Header Ads



மூனே மூனு வார்த்தை...!!!

மன அழுத்தத்துக்கு எத்தனையோ மருந்துகளும், சிகிச்சைகளும் இருக்கின்றன. ஆனால், அவ்வளவு தூரம் எல்லாம் போக வேண்டியதில்லை. மூணே மூணு வார்த்தைகளை தினசரி வாழ்க்கையில் பயன்படுத்தத் தொடங்கினாலே மன அழுத்தம் நம் பக்கம் தலைவைத்துப் படுக்காது என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். அப்படி என்ன மூணு வார்த்தை என்கிறீர்களா?

Please, Sorry, Thanks... இந்த மூன்றும்தான் அந்த மந்திர வார்த்தைகள். ‘சும்மா கதை விடாதீங்க பாஸ்’ என்று சந்தேகப்படும் ஆட்களுக்காகவே தங்களுடைய ஆய்வுக்கட்டுரையையும் சமர்ப்பித்திருக்கிறார்கள் அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் உள்ள ஹவுஸ்டன் பல்கலைக்கழக ஆய்வாளர்கள். 18 முதல் 58 வயதுக்குட்பட்ட 352 ஆண்கள், பெண்களிடத்தில், கேள்வி - பதில் வடிவத்தில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது.

ஆராய்ச்சியில் பங்குகொண்டவர்களிடத்தில் இருந்த மன அழுத்தம் மற்றும் மகிழ்ச்சிக்கான உணர்ச்சி வேறுபாடுகள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டது. அவர்களில் தேங்க்ஸ், ஸாரி, ப்ளீஸ் என்ற மூன்று வார்த்தைகளை அதிகம் பயன்படுத்தியவர்களிடம் மன அழுத்தம் குறைவாகக் காணப்பட்டதைக் கண்டுதான் ஆச்சரியப்பட்டார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

‘இந்த வேலையை எனக்காக செய்து கொடுக்க முடியுமா?’ என்று Pleasing-ஆக வார்த்தைகளைப் பயன்படுத்தும்போதும், செய்தது தவறு என்பதை உணர்ந்துகொண்டு Sorry கேட்டுவிட்டுப் போகிறவர்களிடமும், சின்ன விஷயமாக இருந்தாலும் Thanks சொல்லி நன்றி பாராட்டுகிறவர்களிடமும் மன அழுத்தம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இல்லை என்பது தெரிய வந்தது’ என்கிறார் ஆராய்ச்சியை மேற்கொண்ட மைக்கேல் டிபெக்கி. இனி நாமும் அந்த மூணு வார்த்தைகளைப் பயன்படுத்தித்தான் பார்ப்போமே....

- என்.ஹரிஹரன்

No comments

Powered by Blogger.