Header Ads



சிறைச்சாலை மருத்துவமனையில் சேர, கைதிகளுக்குப் புதிய கட்டுப்பாடு

இலங்கையில் சிறைக் கைதி ஒருவர் தனது நோயின் காரணமாக சிறைச்சாலை மருத்துவமனையில் தங்கியிருந்து சிகிச்சை பெற வேண்டிய தேவை ஏற்பட்டால் இனி அம்மருத்துவமனை மருத்துவர்கள் மூவரின் பரிந்துரை பெறப்பட வேண்டும் என சிறைச்சாலை மறு சீரமைப்பு அமைச்சு உத்தரவிட்டுள்ளது.

இந்த உத்தரவு சிறைச்சாலை ஆணையாளர் நாயகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது. மருத்துவர்களின் பரிந்துரைகள் முழுவதும் அமைச்சுக்கு அனுப்பப்படவேண்டும்.

அப்பரிந்துரைகள் தொடர்பாக அமைச்சு மட்டத்திலான விசாரணைகள் நடைபெறும் என சிறைச்சாலைகள் மறு சீரமைப்பு அமைச்சு கூறுகின்றது.

இதுவரை சிறைக்கதி ஒருவர் சிறை மருத்துவமனையில் சேர ஒரு மருத்துவரின் பரிந்துரை இருந்தால் போதும் என்ற நடைமுறையே பின்பற்றப்பட்டு வந்தது.

"கைதிகளை சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிப்பது தொடர்பாக பல்வேறு முறைகேடுகள் இடம் பெறுவதாக கிடைத்த புகார்களையடுத்தே இந் நடவடிக்கை " என்கின்றார் புனர்வாழ்வு , மீள் குடியேற்றம் மற்றும் சிறைச்சாலைகள் மறு சீரமைப்பு அமைச்சர் டி.எம் சுவாமிநாதன்.

அரசியல்வாதிகள் , உயர் பதவியில் இருப்பவர்கள் , பதவிகளிலிருந்து ஓய்வு பெற்றவர்கள் உள்ளிட்ட பிரமுகர்கள் சிறையில் இருக்கும் சந்தர்ப்பங்களில் சிறைச்சாலை வைத்தியசாலையை பயன்படுத்தி சலுகைகளை அனுபவிப்பதாக ஏற்கனவே விமர்சனங்களும் குற்றச்சாட்டுக்களும் எழுந்திருந்தன.

இதேவேளை, 2015ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் காலத்தில் ரூ 600 மில்லியன் அரச நிதி மோசடி தொடர்பான வழக்கில் கொழும்பு மேல் நீதிமன்றத்தால் குற்றவாளிகளாக இனம் காணப்பட்ட முன்னாள் ஜனாபதி மகிந்த ராஜபக்சவின் செயலாளராகப் பணியாற்றிய லலித் வீரதுங்க மற்றும் தொலைத் தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணையகத்தின் முன்னாள் தலைவர் அனுஷ பல்பிட்ட ஆகியோருக்கு கடந்த வியாழக்கிழமை 2 வருட கடூழிய சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டது.

இருவரும் சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டு 24 மணி நேரத்தில் வெலிக்கடை சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அபிவிருத்தி லொத்தர் சபையின் தலைவராக பதவி வகித்த காலத்தில் 85 இலட்சத்து 95 ஆயிரம் பெறுமதியான அரச வாகனத்தை முறைகேடாக பயன்படுத்தினார் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைதான முன்னாள் துனை அமைச்சர் சரண குனவர்த்தன கடந்த திங்கட்கிழமை முதல் எதிர்வரும் 18 ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

வெள்ளிக்கிழமை முதல் சிறைச்சாலை வைத்தியசாலையில் அவரும் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

No comments

Powered by Blogger.