Header Ads



அலெப்போவில் வெற்றியை நெருங்கும், சிரிய அரச படை


சிரியாவில் கிளர்ச்சியாளர் வசமிருக்கும் அலெப்போவின் பழைய நகரை அரச படை கைப்பற்றியுள்ளது. இதன்மூலம் கிளர்ச்சியாளர்கள் அவர்களின் கடைசி நகர் பகுதியில் இருந்து வெளியேற்றப்படும் நிலை நெருங்கி இருப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கிழக்கு அலெப்போவில் இருந்து கிளர்ச்சியாளர்கள் சரணடைவது மற்றும் வாபஸ் பெறுவது பற்றி ரஷ்யா மற்றும் அமெரிக்க இராஜதந்திரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். எனினும் அந்த நகரை கைவிடப்போவதில்லை என்று அரச எதிர்ப்பாளர்கள் தொடர்ந்து கூறி வருகின்றனர்.

இது பற்றி அமெரிக்கா மற்றும் ரஷ்யாவுக்கு இடையில் ஜெனீவாவில் பேச்சுவார்த்தை நடப்பதாக ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்கே லவ்ரொவ் குறிப்பிட்டபோதும் அப்படியான ஒரு சந்திப்பு இடம்பெறவில்லை என்று ஜெனீவா வட்டாரங்கள் கூறியுள்ளன.

கிழக்கு அலெப்போவை கிளர்ச்சியாளர்கள் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு மேல் தமது கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். எனினும் கடந்த இரண்டு வார காலத்திற்கு அவர்கள் தமது நிலப்பகுதியில் மூன்றில் இரண்டை இழந்துள்ளனர்.

இந்நிலையில் கடந்த செவ்வாய் பின்னேரம் அரச படை அலெப்போவின் பழைய நகருக்குள் நுழைந்ததை அடுத்து கிளர்ச்சியாளர்கள் வாபஸ் பெற ஆரம்பித்துள்ளனர். கடுமையான வான்வழி தாக்குதல்கள் மற்றும் ஷெல் தாக்குதல்களை சமாளிக்க முடியாமலேயே அரச எதிர்ப்பாளர்கள் வெளியேறியுள்ளனர். இதன்போது வரலாற்று முக்கியம் வாய்ந்த உமையத் பள்ளிவாசல் பகுதியில் இருந்து கிளரச்சியாளர்கள் வெளியேறியுள்ளனர்.

2012 ஆம் ஆண்டுக்கு பின்னர் அரச படை எப்போதும் இல்லாத அளவுக்கு கிழக்கு அலெப்போவில் வெற்றி வாய்ப்பை அதிகரித்துள்ளது. அலெப்போ நகர் வீழும் பட்சத்தில் ஐந்து ஆண்டுகளுக்கு மேல் நீடிக்கும் சிரிய உள்நாட்டு யுத்தத்தில் சிரிய கிளர்ச்சியாளர்களுக்கு பெரும் பின்னடைவாக அமையும்.

அலெப்போவில் யுத்த நிறுத்தம் ஒன்றை ஏற்படுத்துவதற்கு பாதுகாப்புச் சபையில் திங்களன்று கொண்டுவரப்பட்ட தீர்மானத்தின் மீது ரஷ்யா மற்றும் சீனா வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தியது.

கிளர்ச்சியாளர் வசமிருக்கும் பகுதி சில கிலோமீற்றர்களுக்கு சுருங்கி இருக்கும் நிலையில் அங்கு தொடர்ந்தும் ஆயிரக்கணக்கான மக்கள் சிக்கியுள்ளனர். அரச கட்டுப்பாட்டு பகுதியில் இருக்கும் ஐ.நா அதிகாரிகள் கிழக்கு அலெப்போவின் நிலை மோசமடைந்திருப்பதாக எச்சரித்துள்ளார்.

தொடர்ந்து போராளிகளிடம் இருக்கும் பகுதியில் உள்ள குடியிருப்பாளர் ஒருவரான அபூ யூஸப் என்பவர் குறிப்பிடும்போது, “எம்மீது கடுமையான ஷெல் குண்டுகள் விழுகின்றன. இங்கு படுகொலைகள் நிகழ்கின்றன. மின்சார வசதிகள் மற்றும் போதிய இணையதள வசதிகளும் இல்லை” என்றார்.

எனினும் நகரில் இருக்கும் கிளர்ச்சியாளர்களை வாபஸ் பெறும்படி சிரிய அரசு மற்றும் ரஷ்யா கோருகின்றன. அவ்வாறு வெளியேறும் அரச எதிர்ப்பாளர்களுக்கு பாதுகாப்பான வழிகள் ஏற்படுத்தி தரவும் சிரிய அரசு முன்வந்துள்ளது. கடந்த காலங்களிலும் இவ்வாறான நடைமுறையில் கிளர்ச்சியாளர்கள் முற்றுகை நகரங்களில் இருந்து வாபஸ் பெற்றமை குறிப்பிடத்தக்கது.

எவ்வாறாயினும் தாம் நகரை விட்டு வெளியேறப்போவதில்லை என்று கிளர்ச்சியாளர்கள் அமெரிக்க அதிகாரிகளிடம் உறுதியாக குறிப்பிட்டுள்ளனர்.

“நாம் வெளியேறுவதா அல்லது தொடர்ந்து தங்கி இருப்பதா என்பது குறித்து அமெரிக்கர்கள் எம்மிடம் கேட்டார்கள். ஆனால் இது எங்களுடைய நகர் நாம் அதனை பாதுகாப்போம் என்று குறிப்பிட்டோம்” என்று பஸ்தகிம் கிளர்ச்சி குழு சார்பில் பேசவல்ல சகரியா மலப்ஜி என்பவர் ரோய்ட்டர்ஸுக்கு குறிப்பிட்டுள்ளார்.

சிரிய யுத்தத்தில் முன்னாள் பனிப்போர் வல்லரசுகள் எதிர் எதிர் அணிகளுக்கு ஆதரவளித்து வருகின்றன. எனினும் சிரியாவில் ஜனாதிபதி பஷர் அல் அஸாத் அரசுக்கு ஆதரவாக ரஷ்யாவின் தலையீடு, ஈரான் மற்றும் லெபனான் ஷியா குழுவின் ஆதரவு ஆகியன அந்த தரப்புக்கு சாதகமான சூழலை ஏற்படுத்தியுள்ளது.

கிழக்கு அலெப்போவில் போராடும் மிதவாத கிளர்ச்சியாளர்களுக்கு மேற்குலகம் இராணுவ உதவிகளை வழங்குகிறது. எனினும் ரஷ்யா அஸாத் அரசுக்கு வழங்கும் உதவிகளுடன் ஒப்பிடுகையில் இது மிகக் குறைந்த அளவானதாக உள்ளது. 

No comments

Powered by Blogger.