Header Ads



ராம் ரஹிம், என்ன செய்யப் போகிறான்?

பாலியல் வல்லுறவு வழக்கில் "தேரா சச்சா செளதா" அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரஹீம் சிங், குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டதையடுத்து, ஹரியானாவின் பல்வேறு இடங்களில் வன்முறை வெடித்தது. அம் மாவட்டத்தின் சிர்சா நகரிலிருந்து செய்திகளை வழங்குகிறார் பிபிசி செய்தியாளர் ஜஸ்டின் ரெளலட்.

ஹரியானாவின் சிர்சா நகரம் ஒரு `பேய் நகரை` போல் காட்சியளிக்கிறது. கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன; தெருக்கள் அமைதியாக உள்ளன. இது அனைத்திற்கும் காரணம் கடுமையான 144 தடை உத்தரவு.

இங்குதான் சமீப நாட்களாக பரபரப்பை ஏற்படுத்தி வரும் குரு ராம் ரஹீமின் மிகப்பெரிய தலைமையகம் அமைந்துள்ளது.

இங்கு பலத்த ராணுவம் நிறுவப்பட்டுள்ளது. சுமார் 5000 சிப்பாய்கள் இருப்பதாக உள்ளூர்வாசிகள் தெரிவிக்கின்றனர். "தேரா சச்சா செளதா" வின் கோட்டைக்கான அனைத்து சாலைகளையும் தடுத்து வைத்துள்ளனர்.

நம்மால், அதிகபட்ச நெருக்கமாக இரண்டு கிலோமீட்டர் தூர இடைவேளியில் மட்டுமே செல்ல முடிந்தது.

தீர்ப்பு வருவதற்கு முன் பாதுகாப்பு குறைவாக இருந்தது. வெள்ளியன்று அந்த சாமியாருக்கு சொந்தமான வளாகத்திற்குள் நான்கு மணி நேரம் இருந்த பத்திரிக்கையாளர் ஒருவரிடம் பேசியதில் நம்மால் சில தகவல்களை சேகரிக்க முடிந்தது.

தனக்கென ரூபாய் நோட்டைக் கொண்ட "நகருக்கு உள்ளே இருக்கும் ஒரு நகரம்" என்று அந்த வளாகத்தை வர்ணித்தார் அவர். `குரு` வின் அற்புதங்களை போற்றும் வாக்கியங்கள் பொறிக்கப்பட்ட ஒரு பிளாஸ்டிக் டோக்கனை நம்மிடம் காண்பித்தார் அவர்.

குரு ராம் ரஹிம், மாளிகையை போல் காட்சியளிக்கும் ஒரு பெரிய ஆடம்பர பங்களாவில் வாழ்ந்ததாக சொல்கிறார். அதில் விடுதி, ஓய்வு விடுதி மற்றும் தங்கும் அறைகள் இருந்ததாகவும், அதன் பரப்பளவு சுமார் 800 ஏக்கராக இருக்கலாம் என்றும் அவர் தெரிவித்தார்.

அந்த மாளிகையின் முக்கிய கட்டடம் பெரிய அரங்கம்; அங்குதான் குரு தனது சந்திப்புகளை நிகழ்த்துவார் என்றும் மேலும் அவருக்கு மரியாதை செலுத்தும் வகையில் அங்குதான் அவரது வழிப்பாட்டாளர்கள் அவரின் காலில் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்குவர் என்றும் அவர் தெரிவித்தார்.

இந்தியாவின் தேசிய தொலைக்காட்சி சேனலில் பணிபுரியும் அந்த பத்திரிக்கையாளர், அந்த வளாகத்தின் உள்ளே பலர் இருந்ததை பார்த்தாக தெரிவித்தார்.

அந்த வளாகத்தின் ஒவ்வொரு இடங்களிலும் போடப்பட்டிருக்கும் தடுப்புகளைப் பற்றி அவர் நம்மிடம் விவரித்தார்.

அடுக்கடுக்கான லத்திகள், மூங்கில் கொம்புகள் மற்றும் பிற அடிப்படை ஆயுதங்கள் அங்கு வைக்கப்பட்டிருந்ததை பார்த்த அந்த பத்திரிக்கையாளர், குருவின் வழிபாட்டாளர்கள் சிலர் அந்த மாளிகையை தாக்குதலில் இருந்து காப்பாற்ற தயார்படுத்துகின்றனர் என நம்பியதாக தெரிவித்தார்.

அந்த வளாகத்தின் உள்ளே அதிகாரிகள் நுழைய திட்டமிட்டுள்ளனரா என்று தற்போது தெரியவில்லை.

யாரையும் அந்த மாளிகையில் செல்ல விடாமல் தடுப்பது மட்டுமே தற்போதைய யுக்தி என்றும், குருவின் வழிபாட்டாளர்கள் யாரேனும் வெளியே செல்ல விரும்பினால் செல்லலாம் என்றும், பாதுகாப்பு படையைச் சேர்ந்த பெயர் வெளியிட விரும்பாதவர்கள் தெரிவித்தனர்.

அதிகாரிகளுக்கு தற்போது இருக்கும் முக்கிய பொறுப்பு ஆணையை காப்பாற்றுவதே ஆகும்.

திங்களன்று குரு ராம் ரஹிமிற்கு தண்டனை விதிக்கப்படலாம். எனவே வன்முறைகள் மேலும் வெடிக்கலாம் என அச்சங்கள் உள்ளன.

இரண்டு பாலியல் வல்லுறவு வழக்குகளில் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளதால், அவருக்கு ஏழு வருடச் சிறை தண்டனை அல்லது ஆயுள் சிறை கிடைக்கலாம் என பிபிசி புரிந்து கொள்கிறது. bbc

No comments

Powered by Blogger.