Header Ads



மஹிந்த கிணற்றுத் தவளை, மைத்திரிபால சிநேகபூர்வம் - பைசர்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் வெளிநாட்டுக் கொள்கை கிணற்றுத்தவளையின் நிலையில் இருந்ததாக உள்ளூராட்சி, மாகாண சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா விமர்சித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும்போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அமைச்சர் பைசர் முஸ்தபா,

கடந்த அரசாங்கத்தின் வெளிநாட்டுக் கொள்கை காரணமாக சர்வதேசத்தில் பல நாடுகள் எம்முடன் முரண்படும் நிலை உருவாகியிருந்தது. அத்துடன் பொருளாதார தடைகள் விதிக்கப்படும் அச்சுறுத்தல்களும் எதிர்கொள்ளப்பட்டிருந்தது.

எனினும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சிநேகபூர்வ அணுகுமுறை காரணமாக தற்போது சர்வதேச நாடுகள் எம்முடன் நட்புறவை ஏற்படுத்திக் கொண்டுள்ளன.

போர்க்குற்றங்கள் தொடர்பான விசாரணைகளில் அரச சார்பற்ற அமைப்புகளின் தேவைக்கேற்ப செயற்பட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தயாரில்லை. அதன் காரணமாகவே அவர் கலப்பு நீதிமன்றப் பொறிமுறை மற்றும் வெளிநாட்டு நீதிபதிகளின் பிரசன்னம் என்பவற்றை எதிர்த்து வருகின்றார்.

அத்துடன் இலங்கையில் போர்க்குற்றங்கள் எதுவும் நடைபெறவில்லை. ஜனாதிபதி இந்த நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கின்றார். கடந்த காலங்களில் போன்று இப்போது சிறுபான்மை மக்களுக்கு எதிரான செயற்பாடுகள் எதுவும் இந்த அரசாங்கத்தில் நடைபெறுவதில்லை.

நல்லிணக்க செயற்பாடுகள் தொடர்பில் இந்த அரசாங்கம் முன்னுரிமையளித்து செயற்படுகின்றது என்றும் அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.