Header Ads



பாலியல் வழக்கில் 10 ஆண்டு சிறை, மன்னித்துவிடும்படி கண்ணீர்விட்டழுத ராம்

பாலியல் பலாத்கார வழக்கில் சாமியார் குர்மீத் ராம்ரஹீம் சிங்குக்கு 10  ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. 

தேரா சச்சா சவுதா அமைப்பின் தலைவரான ராம் ரஹீம் சிங் மீது கடந்த 2002-ம் ஆண்டில் பாலியல் பலாத்கார வழக்குப்பதிவு செய்யப்பட்டது. கடந்த 15 ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த வழக்கு விசாரணை முடிவில், ராம் ரஹீம்சிங் குற்றவாளி என்று பஞ்ச்குலா சி.பி.ஐ நீதிமன்றம் கடந்த வெள்ளிக்கிழமை அறிவித்தது. இதையடுத்து, ராம் ரஹீம்சிங் ஹரியானா மாநிலம் ரோத்தக் பகுதியில் உள்ள சோனாரியா சிறையில் அடைக்கப்பட்டார். தீர்ப்பையடுத்து அவரின் ஆதரவாளர்கள் கலவரத்தில் ஈடுபட்டனர். இந்தக் கலவரத்தில் சிக்கி 30-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 250-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். ரயில்கள், பேருந்துகள், அரசு அலுவலகங்கள் போன்றவை தீயிட்டு கொளுத்தப்பட்டன. கலவரத்தால் ஏற்பட்ட இழப்புகளை ராம் ரஹீம் சிங்கின் சொத்துகளைப் பறிமுதல் செய்து ஈடுகட்ட வேண்டும் என்று நீதிமன்றம் கண்டிப்பு காட்டியது. மேலும், ராம் ரஹீமுக்கான தீர்ப்பு விவரங்களை நீதிபதி ஜக்தீப் சிங், சிறையில் வைத்தே அறிவிப்பார் என்று பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநில உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்காக, நீதிபதி ஜக்தீப் சிங்கை ஹெலிகாப்டரில் சிறைக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்றும், அவருக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் ஹரியானா மாநில அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்தநிலையில், ஹெலிகாப்டர் மூலம் சோனாரியா சிறைக்கு வந்த நீதிபதி ஜக்தீப் சிங், தண்டனை விவரங்களை அறிவிப்பதற்கு முன்பாக, இருதரப்பினரும் இறுதிவாதத்தை முன்வைக்க தலா 10 நிமிடங்கள் அவகாசம் அளித்தார். ராம் ரஹீம் சிங்குக்கு அதிகப்படியான தண்டனை வழங்க வேண்டும் என்று அரசு தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. ராம் ரஹீம் தரப்பில், அவர் மக்களின் நன்மைக்காக உழைத்தவர் என்பதைக் கருத்தில் கொண்டு நீதிபதி தண்டனை விவரங்களை அறிவிக்க வேண்டும் என்று வாதிடப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, சாமியார் ராம் ரஹீம் சிங்குக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து நீதிபதி ஜக்தீப் சிங் உத்தரவிட்டார். இறுதி வாதத்தின்போது நீதிபதி முன்பாக சாமியார் ராம்ரஹீம் சிங், தன்னை மன்னித்துவிடும்படி கண்ணீர்விட்டு அழுதார். 

1 comment:

  1. யார் இந்த கேடுகெட்டவன்? றஹீம் என்பது அவனுக்கு எவ்வாறு பொருந்தும்? தலையை வெட்டாமல் 10 வருடகால் ரெஸ்ட் கொடுத்திருக்கிரார்கள்!!!

    ReplyDelete

Powered by Blogger.