Header Ads



ஜெனிவாவில் இலங்கை பற்றிய, இன்றைய விவாதத்தில் நடந்தவை (முழு விபரம்)

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்கா தொடர்பாக ஐ.நா மனித உரிமை ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேன் சமர்ப்பித்த அறிக்கை மீது தற்போது விவாதம் இடம்பெற்று வருகிறது. சிறிலங்கா நேரப்படி இரவு 7.40 மணியளவில் இந்த விவாதம் ஆரம்பித்தது.

இதில் ஐ.நா மனித உரிமை ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேன், 30/1 தீர்மானத்தின் மூலம் வழங்கப்பட்ட ஆணைக்கு அமைய, அதன் பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதா என்பது பற்றிய தமது அறிக்கையை சமர்ப்பித்து உரையாற்றினார்.

இதன் போது, அவர் வெளிநாட்டு நீதிபதிகள், விசாரணையாளர்கள், வழக்குத் தொடுனர்களை உள்ளடக்கிய விசாரணைப் பொறிமுறையை அமைக்க வேண்டும் என்றும், அனைத்துலக பங்களிப்பை பெற்றுக் கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

அத்துடன், பயங்கரவாத தடைச்சட்ட நீக்கம், காணிகள் விடுவிப்பு, பாதுகாப்புப் படையினர் தண்டனையில் இருந்து தப்பிக்கும் கலாசாரம் முடிவுக்கு கொண்டு வரப்படல் உள்ளிட்ட விடயங்கள் இடம்பெற வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

இதையடுத்து, ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் அறிக்கை மீதான விவாதம் இடம் பெற்று வருகிறது,

சிறிலங்கா பதிலளிப்பதற்கு காலஅவகாசம் அளிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து, ஐரோப்பிய ஒன்றியம், கனடா, செக் குடியரசு, ஜேர்மனி, மொன்ரனிக்ரோ, டென்மார்க், பிரான்ஸ், சுவிஸ், ஜப்பான், அவுஸ்ரேலியா, பிரித்தானியா, சீனா, பாகிஸ்தான், நியூசிலாந்து, அமெரிக்கா, எஸ்தோனியா, சூடான், மசிடோனியா, நோர்வே, அயர்லாந்து, ஸ்பெய்ன், பெல்ஜியம், நெதர்லாந்து, ரஷ்யா, கானா, மாலைதீவு, பங்களாதேஷ் ஆகிய நாடுகள் உரையாற்றின.

இதையடுத்து தற்போது, மனித உரிமை அமைப்புகள் மற்றும் அரசசார்பற்ற நிறுவனங்கள் உரையாற்ற வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. முதலாவதாக கஜேந்திர குமார் பொன்னம்பலம், நிமல்கா பெர்னான்டோ, ஆகியோர் உரையாற்றினர். இதையடுத்து அன்புமணி இராமதாஸ், பாக்கியசோதி சரவணமுத்து உள்ளிட்டவர்கள் உரையாற்றினர்.

இதன் பின்னர், ஐ.நா மனித உரிமை ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேன் பதில் உரை நிகழ்த்தினார். இதையடுத்து, சிறிலங்கா நேரப்படி, இரவு 9.13 மணியளவில் இந்த விவாதம் முடிவுக்கு வந்துள்ளது.

2

ஜெனிவாவில் சிறிலங்காவுக்கு ஏமாற்றம்

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இன்று நடந்த சிறிலங்கா தொடர்பான விவாதத்தில், சிறிலங்காவின் பிரதி வெளிவிவகார அமைச்சர் ஹர்ஷ டி சில்வா தனது உரையை இடையில் நிறுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது.

ஐ.நா மனித உரிமை ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேனின் அறிக்கை பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டதையடுத்து, சிறிலங்காவுக்கு பதில் உரை ஆற்றும் சந்தர்ப்பம் அளிக்கப்பட்டது. சிறிலங்கா தரப்பில் உதில் அறிக்கையை சமர்ப்பிக்க 5 நிமிட அவகாசம் அளிக்கப்பட்டது.

சிறிலங்கா பிரதி வெளிவிவகார அமைச்சர் ஹர்ஷ டி சில்வா சிறிலங்கா சார்பில் பதில் அறிக்கையை வாசித்தார். எனினும் அவர் தனது அறிக்கையை வாசித்துக் கொண்டிருந்த போதே, பேரவைத் தலைவர், குறுக்கிட்டு ஒதுக்கப்பட்ட நேரம் முடிந்து விட்டதாக உரையை நிறுத்தினார்.

பொறுப்புக்கூறல் பொறிமுறை பற்றிய பதிலை வழங்கிக் கொண்டிருந்த போதே சிறிலங்கா  பிரதி வெளிவிவகார அமைச்சரின் உரை இடைநிறுத்தப்பட்டது. இதனால் சிறிலங்கா தரப்பின் முழுமையான பதில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்க முடியாத நிலை ஏற்பட்டது.

இன்றும் நாளையும் நடக்கும் அமர்வுகளில் பங்கேற்பதற்காகவே ஹர்ஷ டி சில்வா ஜெனிவாவுக்குச் சென்றிருந்தார்.

இன்றைய அமர்வுகளில் சிறிலங்கா சார்பில் ஜெனிவாவுக்கான நிரந்தர பிரதிநிதி ரவிநாத ஆரியசிங்க மற்றும் மனோ தித்தவெல ஆகியோரும் கலந்து கொண்டனர்.

அதேவேளை சூடான் நாட்டுப் பிரதிநிதி சிறிலங்காவின் நல்லிணக்க முயற்சிகளை வரவேற்று உரையாற்றியதை அடுத்து, அருகில் இருந்த பிரதி வெளிவிவகார அமைச்சர் ஹர்ஷ டி சில்வா அவருக்கு கைலாகு கொடுத்தார்.

No comments

Powered by Blogger.