Header Ads



இலவசமாக தொழிற் பயிற்சிகளை தொடர, இளைஞர்களிடமிருந்து விண்ணப்பம் கோரல்

(ஏ.எல்.நிப்றாஸ்) 

இலங்கை தொழிற்பயிற்சி அதிகார சபையின் கீழ் நாடெங்கும் அமைந்துள்ள தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிற்சிநெறிகளை தொடர்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. இதன்படி அம்பாறை மாவட்டத்தில் உள்ள தமிழ்மொழிமூலமான 09 தொழிற்பயிற்சி நிலையங்களில் 28 பாடநெறிகளுக்கு இளைஞர், யுவதிகள் தற்போது விண்ணப்பிக்கலாம் என நிந்தவூர் மாவட்ட அலுவலகம் அறிவித்துள்ளது. 

முதன்முறையாக எவ்வித கட்டணங்களும் இன்றி இலவசமாக கற்கைநெறிகளை தொடர முடியும் என்று தொழிற்பயிற்சி அதிகார சபை அறிவித்திருக்கின்றது. 2017ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்ட அறிக்கையின் 'திறன்; அபிவிருத்தி' எனும் உப தலைப்பின் 125ஆவது முன்மொழிவுக்கு அமைவாகவே, தொழிற்பயிற்சி நிலையங்களில் இலவசமாக கற்கைநெறிகளை தொடர்வதற்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. இதற்கான முயற்சிகளை திறன்கள் அபிவிருத்தி மற்றும் தொழிற்பயிற்சி அமைச்சர் மஹிந்த சமரசிங்க மேற்கொண்டார்.

அம்பாறை மாவட்டத்தில் தமிழ்பேசும் பிரதேசங்களில் அமைந்துள்ள நிந்தவூர் மாவட்ட தொழிற்பயற்சி நிலையம் மற்றும் சம்மாந்துறை, மத்தியமுகாம், காரைதீவு, பொத்துவில், அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு, சாய்ந்தமருது, திருக்கோவில் ஆகிய பிரதேசங்களில் உள்ள தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிற்சிநெறிகளை தொடர விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. பகுதிநேர பாடநெறிகளுக்கும் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும். இந்த பயிற்சிநெறிகளில் பெரும்பாலானவை என்.வி.கியு. எனப்படும் தேசிய தொழில் தகமை மட்டங்கள் 1, 3, 4, 5 இனை கொண்டதாக காணப்படுவதுடன், எல்லா பயிலுனர்களுக்கும் ஆங்கிலம் போதிக்கப்படும். பயிற்சியை பூர்த்தி செய்யும் மாணவர்களுக்கு மேலதிக களப் பயிற்சியும் மேலும் பல வழிகாட்டல்களும் வழங்கப்படும்.  

அதன்படி. அம்பாறை மாவட்டத்தில் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பவியலாளர் டிப்ளோமா, மின்னியலாளர், வாகன திருத்துனர், குளிரூட்டி மற்றும் வாயுச்சீராக்கி திருத்துனர், இலத்திரனியல், மரக் கைவினைஞர், செயலாண்மைப் பயிற்சி, உதவி கணிய அளவையியலாளர், தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பவியலாளர், தையல், ஆடைத் தொழிற்சாலை தரக்கட்டுப்பாட்டாளர், அலுமீனியம் பொருத்துனர், எலக்ட்ரிக் மோட்டர் வைண்டர், விடுதி அலங்கரிப்பாளர், பேக்கரி, உணவு பரிமாறுபவர், நிர்மாணக் கைவினைஞர், முச்சக்கரவண்டி திருத்துனர், நீர்க்குழாய் பொருத்துனர், உருக்கி ஒட்டுனர், அதிவேக தையல் இயந்திர இயக்குனர், ஆங்கிலம், சாரதிப் பயிற்சி போன்ற முழுநேர கற்கைகளுக்கு, பாடசாலைக் கல்வியை பூர்த்தி செய்தோரும் இடைவிலகிய இளைஞர் யுவதிகளும் விண்ணப்பிக்க முடியும். முழு நேர கற்கைகள் மூன்று, ஆறுமாத மற்றும் 01 வருட காலத்தை கொண்டவையாக காணப்படும். 

அதேபோன்று, இயந்திரப்பொறிமுறை, மொழிகள், தகவல் தொழில்நுட்பம், விருந்தோம்பல் போன்ற துறைகளில் என்.வி.கியு. மட்டம் 01 மற்றும் 03 கற்கைநெறிகள் பகுதிநேரமாக ஆரம்பிக்கப்படவுள்ளன. முழுநேர கற்கைநெறிகளுக்கான விண்ணப்ப முடிவுத் திகதி டிசம்பர் 25 என அறிவிக்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பில் அம்பாறை மாவட்ட உதவிப் பணிப்பாளர் ரீ.வினோதராஜா கருத்துத் தெரிவிக்கையில், 'இளைஞர், யுவதிகளின் நலன்கருதியே கற்கைகளை இலவசமாக வழங்குவதற்கு அமைச்சு நடவடிக்கை எடுத்தது. அதன்படி முதற்றடவையாக கட்டணம் எதுவும் இன்றி பயிற்சிகளை தொடர்வதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது. அனைத்து வருமான மட்டங்களில் வாழ்கின்ற இளைஞர்களும் தொழிற்பயிற்சி துறையில் கற்கையை தொடர்ந்து வாழ்வில் முன்னேற வேண்டும் என்ற உயரிய நோக்கின் அடிப்படையிலேயே இந்த ஏற்பாடு மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது. எனவே, இந்த சந்தர்ப்பத்தை இப் பகுதியிலுள்ள இளைஞர் யுவதிகள் சிறப்பாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்' என்றார். 

விண்ணப்பங்களை தொழிற்பயிற்சி நிலையங்களில் சமர்ப்பிக்கலாம் அல்லது உதவிப் பணிப்பாளர், மாவட்ட அலுவலகம், மாவட்ட தொழிற்பயிற்சி நிலையம், பிரதான வீதி, நிந்தவூர் என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க முடியும். 

No comments

Powered by Blogger.