Header Ads



அஸ்கிரிய பீடத்திடமிருந்து, அரசுக்கு 3 நிபந்தனைகள்

புதிய அரசமைப்பை உருவாக்குவதற்கு அரசுக்கு மூன்று நிபந்தனைகளை விதிக்கின்றன பிரதான பௌத்த பீடங்கள்.

ஒற்றையாட்சியை நீக்கக்கூடாது, பௌத்த மதத்துக்கான முன்னுரிமை கட்டாயம் வழங்கப்பட வேண்டும், காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை மாகாண சபைகளுக்கு வழங்கக்கூடாது என்ற மூன்று முக்கிய நிபந்தனைகளையே அவை முன்வைத்துள்ளன.

இவை தவிர்ந்த வேறு எந்தத் திருத்தங்களையும் அரசமைப்பில் மேற்கொள்ள முடியும் என்று அஸ்கிரிய பீடத்தின் பிரதான செயலாளர் மெதகம தம்மானந்த தேரர் தெரிவித்தார்.

புதிய அரசமைப்புத் தொடர்பில் பௌத்த பீடங்கள் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு ஆதரவாகச் செயற்படுகின்றன என்று முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பில் பௌத்த தேரர்களுக்கு விளக்கமளிக்கும் கூட்டமொன்று நேற்று கண்டி மாலிகாத்தன்ன சிறி போதிசத்வா விகாரையில் நடைபெற்றது.

அந்தக் கூட்டத்துக்குத் தலைமை தாங்கிய மெதகம தம்மானந்த தேரர் மேலும் கூறியவை வருமாறு,

உத்தேச அரசமைப்புக்கு எதிராக நாம் எதிர்ப்புத் தெரிவித்ததால் மல்வத்தை மற்றும் அஸ்கிரிய பீடங்கள் மஹிந்த ராஜபக்சவை மீண்டும் அதிகாரத்துக்குக் கொண்டு வருவதற்கு முயற்சி செய்கின்றன என்று குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன.

மஹிந்த ராஜபக்சவை இனி எவரும் அதிகாரத்துக்குக் கொண்டுவர முடியாது என்பதை அறியாதவர்களே இவ்வாறு குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றனர்.

நாங்கள் கட்சி சார்ந்தவர்கள் அல்லர். அரசமைப்பில் ஏதாவது மாற்றம் செய்வதாக இருந்தால் எவராக இருந்தாலும் எம்மிடம் வந்தே ஆகவேண்டும்.

நாம் எமது நிலைப்பாட்டைக் கூறுவோம். அதற்காக எம்மை ஒரு பக்கச்சார்பான அமைப்பாகச் சித்திரிப்பது பிழை.

நாங்கள் அரசியல்வாதிகளின் பின்னால் போகின்றவர்கள் அல்லர். அவர்கள்தான் எங்களிடம் வருவர். உருவாக்கப்படவிருப்பது புதிய அரசமைப்பா அல்லது அரசமைப்புத் திருத்தமா என்று எமக்குத் தெளிவில்லை.

புதிய அரசமைப்பை உருவாக்குவதாக இருந்தால் நாம் முன்வைக்கும் விடயங்கள் அதில் உள்வாங்கப்படவேண்டும்.

பௌத்த மதத்துக்கான முன்னுரிமையை நீக்குதல், ஒற்றையாட்சியை நீக்குதல், காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை மாகாண சபைகளுக்கு வழங்குதல் ஆகியவற்றை உள்ளடக்காமல் புதிய அரசமைப்பை உருவாக்கவோ அல்லது திருத்தம் செய்யவோ முடியும். இவை தவிர ஏனையவற்றைத் திருத்தினாலும் பரவாயில்லை என்றார்.

No comments

Powered by Blogger.