சர் றவுப் ஹக்கீம் அவர்களும் சாய்ந்தமருதுக்கு பிரத்தியேகமான செயலகமும், தனியான உள்ளுராட்சி சபையையும் வழங்குமாறு கோரியிருந்தார்.(நன்றி: தினகரன் 23.04.1999) ஆகவே, இது இன்று நேற்று உருவான கோரிக்கையல்ல.

சாய்ந்தமருது மக்களின் இந்தக் கோரிக்கையானது கடந்த 2015 ஆம் ஆண்டில் சாய்ந்தமருது மாளிகை;காடு நம்பிக்கையாளர் சபை தலைமை தாங்கி முன்னெடுக்க ஆரம்பித்ததைத் தொடர்ந்து புதிய வடிவம் பெற்றது. அந்த வடிவத்தின் ஆரம்பத்தில் தாங்கள் நூறு வீதம் பிரதிநிதிகளைத் தெரிவுசெய்கின்ற கட்சியான முஸ்லிம் காங்கிரசையே அது நாடி நின்றது தெரிந்த விடயம். எனினும், அந்தக் கட்சியானது அதற்கான தீர்வை பெற்றுத்தர இதய சுத்தியோடு முயற்சிக்காமல் இழுத்தடிப்பு செய்தமையானது, அதன் எதிராளிகள் உள்ளே புகுந்து விளையாட வாய்ப்பாகிப் போனதுதான் உண்மை. அந்த வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்துவிட்டு, இப்போது எமது கட்சியை அழிப்பதற்கு சதிசெய்கிறார்கள் என்று கூப்பாடு போடுவதில் அர்த்தமில்லை. கூப்பாடு போட்டுக்கொண்டு இன்னும் அதே நிலைப்பாட்டைத் தொடர்வது தான் வேதனையான விடயமாகும்.

உள்ளுர் அரசியல்வாதிகளானாலும் சரி, வெளியூர் அரசியல்வாதிகளானாலும் சரி சாய்ந்தமருதுக்கான உள்ளுராட்சி சபை விடயத்தை தமக்கு ஏற்றவாறு சுயநலமாக கையிலெடுக்க முனைந்தார்களே தவிர, யாரும் உளத்தூய்மையாக முன்னெடுக்கவில்லை. இன்னும் அவர்கள் அவ்வாறு தான் நடந்து கொள்கிறார்கள் என்பது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போன்ற செயற்பாடாகும்.

சாய்ந்தமருது பிரிந்தால் கல்முனைக்கு பாதிப்பு என்றும், அதனால் அது பிரிந்து செல்வதை எந்த வகையிலும் அனுமதிக்க மாட்டோம் என்ற நிலைப்பாடு தான் கல்முனைக்குடி சகோதரர்களிடம் அண்மைக்காலம் வரை இருந்து வந்தது. நான்காகப் பிரிக்க வேண்டும் என்ற நிபந்தனை இருக்கவில்லை. அதனால் தான், பிரதமர் றணில் விக்கிரமசிங்க அவர்கள் கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது பகிரங்கமாக சாய்ந்தமருதுக்கு தனியாக சபை வழங்கப்பட நடவடிக்கை எடுக்கப்படும் என்று வாக்குறுதி வழங்கிய போதும் சரி, அதற்கு ஒரு வருடத்துக்குப் பிறகு, உள்ளுராட்சி அமைச்சர் பைசர் முஸ்தபா அவர்களைக் கொண்டு வந்து சாய்ந்தமருதுக்கு தனியான சபை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று வாக்குறுதி வழங்கிய போதும் சரி, இப்போது கல்முனையை நான்காகப் பிரிக்க வேண்டும் என்று குரல் கொடுக்கும் யாரும் எதிர்க்குரல் எழுப்பியிருக்கவில்லை என்பது கவனிக்கத்தக்கது.

இத்தகைய எந்த சந்தர்ப்பத்திலும் பிரதியமைச்சர் ஹரீஸோ அல்லது சமூகத்தின் பிரதிநிதிகளோ கல்முனையை நான்காகப் பிரித்துத்தான் சாய்ந்தமருதுக்கும் சபை வழங்க வேண்டும் என்றும் எந்த சந்தர்ப்பத்திலும் வெளிப்படுத்தியிருக்கவில்லை. குறிப்பாக கடந்த இரண்டு வருடங்களாக சாய்ந்தமருது அதனது இலக்கை அடைந்துகொள்வதற்காக பல தரப்பட்ட கிட்டத்தட்ட நாற்பதுக்கு மேற்பட்ட சந்திப்புகளை மேற்கொண்டதாகச் சொல்லப்படுகின்றது. ஆகவே இந்த செயற்பாட்டுக்கு அரசியல்வாதிகள் மாத்திரமல்ல, சமூகம் சார்ந்த பிரதிநிதிகளும் தவறிழைத்துள்ளார்கள் என்பதை ஏற்றுக்கொண்டேயாக வேண்டும். 

பகிரங்கமாக வாக்குறுதிகள் வழங்கப்பட்டதன் பிறகு, குறைந்த பட்சம் பிரதியமைச்சர் ஹரீஸிடமாவது சென்று தமது எதிர்ப்பைக் காட்டியிருக்கலாம். அவ்வாறு எதுவுமே நடந்ததாக பதிவுகள் இல்லை. ஆனால், இரண்டாகவும் பிரிக்க முடியாது என்ற நிலைப்பாடு நான்காகத் தான் பிரிக்கப்பட வேண்டும் என்று மாறியதற்கு நியாயமானதொரு காரணம் முன்வைக்கப்படுகிறது.

புதிதாக உள்ளுராட்சி சபைகளை நிறுவுவதற்கும், இருக்கின்ற சபைகளை தரமுயர்த்துவதற்கும் தேவையான அடிப்படைத் தகைமைகளை வரையறுப்பதற்கான குழுவொன்று அமைக்கப்பட்டு, அதன் பரிந்துரைகள் அமைச்சரவையினாலும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில், சாய்ந்தமருதுக்கு உத்தியோகபூர்வமாகவே நகர சபை கிடைப்பதற்கான சாத்தியப்பாடு எழுந்தது. இதற்குப் பிறகு தான் கல்முனையை நான்காகப் பிரிக்க வேண்டும் என்று நிபந்தனை முன்வைக்கப்பட்டது.
கல்முனையை நான்காகப் பிரிப்பதால் சாய்ந்தமருதுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை என்கின்ற நிலையில், சாய்ந்தமருது மக்கள் அதனை ஏன் சந்தேகக்கண் கொண்டு பார்க்கிறார்கள் என்ற கேள்வி எழுலாம். அவ்வாறான சந்தேகம் எழுவதற்கு காரணம் அதற்காக முன்வைக்கப்படுகின்ற நிபந்தனை தான். 

1987 ஆம் ஆண்டு ஏற்கெனவே கல்முனையில் இருந்த நான்கு நிருவாக சபைகள் ஒன்றாக இணைக்கப்பட்டுத் தான் கல்முனை பிரதேச சபை உருவாக்கப்பட்டு, அது நகர சபையாகி பின்னர் மாநகர சபையானது. பிரிப்பதானால் 1987 ஆம் ஆண்டுக்கு முன்பிருந்த எல்லைகளைக் கொண்ட சபைகள் தான் உருவாக்கப்பட வேண்டும் என்பது இன்றைய யதார்த்தமான சூழ்நிலை மற்றும் அரசியல் சமநிலையைக் கருத்திற்கொண்டவர்கள், அது நிறைவேறவே முடியாத ஒன்று என்பதை ஏற்றுக்கொள்வார்கள்.

கல்முனையைப் பிரிப்பதிலே இரண்டு பக்கத்திலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு தீர்வு வந்தாலொழிய அது தீர்க்கப்படாத பிரச்சினையாகவே இருக்கும். அப்படியிருக்கும் போது, கல்முனையை அதுவும் 1987 ஆம் ஆண்டிற்கு முன்பிருந்தவாறு தான் நான்காகப் பிரிக்க வேண்டும் என்று கோருவது, இந்தப் பிரச்சினை தீர்வில்லாமலே போய்விட வேண்டும் என்பதற்காகவா என்பது தான் சாய்ந்தமருது மக்களின் கேள்வியாக இருக்கின்றது. அதனை வலுவூட்டும் இன்னுமொரு காரணம், கல்முனைக்குடி தரப்பிலிருந்து எந்த சந்தர்ப்பத்திலும், இரு தரப்பினரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு தீர்வுக்கு வருவது என்று நெகிழ்வுத்தன்மையை இதுவரை வெளிப்படுத்தவில்லை.

அரச வர்த்தமானி மூலமாகப் பிரகடனப்படுத்தப்பட்ட தெளிவான எல்லைகளுடனான சாய்ந்தமருது ஏற்கெனவே பிரிந்து தான் இருக்கின்றது. எனவே, கல்முனையை மூன்றாகப் பிரிப்பதற்கு எல்லைப்பிரச்சினை முக்கிய பாகம் வகிக்கும். அதாவது, கல்முனை மாநகர சபைக்கும், தமிழர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட சபைக்கும் இடையிலான எல்லை எவ்வாறு அமைய வேண்டும் என்பது தான் கேள்விக்குறி.

இதுவரை வெளிப்படையாகச் சொல்லப்பட்ட ஒரு எல்லை 1987 ஆம் ஆண்டுக்கு முந்தியவாறான தாழவட்டுவான் சந்தியுடனான எல்லை. இந்த முற்காலத்து எல்லை தற்காலத்துக்கு யதார்த்தமில்லை என்பதை ஏற்கெனவே சொல்லப்பட்டுவிட்டது. இதற்கு அடுத்த தீர்வாக முன்வைக்கப்படுகின்ற ஒரு விடயம் நீதிமன்ற வீதியுடனான எல்லைப்பிரிப்பு. இதற்கும் தமிழ் மக்கள் ஒத்துக்கொள்வார்களா என்ற கேள்வி எழுகின்றது. இதுகூட யதார்த்த ரீதியாகப் பார்க்கின்ற போது நியாயமாகுமா என்றும் கேள்வி எழுகின்றது. சில விடயங்களை நியாயமாகப் பேசுகின்ற போது, சிலருக்கு ஏற்புடையதில்லாமல் இருக்கலாம். இருந்தாலும், சாய்ந்தமருது உள்ள10ராட்சி சபை பிரச்சினைக்கான தீர்வுக்குள் இந்த எல்லைப் பிரச்சினை கொக்கி போடப்பட்டுள்ளதால், அது பற்றிப் பேசவேண்டிய நிர்ப்பந்தம் சாய்ந்தமருது மக்களுக்கு திணிக்கப்பட்டுள்ளது.

நீதிமன்ற வீதிக்கும் றெஸ்ட் ஹவுஸ் வீதிக்கும் இடையிலான பிரதேசத்தை அவதானிக்கின்ற போது, அந்தப் பகுதியை யார் ஆட்கொண்டிருக்கிறார்கள் என்று யோசித்தால் யதார்த்தமாக விளங்கும். குறித்த அந்தப் பகுதிக்குள் வாழ்கின்றவர்கள் தமிழ் மக்கள். இருக்கின்ற பெரிய பாடசாலைகள் இரண்டும் தமிழ் மக்களுக்கானது. ஓரிரு இடங்களைத் தவிர, பெரும்பாலான இடங்கள் தமிழ் மக்களுக்குரியது. இவ்வாறான இயல்பான சூழ்நிலையில் எவ்வாறு தமிழ் மக்கள் இதற்கு உடன்படுவார்கள் என்பது நியாயமாகவே தெரிகின்றது.

நியாயமாகவும், யதார்த்தமாகவும் ஆராய்கின்ற போது, றெஸ்ட் ஹவுஸ் வீதியுடனான எல்லைப்பிரிப்பு இருபக்கத்தினராலும் ஏற்றுக்கொள்ளப்படக்கூடிய ஒன்றாகும். இவ்வாறு ஏதோவொரு வகையில் தீர்வை முன்வைக்காமல், தான் பிடித்த முயலுக்கு மூன்று கால்கள் தான் என்பது போல, எல்லை இவ்வாறு தான் இருக்க வேண்டும் என்று முரண்டுபிடிக்கும் நிபந்தனையானது சாய்ந்தமருதுக்கான உள்ள10ராட்சி சபைக்கான பிரச்சினைக்குத் தீர்வைத் தராது. அதனால் தான், கல்முனையை நான்காகப் பிரித்துத் தான் சாய்ந்தமருதுக்கு சபை வழங்க வேண்டும் என்பதானது தீர்வொன்று வரக்கூடாது என்று சொல்லப்படுவதாகவே கணிக்கப்படுகிறது. அப்படி இல்லை என்றால், நெகிழ்வுத் தன்மையோடும், விட்டுக்கொடுப்போடும் பிரச்சினைக்குத் தீர்வைக் கண்டு எல்லாவற்றுக்கும் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

அல்லது, இவை எதுவும் சாத்தியமில்லை என்றால், அதாவது கல்முனையை மூன்றாகப் பிரிப்பதில் உடனடித்தீர்வுக்கு வரமுடியாது என்றால், எதுவித எல்லைப் பிரச்சினைகளும் இல்லாத சாய்ந்தமருதுக்கு உரிய சபையை பிரகடனப்படுத்திவிட்டு, அடுத்த கட்ட நகர்வை இன்னும் பேசித் தீர்க்க முயற்சிக்க வேண்டும். அது தான் இந்தப் பிரதேசத்தின் ஒற்றுமையை உறுதிப்படுத்தும் என்பதையும் சம்பந்தப்பட்ட சகலரும் தெளிவாக விளங்கிக்கொள்ள வேண்டும்.

தமிழ் தரப்பினர் மிகவும் தெளிவாக அவர்களுடைய நிலைப்பாட்டை தெளிவுபடுத்திவிட்டனர். சாய்ந்தமருதுக்கு அவர்களுக்கான சபையைக் கொடுப்பதில் தமக்கு எந்தவிதமான ஆட்பேனையும் இ;ல்லை என்றும், கல்முனையை நான்காகப் பிரிக்குமாறு நாங்கள் கோரவில்லை என்றும், அவ்வாறு பிரித்தால் தமக்கும் ஒரு சபை வழங்கப்பட வேண்டும் என்றும் மிகவும் தெளிவாக சொல்லியுள்ளனர். அதேவேளை, கல்முனையை நான்காகப் பிரிக்க வேண்டும் என்று மட்டுமே இப்போது கல்முனைக்குடி சகோதரர்கள் சொல்லியுள்ளனர். ஆனால், சாய்ந்தமருது ஏற்கெனவே அரச வர்த்தமானி மூலம் தெளிவான எல்லைகளுடன் பிரிக்கப்பட்டுள்ளது. எனவே, எஞ்சிய கல்முனையை எவ்வாறு மூன்றாகப் பிரிப்பது என்பது தான் இன்றைய பிரச்சினையாக உள்ளது.

கல்முனையை எவ்வாறு மூன்றாகப் பிரிப்பது என்பது தொடர்பில் சம்பந்தப்பட்ட இரண்டு தரப்பினரும் புரிந்துணர்வுடன் விட்டுக்கொடுத்து, நியாயமான யதார்த்தமான அடிப்படையில் தீர்வொன்றுக்கு வந்தேயாக வேண்டும். ஏனெனில், சாய்ந்தமருது மக்களின் நீண்ட காலக் கோரிக்கையை நான்கு என்ற கொக்கி போட்டு வைத்திருப்பதானது இந்தப் பிரதேசத்தின் இதுவரையான ஒற்றுமைக்கும், அமைதிக்கும் வேட்டுவைத்து நிம்மதியான எதிர்காலத்தைச் சூனியமாக்கி விடுமா என்றதொரு அச்சம் ஏற்பட்டுள்ளது. எனவே, இனியும் வெறுமனே அரசியல்வாதிகள் மேல் பழிபோட்டு தப்பிவிடலாம் என்ற அபிப்பிராயத்தை மாற்றி, சமூகம் சார்ந்த பிரதிநிதிகள் யதார்த்தமான முறையில் சிந்தித்து முடிவெடுக்க வேண்டும்.

2 comments:

  1. From rest house road?? doctor you think tamils peoples are that much idiot.
    Advantage of This negotiation on tamils site so we never agree to that.
    Whtever you people request please be reasonabe

    ReplyDelete
  2. What is wrong with asking kalmunai town council boundary in 1987 do you know majority Muslim members choose tambipillai as chairman in 1965 kalmunaikudy people has no communal or area problem ms Kariapper and mc ahamed were elected as chairman ruled over 20years kalmunai town council even they are born in Saintamaruthu

    ReplyDelete

Powered by Blogger.