Header Ads



பைசர் முஸ்தபா - விக்னேஸ்வரன் சந்திப்பு

யாழ் - கைதடியில் உள்ள வடமாகாண முதலமைச்சர் அலுவலகத்தில் இன்று (19) மாலை 5.30 மணியளவில் இலங்கையின் மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பைசர் முஸ்தபா மற்றும் வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் ஆகியோருக்கு இடையில் சந்திப்பு ஒன்று நடைபெற்றுள்ளது.

குறித்த சந்திப்பில் பல விடயங்கள் பேசப்பட்டு, தீர்வுகளும் காணப்பட்டிருக்கின்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

நெடுந்தீவுக்கான படகு போக்குவரத்தை ஆரம்பிக்கும் நிகழ்வுக்காக இன்றைய தினம் யாழிற்கு விஜயம் மேற்கொண்ட மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பைசர் முஸ்தபா வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் மற்றும் அமைச்சர் ஐங்கரநேசன், ஆகியோரை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இந்த சந்திப்பின் நிறைவில் அமைச்சர் பைசர் முஸ்தபா மற்றும் முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் ஆகியோர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளனர்.

இதன்போது, மத்திய அரசாங்கம் மாகாணசபையின் எல்லைக்குள் தான் தோன்றி தனமான செயற்பாடுகளில் ஈடுபடுவதாக மாகாணசபை முன்வைக்கும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
அதற்கு பதிலளித்த அமைச்சர் முஸ்தபா, இரு தரப்பினருக்குமிடையில் ஒழுங்கான கருத்து பரிமாற்றம் இல்லாமையினாலேயே இவ்வாறான பிரச்சினைகள் உருவாகின்றது.

எனவே ஒழுங்கான கருத்து பரிமாற்றத்தை உருவாக்கினால் பல பிரச்சினைகள் தீர்க்கப்படும். இவ்வாறான பிரச்சினைகள் தொடர்பாக எமக்கு முன்னதாகவே தெரியப்படுத்தினால் அனேகமான பிரச்சினைகளை தீர்து கொள்ளலாம் என கூறியுள்ளார்.

குறித்த சந்திப்பின் போது முதலமைச்சர் பதிலளிக்கையில், அமைச்சர் கூறியதைப்போல் எமக்குள் ஒழுங்கான கருத்து பரிமாற்றம் இல்லாமையினால்பல பிரச்சினைகள் உருவாகின்றது என்பதையும் ஒழுங்கான கருத்து பரிமாற்றங்கள் இருக்குமாக இருந்தால் நாங்கள் பல நன்மைகளை பெறலாம் என்பதையும் அறிந்திருக்கின்றோம்.

இதனடிப்படையில் 2 மாதங்களுக்கு ஒரு தடவை வடமாகாண முதலமைச்சர் அமைச்சர்கள் தேவை ஏற்படின் மற்றைய மாகாணங்களின் முதலமைச்சர்கள் இணைந்து அமைச்சர் பைசர் முஸ்தபாவை சந்தித்து பிரச்சினைகள் தொடர்பாக ஆராய்வதென தீர்மானிக்கப்பட்டுள்ளது என முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த சந்திப்பில் வடமாகாணத்தில் உள்ள பல பிரச்சினைகள் தொடர்பாக ஆராய்ந்துள்ளதாகவும் கூறியுள்ளனர்.

இதேவேளை வடமாகாண முதலமைச்சர் நிதியம் நியதிச்சட்டத்திற்கு மத்திய அரசாங்கம் அங்கீகாரமளிக்க வேண்டும் என முதலமைச்சர் அமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதன்போது ஊவாமாகாணம், சப்ரகமுவ மாகாணம் ஆகிய மாகாணங்களில் முதலமைச்சர் நியதிச்சட்டம் நடைமுறையில் உள்ளது.

மேலும் வடகிழக்கு மாகாணமாக இருந்தபோதும் இவ்வாறான ஒரு சட்டம் இருந்துள்ளது. எனவே வடமாகாணசபையினால் தயாரிக்கப்பட்டு சட்டமா அதிபர் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ள முதலமைச்சர் நிதியம் நியதிச்சட்டத்திற்கு அங்கீகாரம் வழங்கப்படவேண்டும் என முதலமைச்சர் கேட்டு கொண்டுள்ளதுடன் இதற்கான கவனம் செலுத்துவதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.