Header Ads



பாராளுமன்றத்தில் நேற்று நடந்த, புதிய சம்பவங்கள்


பாராளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டு செங்கோல் எடுத்துச்சென்ற பின்னர் ஒலித்த 'கோரம்' மணியினால் நேற்று பாராளுமன்றத்தில் பரபரப்பு ஏற்பட்டது. பாராளுமன்றம் ஒத்திவைக்கப்பட்ட பின்னர் சபை மண்டபத்திலிருந்த ஒன்றிணைந்த எதிரணியினர் இந்த கோரம் மணியை ஒலிக்கச் செய்தமையை பின்னர் அறிய முடிந்தது.

பாராளுமன்றத்தில் ஏற்பட்ட குழப்பத்தைத் தொடர்ந்து சபை நடவடிக்கைகள் நேற்று முற்பகல் 11.55 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டது. செங்கோல் எடுத்துச் செல்லப்பட்டு சபாநாயகர் உள்ளிட்ட சகலரும் சபையிலிருந்து வெளியேறினர். நண்பகல் 12 மணிக்கு பாராளுமன்றம் கூடுவதற்கான 'கோரம்' மணி ஒலிக்கப்பட்டது. மீண்டும் சபை கூடப்போகிறதா என்ற ஆர்வத்தில் சென்றபோது, சபா மண்டபத்தில் ஒன்றிணைந்த எதிரணி எம்பிக்களைக் காண முடிந்தது.

கோரம் மணி ஒலித்து ஓய்ந்ததும் பாராளுமன்ற அமர்வுகளை நடத்துவது போன்ற தோரணையில் அவர்கள் செயற்பட்டனர். எதிரணியின் பக்கம் நின்று கதைத்துக்கொண்டிருந்த பிரசன்ன ரணதுங்க எம்பி திடீரென ஆளும்கட்சிப் பக்கத்தில் ஜனாதிபதிக்காக ஒதுக்கியிருக்கும் ஆசனத்தில் சென்று அமர்ந்தார். அதன்போது அங்கிருந்த எம்பிக்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர்.

புதிய சபாநாயகர் தெரிவு, சபைமுதல்வர் தெரிவு என்பன இடம்பெறப்போவதாக ரஞ்சித் சொய்சா எம்பி கூறியதுடன், சபாநாயகராக பிரியங்கர ஜயரட்ணவின் பெயரை முன்மொழிவதாகக் கூறினார்.

அவர்கள் கூறும்போது சபைக்குள் நுழைந்த பிரியங்கர ஜயரட்ணவை, மஹிந்தானந்த அளுத்கமகே மற்றும் பிரசன்ன ரணவீர ஆகிய எம்பிக்கள் கையில் பிடித்துச் சென்று சபாநாயகர் ஆசனத்தில் அமரச் செய்தனர். ஏனைய எம்பிமார் மேசையில் தட்டி மகிழ்ச்சியை வெளியிட்டனர். அவர் ஆசனத்தில் இருக்கும்போது ரஞ்சித் செய்சா எம்பி ஒலிவாங்கியில் பேசும் தோரணையில் அரசுக்கு எதிரான கருத்துக்களைக் கூறிக் கொண்டிருந்தார். சில நிமிடங்களில் சபாநாயகர் ஆசனத்திலிருந்து பிரியங்க ஜயரட்ண எம்பி இறங்கியதுடன், சபை ஒத்திவைக்கப்படுவதாகக் கீழிருந்த எம்பிக்கள் கூறினர்.

அவர் இறங்கிவந்ததும் சபாநாயகர் கரு ஜயசூரியவை ஒன்றிணைந்த எதிரணி எம்பிக்கள் கடுமையாக வசைபாடும் கருத்துக்களைக் கூறியபடி வெளியேறினர்.

பாராளுமன்றம் ஒத்திவைக்கப்பட்ட பின்னர் கோரம் மணி ஒலிக்கப்பட்டமை மற்றும் சபாநாயகர் ஆசனத்தில் எம்பிக்கள் சென்று அமர்ந்த சம்பவங்கள் அண்மைய பாராளுமன்ற வரலாற்றில் புதிய சம்பவங்களாக இருந்தன.

மகேஸ்வரன் பிரசாத்

1 comment:

  1. so what is the action for this? no any disciplinary principal for parliament members? if there is then take a quick action and chase such a filtered foolish members from Parliament sittings

    ReplyDelete

Powered by Blogger.