Header Ads



சிறுநீரகக் கல்லே, நீ எங்கிருந்து வந்தாய்..?

-டாக்டர் கு.கணேசன்-

விலாவில் பயங்கர வலியோடு கிராமத்துக் கிழவர் ஒருவர் என்னிடம் சிகிச்சைக்கு வந்தார். ஸ்கேன் பார்த்ததில் அவருக்கு இரண்டு சிறுநீரகங்களிலும் கற்கள் இருப்பது தெரிந்தது. சிகிச்சை கொடுத்தேன். அவர் மருத்துவமனையில் தங்கியிருந்தபோது மனைவியோடு அடிக்கடி சண்டை போட்டுக் கொண்டிருப்பதாக புகார் வந்தது. விசாரித்தேன். “எனக்குக் கல்லு வந்ததுக்குக் காரணமே என் பொண்டாட்டிதான், டாக்டர்… அவிச்ச இட்லியிலே கல்லு. வடிச்ச சாதத்துலே கல்லு. வீட்டில் ஆக்கிப்போடுவதெல்லாமே கல்லுதான்.

இப்படிக் கல்லும் மண்ணுமா சமைச்சிப் போட்டு எனக்குக் கல்லு வர வச்சுட்டா, டாக்டர்!” என்று புலம்பினார். அவரைச் சமாதானப்படுத்தி, “சாப்பாட்டில் இருக்கும் கல்லுக்கும் சிறுநீர்க் கல்லுக்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லை!” என்று புரியவைப்பதற்குள் மண்டை காய்ந்துவிட்டது. இப்படி ஒருவர், இருவர் என்றில்லை… ஆயிரக்கணக்கில் இருக்கிறார்கள். “சிறுநீரகத்தில் கல் இருக்கிறது” என்று சொன்னதும், உடன் வந்த மனைவியிடமோ, மருமகளிடமோ, “உடனே அரிசிக் கடையை மாத்து” என்றுதான் கோபமாகச் சொல்வார்கள்.

அதில் உண்மையில்லை. சிறுநீர்க் கல் தோன்றுவது தனிக் கதை. நாம் குடிக்கும் தண்ணீரிலும் சாப்பிடும் உணவிலும் கால்சியம், பாஸ்பேட், ஆக்சலேட் எனப் பல உப்புகள் உள்ளன. சாதாரணமாக உணவு செரித்த பிறகு இவை எல்லாமே சிறுநீரில் வெளியேறிவிடும். சமயங்களில், இவற்றின் அளவு ரத்தத்தில் அதிகமாகிவிடும். அப்போது, இவை சிறுநீரில் வெளியேற சிரமப்படும். கிடைத்த இடத்தில் படுத்துக்கொள்ளும் துறவி மாதிரி சிறுநீர் வடியும் பாதையில் எங்கு வேண்டுமானாலும் இந்த உப்புகள் படிகம்போல் படிந்து, கல் போலத் திரளும். சிறு கடுகு அளவில் ஆரம்பித்து பெரிய நெல்லிக்காய் அளவுக்கு வளர்ந்துவிடும். இதுதான் சிறுநீர்க் கல்.

இது யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். வழக்கத்தில், பெண்களைவிட ஆண்களையே அதிகம் பாதிக்கும். வியர்க்க விறுவிறுக்க உழைக்கும் ஆண்கள் என்றால், பூக்களைத் தேடி வரும் தேனீக்கள் போல சிறுநீர்க் கற்கள் குஷியாக வந்து சேரும். என்ன காரணம்? நிறைய வியர்க்கும்போது இயல்பாகவே சிறுநீரின் அளவும் குறைந்துவிடுகிறது. அப்போது சிறுநீரில் வெளியேற வேண்டிய உப்பு, சிறுநீரகத்திலேயே தங்கிப் படிந்து, கல்லாக மாறுகிறது. அதிக வெயிலில் அலைந்தாலும், வேலை பார்த்தாலும் இந்த வாய்ப்பு அதிகரிக்கிறது.

சிறுநீரகத்தில் உப்போ, கல்லோ சேராமல் இருக்க வேண்டுமானால் அதனுள் தண்ணீர் தாராளமாக வந்து போக வேண்டும். அப்போதுதான் அது கல்லும் மண்ணும் கலக்காமல் ‘சுத்த’மாக இருக்கும். சிலர் தண்ணீர் குடிக்கவே சோம்பல்படுவார்கள். அதிலும் குளிர்காலத்தில் தண்ணீரை ஓர் எதிரிமாதிரிதான் பார்ப்பார்கள். சாப்பிடும்போது தண்ணீர் குடிப்பதோடு சரி, மற்ற நேரங்களில் தண்ணீரைத் தொடவே மாட்டார்கள்.

உடலுக்குத் தேவையான அளவுக்குத் தண்ணீர் குடிக்காதவர்களுக்குசிறுநீர்க் கல் கட்டாயம் வரும். இந்த வரியில் “தேவையான அளவுக்கு” என்பதை அடிக்கோடிட்டுப் படியுங்கள். காரணம், தேவைக்கு மேல் தண்ணீர் குடித்தாலும் ஆபத்துதான். அப்படி அதிகமாகக் குடிக்கும்போது, சிறுநீரும் அதிக அளவில் வெளியேற வேண்டும். இது சிறுநீரகத்துக்கு நாம் தரும் சுமை. சிலருக்கு இரண்டு சிறுநீரகங்களிலும் கல் உண்டாகி, சிறுநீர் செல்லும் பாதையை அடைத்துக்கொள்ளும்.

அடுத்த காரணம், சிறுநீர்த் தொற்று. இது அடிக்கடி ஏற்பட்டால், திறந்த வளைக்குள் எலி புகுவது எவ்வளவு எளிதோ அவ்வளவு எளிதில் சிறுநீர்க் கல் தோன்றும். எப்படி? கிருமிகள் சிறுநீரகப் பாதையைத் தாக்கும்போது அங்கு பல இடங்களில் ‘பல்லாங்குழிகள்’ உண்டாகும். நோய் சரியான பிறகும் அவை மூடப்படாமலேயே இருக்கும். அப்போது கால்சியம் போன்ற உப்புகள் சிறுநீரில் கொஞ்சமே இருந்தாலும், அந்த வழியாக அவை வரும்போது, அக்குழிகளில் படிந்து ‘பணியாரம்’ மாதிரி சிறுநீர்க் கல் உருவாகும். சில கிருமிகள் யூரியாவை உற்பத்திசெய்கின்றன. யூரியா அளவுக்கு மீறினால், அதுவும் கல்லாக மாறிவிடும்.

கல் இல்லாத வாழ்வுக்கு என்ன வழி?

* தினமும் குறைந்தது 3 லிட்டர் தண்ணீர் அருந்துங்கள்.
* வெயிலில் அதிகம் அலையாதீர்கள்.
* உணவில் உப்பைக் குறைத்துக்கொள்ளுங்கள்.
* துரித உணவுகளை ஓரங்கட்டுங்கள்.
* இறைச்சி சாப்பிடுவதைக் குறைத்துக்கொள்ளுங்கள்.
* கோலி சோடா, பிளாக் டீ மற்றும் செயற்கை மென்பானங்கள் குடிப்பதைத் தவிருங்கள்.
* வாழைத்தண்டுச் சாறு, நீர் மோர், பார்லி தண்ணீர் சாப்பிடுங்கள்.
* பால் பொருட்களைக் குறைத்துக்கொள்ளுங்கள்.
* நீர்ச்சத்துள்ள பழங்களையும் காய்கறிகளையும் அதிகப்படுத்துங்கள்.
* டாக்டர் சொல்லாமல் கால்சியம் மாத்திரைகளைச் சாப்பிடாதீர்கள்.

No comments

Powered by Blogger.