Header Ads



பிளாஸ்டிக் அரிசி குறித்த விளக்கங்கள் - எளிய 5 கேள்வி பதில்களில்..!

பிளாஸ்டிக் அரிசி குறித்த பேச்சு ஐ.டி அலுவலகங்கள் முதல் அடுக்களைகள்வரை சத்தமாகக் கேட்கத் தொடங்கிவிட்ட இந்த நேரத்தில், தமிழ்நாடு அரிசி ஆலை உரிமையாளர்கள் சங்கத்தினர் ‘பிளாஸ்டிக் அரிசி’ குறித்து சில விளக்கங்களை இன்று அளித்தனர். அந்தச் சங்கப் பிரதிநிதிகளிடம் கேட்கப்பட்ட சில கேள்விகளும்... அதற்கான பதில்களும்!

''அரிசியைச் செயற்கையாகச் செய்ய முடியுமா...?''

''நிச்சயமாக முடியும். அரிசிக் குருணையோடு சில இயற்கைத் தாதுக்களையும், சத்துக்களையும் சேர்த்து அரிசியை உற்பத்திச் செய்யமுடியும். முன்பே அமெரிக்கா, பிரேசில் உள்ளிட்ட நாடுகள் இதைச் செய்துள்ளன. இந்த அரிசி, சத்துக் குறைந்த குழந்தைகளுக்குக் கொடுக்கப்பட்டால் அவர்கள் உடல் தேறும். இதில் குறிப்பிட வேண்டிய விஷயம்... அரிசியைச் செயற்கையாக அரிசியிலிருந்துதான் உற்பத்தி செய்ய முடியும்... வேறு பொருள்களிலிருந்து இல்லை.'' 

''அப்படியானால், பிளாஸ்டிக் அரிசி...?''

''அது வெறும் வதந்தி. பிளாஸ்டிக் அரிசியெல்லாம் உற்பத்தி செய்யும் அளவுக்குத் தமிழக ஆலை உரிமையாளர்கள் மனசாட்சியற்றவர்கள் இல்லை. கொஞ்சம் குரூரமாக யோசித்தாலும், பிளாஸ்டிக் அரிசி செய்வது அதிக செலவு பிடிப்பதும்கூட... சந்தையில் ஒரு கிலோ பிளாஸ்டிக் துகளின் விலை ரூ 83 முதல் 90 வரை இருக்கிறது. இதில் எப்படிப் பிளாஸ்டிக் அரிசி செய்ய முடியும்..?''

''சரி... இந்தப் பிளாஸ்டிக் அரிசி குறித்த வதந்தி எங்கிருந்து தொடங்கியது...?''

''சீனாவில் இருந்துதான். 7 ஆண்டுகளுக்கு முன்பு சீனாவில் மிகப்பெரிய அரிசி ஊழல் நடந்தது. அந்த ஊழலில் பின்னணியில் நூடுல்ஸ் தயாரிப்பதற்காக ரெஸின் என்ற ரசாயனம் பயன்படுத்தப்படுவது  கண்டுபிடிக்கப்பட்டது. இந்த ரெஸின் பிளாஸ்டிக் பொருள்கள் தயாரிக்கப் பயன்படுத்தப்படுவதால், ‘பிளாஸ்டிக் அரிசி’ என்ற பெயர் அப்போது பிரபலமானது. இந்தியாவைப் பொறுத்தவரை, சில தினங்களுக்கு முன்பு ஜெகேந்திரபாத்தில் ஒருவர் உணவு உண்ண உணவகத்துக்குச் சென்றிருக்கிறார். அவர் உண்ட அரிசி வித்தியாசமாக இருந்திருக்கிறது. அந்த அரிசியின் மீது சந்தேகம் கொண்டு அவர் நீதிமன்றத்தை அணுகி இருக்கிறார். நீதிமன்றம் தெலங்கானா அரசுக்கு இதுகுறித்து விசாரிக்க உத்தரவிட்டது. விசாரணையில் அதுபோல எதுவும் இல்லை... பிளாஸ்டிக் அரிசி எல்லாம் பயன்படுத்தப்படவில்லை என்று தெரியவந்துள்ளது.'' 

''வாட்ஸ் அப்பில் உலாவும் ஒரு வீடியோவில் அரிசி குதிப்பது, மிதப்பது போன்றெல்லாம் காட்டப்படுகிறதே...?''

''உண்மையில், அரிசி குதிக்கும் தன்மை உடையதுதான். அரிசியில் ஊட்டச்சத்து இல்லையென்றால், அது மிதக்கச் செய்யும். அதற்காக அது பிளாஸ்டிக் அரிசி ஆகிவிடாது. உண்மையில், பிளாஸ்டிக் பயன்படுத்தப்பட்டால், நம் நீரின் கொதிநிலையில் அது உருகிவிடும்.'' 

''தரமான அரிசி எது என்பதை எப்படிக் கண்டுபிடிப்பது...?''

''வெள்ளையாக இருப்பதுதான் தரமான அரிசி என்று நினைக்கிறோம். உண்மை அதுவல்ல.. அரிசியில் தோல் (husk) மட்டும்தான் நீக்கப்பட வேண்டும். ஆனால், அரிசி வெள்ளையாக இருக்க வேண்டும் என்பதற்காக நாம் அதிகம் பாலிஷ் செய்கிறோம். உண்மையில், கைகுத்தல் அரிசிதான் தரமான அரிசி.''

No comments

Powered by Blogger.