Header Ads



'குடிக்கத் தண்ணி இல்லைன்னு, பொண்ணு கொடுக்க மறுக்கும் கிராமத்தின் கண்ணீர் கதை

மக்கள் எதிர்ப்பைக் கவனத்தில்கொள்ளாமல் தாமிரபரணியில் தினசரி 13 லட்சம் லிட்டர் தண்ணீர் உறிஞ்சுக்கொள்ள பன்னாட்டு குளிர்பான நிறுவனங்களுக்கு உத்தரவு கொடுத்துள்ள நீதிமன்றத்தின் பார்வைக்கும், உபரி நீரைத்தான் கொடுக்கிறோம் என்று ‘உணர்வில்லாமல்’ பதில் சொன்ன தமிழக அரசின் கவனத்துக்கும்...

கோடை ஆரம்பிப்பதற்கு முன்பாகவே காலிக் குடங்களோடு வீதிக்கு வந்து போராடும் மக்களின் தாகத்தை உள்வாங்கியிருக்கிறீர்களா நீங்கள்.? எப்போது தண்ணீர் வரும் என்று குழாயடியிலேயே தவம்கிடப்பவர்களை உங்களுக்குத் தெரியுமா? இரண்டு நாளைக்கு மூன்று குடம் என்று முறைவைத்து தண்ணீர் பிடிக்கும் கிராம மக்களின் தவிப்பை அறிந்திருக்கிறீர்களா.? தண்ணீர் இல்லையென்பதால் பல குடும்பங்கள் ஊரைவிட்டே வெளியேறிய சோகம் கண்டதுண்டா.? வாழ்வாதாரமாக இருந்த ஆடுமாடுகளையெல்லாம் தண்ணீர் இல்லாததால் சொற்ப தொகைக்கு விற்கும் துயரம் உங்களை வந்தடைந்திருக்கிறதா.?

தர்மபுரி மாவட்டம் பிக்கிலி ஊராட்சிக்குட்பட்ட குறவன் திண்ணை மலை கிராம மக்கள்தான் தண்ணீர் இல்லாமல் மேற்சொன்ன அத்தனை துயரங்களையும் அனுபவிக்கிறார்கள். “ஜோக்கர் திரைப்படத்தில் ’சின்னாத்து மண்ணே... என் பொண்ணே... ’ என்று ஒரு பாடல் வருமே, அந்த சின்னாறுக்கு அருகே பல அடி உயரத்தில் அமைந்திருக்கிறது குறவன் திண்ணை. 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் இங்கு வசிக்கின்றன. ஆடு மாடு வளர்ப்பதுதான் இந்தக் கிராமத்தின் பிரதான தொழில். பத்துவருடங்களுக்கு முன்பு செல்வசெழிப்போடு வாழ்ந்த குறவன் திண்ணை கிராமமக்கள் இன்று ஒருகுடம் தண்ணீருக்காக லோ...லோவென அலைகிறார்கள். பள்ளி முடிந்து வீடு திரும்பியதும், குடங்களை எடுத்துக்கொண்டு தண்ணீர் பிடிக்க செல்வதுதான் இங்குள்ள சிறுவர்களுக்கு ஹோம் ஒர்க்.

ஐம்பது வயது நிரம்பிய மாதேஷ், தண்ணீரை பஸ் டியூப்பில் கட்டி ஒரு சரக்குப்பொருளைப்போல கொண்டுவருவதைப் பார்க்கும்போது எதிர்காலத்தின் மீது அச்சம் படர்கிறது.

தண்ணீர்

“கிட்டதட்ட ஆறேழு வருஷமா இப்படித்தான் தண்ணி எடுத்துட்டு வர்றேன். 3 கிலோ மீட்டர் தொலைவுல இருக்க ஜீவா நகருக்குத்தான் தண்ணீர் எடுக்க போகணும். 3 கிலோமீட்டர்னா சாதாரணமா நினைச்சிறாதீங்க. அதோ தெரியுது பாருங்க அதள பாதாள பள்ளம் அந்த பள்ளத்துலதான் என் வீடு. அங்கிருந்து கரடுமுரடான பாதையை கடந்து தண்ணீர் எடுக்க வரணும். என்று அவர் காட்டிய திசையை பார்க்கும்போதே நமக்கு நாக்கு வறண்டுபோகிறது. இன்னும் கோடை வந்திருச்சின்னா ஜீவா நகர்லயும் தண்ணி இருக்காது.

பத்து கிலோமீட்டர்ல இருக்கிற பாப்பாரப்பட்டிக்கு போகணும். என்ன பண்றது பத்து மாடு நிக்குது அதுங்க உயிர்வாழ வேண்டாமா.? குடத்துல தண்ணி எடுத்துட்டு வந்தால் நான் பொழுதுக்கும் தண்ணி எடுத்துகிட்டே இருக்க வேண்டியதுதான். அதான் யோசிச்சேன், பஸ் டியூப்பை வாங்கியாந்து வெட்டி ஒரு முனையில குச்சியை வச்சி இருக்க கட்டிட்டிடேன். இன்னெரு முனை வழியா தண்ணிர் பிடிச்சி, தண்ணீர் நிரம்புனதும் இந்த முனையிலும் குச்சியை வச்சி கட்டிருவேன். அது நீளமா மலைப்பாம்பு மாதிரி இருக்கும். அதை அப்டியே வளைச்சு ஒரு பெரிய சாக்குக்குள்ள போட்ருவேன். இந்த டியூப்ல கிட்டதட்ட 9 குடம் தண்ணீர் கொள்ளும்.

அதை வண்டியில தூக்கி வக்கிறதுதான் பெரிய காரியம். என் ஒரு ஆளால அது முடியாது. இன்னொரு ஆள் பிடிக்கணும். அதுமட்டுமில்லாம ஜீவா நகர் மக்கள்கிட்ட நான் வாங்கிற வசவு இருக்கே... ஐயோ, மானம் ரோஷம் பாத்தாக்க இங்க தண்ணியே குடிக்க முடியாது. அவுங்களையும் குத்தம் சொல்ல முடியாது அங்க உள்ள மக்களும் தண்ணி பிடிக்கணும்ல. நான் ஒவ்வொரு நாளும் கெஞ்சி கூத்தாடிதான் தண்ணீர் பிடிச்சிட்டு வருவேன்.

காலையில ஒருமுறை, மதியானம் ஒருமுறை, சாயங்காலம் ஒரு முறைனு ஒரு நாளைக்கு மூணு முறை தண்ணீர் கொண்டு வர்றேன். ரொம்ப கஷ்டம்தான் முடியல ஆனால், மாடுகளை வளர்க்கணுமே. தண்ணி இல்லாததால புல்லு கூட வளர்க்க முடியல. வீணா தீயிட்டு கொளுத்துற கரும்புத்தோகையை காசு கொடுத்து வாங்கி மாடுகளுக்கு தீவணம் போடுறோம். ஒரு லோடு 3500ரூபாய். அதுவே வைக்கோல்னா ஒரு குட்டியானை( டாடா ஏஸ்) 11,500 ரூபாய். மாடுகளை விற்கவும் மனசு வரமாட்டேங்குது அதுகதான் இத்தனைகாலமும் எங்களை காப்பாத்திச்சிங்க. என்னால முடியுற வரைக்கும் எப்படியாவது தண்ணி கொண்டுவந்து இந்த மாடுகளை காப்பாத்துவேன்”

என்று மாதேஷ் சொல்லும்போது மனசு கனத்துப்போகிறது.

இன்னொரு காட்சி இன்னும் அதிர்ச்சியாக இருந்தது. சில வீடுகளில் ஆயிரக்கணக்கில் செலவழித்து பெரிய சிமெண்ட் தொட்டி கட்டிப்போட்டிருக்கிறார்கள். தண்ணீரே இல்லாத கிராமத்துக்கு இவ்வளவு பெரிய தொட்டி ஏன் என்று விசாரித்தால், ஆற்றுத்தண்ணீரை காசு கொடுத்து வாங்கி தொட்டியில் நிரப்பிக்கொள்கிறார்களாம். அந்த பகுதியைச் சேர்ந்த அம்பிகாவிடம் பேசினோம்,

“ இந்த ஊர்ல ஒரே ஒரு அடி பம்ப் இருக்கு. சில வருஷத்துக்கு முன்ன வரைக்கும் அந்த பம்புல நிரம்ப தண்ணி வந்துச்சி. இப்போ தண்ணி வத்திப்போச்சு. ஊற ஊறத்தான் தண்ணி அடிக்க முடியும். இங்க ஐம்பது குடும்பம் இருக்காங்க. ஒவ்வொரு குடும்பமும் இரண்டு நாளைக்கு முன்று குடம் தண்ணிக்கு மேல எடுக்க கூடாதுனு ஊர் கட்டுப்பாடு. நான் இன்னைக்கு மூன்று குடம் தண்ணீர் பிடிச்சிடேன்னா ஒரு நாள் விட்டுத்தான் தண்ணீர் பிடிக்க வரணும். மூணு குடத்துக்கு மேல ஒரு குடம்கூட எக்ஸ்ட்ரா கிடையாது. அந்த மூணு குட தண்ணி ரெண்டு நாளைக்கு சமைக்க, குளிக்க, துவைக்க போதுமா.? அதனால பக்கத்து ஊருக்குப் போக வேண்டியிருக்கு. இங்க விவசாயம் இல்லாததால ஆம்பளைங்க பெங்களூரு, கேரளான்னு வேலைக்கு போயிடுறாங்க. வீட்ல இருக்க பொம்பளைங்க எவ்வளவு தூரம்போய் தண்ணி பிடிக்க முடியும்.? பசங்க இருக்க வீடுகளுக்கு பிரச்னை இல்லை. தண்ணி இல்லாததால இதுவரைக்கும் பத்து குடும்பம் இங்கிருந்து காலி பண்ணி அவுங்க சொந்தக்காரங்க வீட்டுக்குப் போயிட்டாங்க. மழைகாலத்துலதான் திரும்பி வருவாங்க. கொஞ்சம் வசதியானங்க வீட்ல தொட்டி கட்டி காசுக்கு தண்ணி வாங்கிக்கிறாங்க. ஒரு டேங்க் ஆத்து தண்ணி 850 ரூபாய். விவசாயம் பண்ணுறவங்களும் சிலர் ஆத்து தண்ணி காசுக்கு வாங்கி பாய்ச்சுறாங்க. பணம் இல்லாதவங்க என்ன பண்ண முடியும்.? நானெல்லாம் 50 ஆடு பத்து மாடு வளர்த்தேன்... தண்ணி இல்லாததால எல்லாத்தையும் கொடுத்துட்டு இப்போ மொட்டையா உட்காந்துருக்கேன். தண்ணி இல்லாததால இந்த ஊரு பசங்களுக்கு யாரும் பொண்ணு தரமாட்டேங்குறாங்கன்னா பாத்துக்கோங்களேன் ” அம்பிகாவின் வார்த்தைகள் வறண்டு ஒலிக்கிறது.

பிக்கிலி ஊராட்சியின் முன்னாள் கவுன்சிலர் சின்னசாமி, ஒரு காலத்துல விவசாயத்துல ஓஹோன்னு இருந்த ஊரு இன்னைக்கு பொட்டல்காடா மாறிடுச்சி. இருக்கிற ஆடு மாடுகளையெல்லாம் வித்துதான் பலபேர் வாழ்க்கையை ஓட்டுறாங்க. இவுங்களுக்கு வேற வழி இல்லைன்னு தெரிஞ்சிகிட்ட வியாபாரிங்க அடிமாட்டு விலைக்குத்தான் ஆடு மாடுகளை வாங்கிறாங்க. ஒரேஒரு நாள் இந்தக் கிராமத்துல வாழ்ந்தீங்கன்னா உங்களுக்கு வாழ்க்கை வெறுத்துடும். காசு பணத்துக்காக போராடுற மாதிரி நாங்க தண்ணிக்காக அல்லாடுறோம் என்று முடித்தார்.

1 comment:

  1. Tamil Nadu MLA's wallowing in millions of public fund. They are living off the back of these downtrodden people. How callous is this??
    World human rights watch must take this matter in its paramount consideration. Water is a fundamental right of each mortal.

    ReplyDelete

Powered by Blogger.